ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரம கோயில் மகா கும்பாபிஷேகம்

அளவெட்டி ஶ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரம வரலாறு யாழ்பாணத்து மாமுனிவர் சிவ யோகசுவாமிகளின் கொழும்புத்துறை ஆச்சிரமத்துக்கு 1949 ஆம் ஆண்டு வைகாசி தினத்தன்று ஒர் அமெரிக்க இளைஞர் வந்தார்.அவரின் வருகையை எதிர்பார்த்திருந்த யோகசுவாமிகள் அவருக்கு சுப்பிரமுனியசுவாமிகள் எனும் நாம தீட்சை அளித்தார் அவரே நமது குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள். தான் இலங்கைக்கு வந்து தங்கியிருந்த அளவெட்டி கிராமத்தில் சிவயோக சுவாமிகளின் ஆசியுடன் ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத்தினை ஸ்தாபித்தார். இன்று உலகளாவிய ரீதியில் சிவப்பணி ஆற்றிவரும் ஹாவாய் சைவ ஆதீனம், இமாலய கலைக்கூடம், இந்து பாரம்பரிய அறக்கட்டளை, Hinduism today பத்திரிகை ஆகியவற்றின் மூலஊற்று ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத்தில் இருந்தே ஆரம்பமாகியது. குருதேவரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து அளவெட்டி கிராமத்தில் தனது வீட்டில் வளர்பு மகனாக குருதேவரை ஏற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்து தமிழ் கலாச்சாரத்தை போதித்து சிவயோக சுவாமிகளை அறிமுகப்படுத்தியவர் கந்தையா செட்டியார் எனும் சைவப் பெரியார். ஆரம்பத்தில் சுப்பிரமுனிய ஆச்சிரமம் இவரது இல்லத்திலே செயற்பட்டுவந்தது. பிற்காலத்தில் கந்தையா செட்டியாரின் மகன் விநாயகமூர்த்தி செட்டியாரும் அவரது துணைவியார் சிவயோக அம்மையாரும் ஆச்சிரம கைங்கரியங்களை தொடர்ந்து நல்லமுறையில் நடாத்தி வந்தனர். 1967ஆம் ஆண்டு குருதேவர் 75அடியவர்கள் சகிதம் இலங்கை வந்து அளவெட்டி ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத்தில் தங்கியிருந்து அடியவர்களுக்கு ஆத்ம போதனையையும் ஆத்ம சாதனையையும் அருளினார். சில அமெரிக்க அடியவர்கள் அளவெட்டி ஆச்சிரமத்திலே தங்கியிருந்து ஆத்மீக பயிற்சியும் சமய பணியும் செய்து வந்தனர். 1967 இற்கு பின்பு வருடாவருடம் குருதேவர் இலங்கை இந்திய நாடுகளுக்கு தலயாத்திரை செய்தார். அத்தருணம் அளவெட்டி ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத்தில் தங்கி அடியவர்களுடன் ஆத்மசாதனையில் ஈடுபடுவார். 1972ஆம் ஆண்டு மார்ச்மாதம் 1ம் திகதி குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் தற்போது ஹாவாய் சைவ ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக இருக்கும் சற்குரு போதிநாத வேலன் சுவாமிகளுக்கு சந்நியாச தீட்சை வழங்கினார். அத்தோடு மேலும் பல அமெரிக்க துறவிகளுக்கு தீட்சை வழங்கினார். இந்த தெய்வீக நிகழ்வினை குறிக்கும் வகையில் அதே ஆண்டு ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத்தில் பசுபதீஸ்வரர் திருக்கோவிலை குருதேவர் ஸ்தாபித்தார். சற்குரு போதிநாத வேலன் சுவாமிகளை சிலகாலம் அளவெட்டி சுப்பிரமுனிய ஆச்சிரமத்தில் தங்கி ஆத்மசாதனை செய்யுமாறு பணித்தார். சற்குரு போதி நாத வேலன் சுவாமிகள் குருவின் அருள் ஆணைப்படி தினசரி கும்பிழாவளைப் பிள்ளையார் கோவில் மற்றும் நல்லூர் கந்தசுவாமி கோயில், கொழும்புத்துறை யோகர் சுவாமி சமாதித் திருக்கோயில், கைதடி மார்க்கண்டு சுவாமிகளின் ஆச்சிரமம், யாழ் சிவதொண்டர் நிலையம் ஆகியவற்றுக்கு சென்று வழிபாடு தியானம் ஆத்மசாதனை ஆகியவற்றை செய்து வந்தார். 1979ஆம் ஆண்டு குருதேவர் ஆச்சிரமத்திற்கு அருகில் 2மாடிகள் கொண்ட கட்டிடத்தினை கொள்வனவு செய்து அதில் சுப்பிரமுனிய ஆச்சிரமம் செயற்படத்தொடங்கியது. அப்புதிய ஆச்சிரமத்தை பரிபாலனம் செய்வதற்காக அளவெட்டி அடியவர்களைக் கொண்ட பரிபாலனசபை உருவாக்கப்பட்டது. முன்னர் சுப்பிரமுனிய ஆச்சிரமம் இயங்கி வந்த இடத்தில் தொடர்ந்தும் பசுபதீஸ்வரர் திருக்கோயில் நித்திய பூசை இடம்பெற்று வந்தன. சனி, ஞாயிறு தினங்களில் மாணவர்களுக்கு சமய, ஆங்கில வகுப்புக்கள், பண்ணிசை, சங்கீதம், மிருதங்கம், வீணை, பரதநாட்டியம், யோகாசனம் ஆகியவை இலவசமாக கற்பிக்கப்பட்டது. குரு பூசைகள் மற்றும் விசேட நாட்களில் அன்னதானமும் கிரமமாக நடைபெற்றன. வருடாவருடம் குருதேவர் அடியவர் சகிதம் ஆச்சிரமத்திற்கு வந்து தலயாத்திரை மற்றும் சமய சமூக பணிகள் ஆற்றி வந்தார். 1983ஆம் ஆண்டு தைமாதம் 5ஆம் திகதி, குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் 56ஆவது ஜெனனதினம் அளவெட்டியில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மாலை குருதேவர் பூசித்து வந்த ஸ்ரீ சாந்திலிங்க பெருமானை அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்து கோப்பாய் ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்டத்தில் பிரதிஷ்டை செய்தார். 1986ஆம் ஆண்டு நடைபெற்ற யூலை இனக்கலவரத்தின் பின்னர் குருதேவர் இலங்கைத்தமிழர் அகதி நிவாரணநிதி எனும் நிதியத்தை நிறுவி பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களுக்கு நிவாரண உதவி, வீடு கட்டிக்கொடுத்தல் என்பவற்றை செய்தார். இவ்வாறு அளவெட்டி கிராமத்தில் ஓர் ஆத்மீக சமய, சமூக ஸ்தாபனமாக செயற்பட்டு ஆயிரக்கணக்கான மாணவர்களை நல்வழிப்படுத்தி பெரியவர்களை ஆத்மீகத்தில் ஆற்றுப்படுத்தி வந்த ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமப் பணிகள் 86ஆம் ஆண்டு அளவில் போர்ச்சூழல் காரணமாக ஸ்தம்பிதம் அடைந்து 1987ஆம் ஆண்டு விமானக்குண்டு வீச்சில் ஆச்சிரமம் பலத்த சேதமடைந்தது. இதனால் மூன்று தசாப்பதங்களாக ஆச்சிரம பணிகள் தடைப்பட்டு இருந்தது. இருப்பினும் குருதேவரால் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரம பசுபதீஸ்வர ஆலய பூசைகள் தொடர்ந்தும் நடைபெற்று வந்தன. 2015ஆம் ஆண்டு; சற்குரு போதிநாத வேலன் சுவாமிகள் 32வருட இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் அளவெட்டிக்கு வந்து ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரம அறக்கட்டளை பணிகளை மீள ஆரம்பித்து வைத்தார். 2018, 2019 அடியவர் சகிதம் அளவெட்டிக்கு வந்து பசுபதீஸ்வரர் திருக்கோயிலின் திருப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். 2022ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் அடிக்கல் நாட்டப்பட்ட திருக்கோயில் இந்திய இலங்கை கலைஞர்களின் கைவண்ணத்தில் கலைக்கோயிலாக உருவாகி 2023 பங்குனி 13ஆம் நாள் மார்ச் 27 கும்பாபிஷேகம் காண்கின்றது.

Advertisement

Comments are closed.