சவாரி சைலர் சின்னத்தம்பி மகன் சவாரி மகேந்திரன் ஒரு வாழும் வரலாறு

சின்னத்தம்பி மகேந்திரன் அளவெட்டி வடக்கைச்சேர்ந்தவர், ஆறுபிள்ளைகளின் அப்பா, எழுபத்தொன்று வயதிலும் இருப்பத்தொன்று வயதிளைஞனைப் போல அவ்வளவு சுறுசுறுப்பு. நண்பர்களைப்போல சுற்றி எப்பொழுதும் நான்கு மாடுகள். மா, பலா, வாழை, வெற்றிலை, மாதுளை, தென்னை, பனை, நுங்கு, கரும்பு, பப்பாளி, வயல்வெளி, தோட்டம் தொறவு என்று இயற்கையோடு இணைந்து வாழும் மாபெரும் விவசாய ஆளுமை “சவாரி மகேந்திரம் அண்ணை”

பேச்சில் அவ்வளவு தெளிவு.வண்டில் மாடு பற்றியும், வண்டில் செய்ய எத்தனை வகையான மரங்கள் பயன்படுத்தப்படும் என எடுத்துரைத்த விதமும், உதைகிளிப்பற்றிய உபயோகத்தகவல் தந்த பாங்குமென, தன் வேலையில் அவருக்கு அவ்வளவு வேட்கை. மாட்டு வண்டில் சவாரிப்பயணத்தில் தான் பெற்றுக்கொண்ட பரிசில்கள்பற்றி பச்சிளம்குழந்தையாய் கூறி குதூகலித்த தருணமும் காண கண்கோடி வேண்டும். தன் உபசரிக்கும் உன்னத குணம் மற்றும் எப்போதும் மாறாத புன்னகை முகத்தாலும் அழகானவர். எல்லோரும் வாழ்ந்துப்பார்க்க ஆசைப்படும் வாழ்க்கை வாழ்பவர்.

ஆயினும் யுத்தவடுக்கள் வெகுவாய் பாதிக்கப்பட்ட ஆத்மாவாய் மூத்த மகனை காணாமல் போனோர் பட்டியலில் சேரக்குடுத்து இன்றளவும் விடுதி இல்லாத நிம்மதியற்றவராய், துணையாளை இழந்து, மாவீரர்களை குடும்பத்தில் உருவாக்கி, இன்று உயிரும் உணர்வும் உடம்பும் ஊரென வாழ்ந்து வரும் அளவெட்டி சவாரி மகேந்திரம் அண்ணையுடனான “வணக்கம் தாய்நாடு” நிகழ்ச்சியினைத் தந்த குழுவினருக்கு பாராட்டுக்கள்.

நிகழச்சியினூடாக, எவ்வளவு வளமிருப்பினும் எம்மக்களுக்கு “விடுதி” என்ற ஒன்று வாழ்வில் இல்லவேயில்லை. அவர்கள் நிம்மதியிழந்து நடுக்கடலில் இன்னும் தத்தளித்துக் கொண்டுத்தானிருக்கிருக்கின்றார்கள் என்னும் கூற்று நெஞ்சை நெருஞ்சிமுள்ளாய் தைக்கத்தவறவில்லை.

இவரைப்போன்ற புண்ணிய ஆத்மாக்களால் தான் உலகமின்னும் பூமிப்பந்தில் சிதிலமடையாமல் உள்ளது.

Advertisement

Comments are closed.