பெருமாக்கடவை

பெருமாக்கடவை

பெருமாக்கடவை விநாயகர் ஆலயம்
அளவெட்டிக் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க விநாயகர் ஆலயங் களுள் பெருமாக்கடவை விநாயகர் ஆலயமும் ஒன்றாகும். கிழக்கே மல்லாகம் சுன்னாகம் கந்தரோடை ஆகிய கிராமங்களைத் தொட்டு நிற்கும் பரந்த பசுமையான நெல்வயல்கள் அவற்றின் மத்தியில் பனாக்கை பரவை போன்ற பெருங்குளங்களும் ஆலய முகப்பை அண்மித்து சதுர வடிவிலான புராதன செந்தா மரைத் தடாகமென ரம்மியமான ஓர் சூழலில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தின் பெருமை பல வரலாற்றுக் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. ஆலயத்தின் மேற்குப் புறமாக நித்திய பூஜைகளை மேற்கொள்ளும் பரம்பரை அந்த ணர்ககளின் இல்லங்களும் தெற்கே ஆலயத்தை ஸ்தாபித்து தொடர்ச்சியாகப் பரிபாலித்து வரும் மணியகாரன் பரம்பரையினரின் வழியுரிமை யான ஆதனங்களும் வடக்கே துர்க்கையம்மன் கோவிலொன்றும் அமைந்துள்ளன.

ஆலய நிர்மாண காலந்தொட்டு ஆலயத் திற்குப் புரோகிதம் செய்யும் இசை வேளா ளர்கள் வடக்கே உள்ள ஆதனங்களில் குடி யிருந்ததாகவும் அறியப்படுகின்றது. இவை யனைத்திற்கும் மேலாக இவ்வாலயச் சுற்றாடல் மா பலா வாழை தென்னை மரங்கள் செறிந்த பசுமைத் தோற்றமும் சுத்தமான காற்றோட்டம் உள்ளதாகவும் அமைந்துள்ளது.

ஆலய வரலாறு
முன்னொரு காலத்தில் பெருமாலியன் எனும் ஓர் அரங்கன் இந்த ஆலயம் அமைந்துள்ள – பணாக்கை – பரவை ஆகிய நீர்நிலைகளைத் தொடுக்கும் வழுக்கை யாற்றுப் பகுதியில் வயல்வெளிகளில் பயிர்களை நாசம் செய்து உழவர்களை வருத்தி ஆற்றின் குறுக்கே படுத்துக் கிடந்தான் எனவும் அதனால் ஆற்றின் போக்குத் தடைப்பட்டு வயல்களின் ஒரு பகுதி வரட்சியாலும் மறுபகுதி வெள்ளத்தினாலும் அழிந்ததாகவும் அதனால் வேதனை அடைந்த மக்கள் விநாயகக் கடவுளிடம் வேண்டுதல் செய்ததன் நிமித்தம் விநாயகப் பெருமான் தாமே நேரில் வந்து பயிர்களையும் மக்களையும் காக்கவென அரக்கனை கொன்றொழித்தார் எனவும் நிம்மதி பெற்ற மக்கள் விநாயகரை நினைவில் வைத்து சிற்றாலயம் ஒன்றை அமைத்து வழிபட்டதாகவும் பெருமாலியனின் ஆவி கடந்த இடமென்பதால் பெருமாக்கடவை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவோரும் உளர். பிரபல எழுத்தாளரும் பூகோளவியலாளருமான செங்கை ஆழியன் கலாநிதி க.குணராசா அவர்கள் 1960களில் சிரித்திரன் சஞ்சிகையில் எழுதிய “நடந்தாய் வாழி ! வழுக்கியாறு”எனும் தொடரில் இக்கதையினைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வட்டாரப் பகுதியில் அக்கால ஆட்சி யாளர்களின் கீழ் உயர் பதவி வகித்தவர்கள் அநேகர் குதிரைகளைப் பட்டியாக வைத்திருந்த காரணத்தினால் பெரிய குதிரைகள் அடங்கிய கடவை – பெருமாக்கடவை என அழைக்கப்பட்ட தாகவும் கூறுவர். இறுதியான காரணமாக ஓரளவு நம்பத்தகுந்த காரணம் ஒன்றும் கூறப்படுகின்றது. இப்பகுதி மக்கள் உயர் சாதிப் பின்னணி கொண்டாவர்களாகவும் ஆட்சிப் பணிகளிலும் ஏனைய கல்வித் துறைகளிலும் மேம்பட்டவர்களாகவும் விளங்கிய காரணத்தினால் பெருமக்கள் கடவை என அழைக்கப்பட்டு பின்னர் பெருமாக்கடவை என மருவியதாகவும் கூறுவர்.

இவ்வாலயம் பற்றிய வரலாற்று உண்மை களைப் பறைசாற்றும் பல உத்தியோகபூர்வமான ஆவணங்கள் உண்டு. அவற்றில் சில யாழ் அரச அதிபர் காரியாலயத்திலும் இலங்கை அரச கலாசாரத் திணைக்களத்தின் தேசிய சுவடிக் காப்பகத்தின் கண்டி காரியாலயத்திலும் யாழ்ப்பாணம் காணிகள் பதிவுத் திணைக் களத்திலும் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

1892இல் அந்நிய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் முகவராக இருந்தவரினால் சேகரிக்கப்பட்ட பதிவுகளின் பிரகாரம் இவ் வாலயம் பிள்ளையாருக்கான வழிபாட்டிடம் எனவும் அப்போது அமைந்திருந்த கட்டடத்தைக் கட்டியவரும் நிலத்தின் உரிமையாளரும் வீரகத்தியர் முருகேசு உடையார் எனவும் ஆலயம் கல்லினால் கட்டப்பட்டு கிடுகினால் வேயப்பட்டதெனவும் தெரிய வருகின்றது. மேலும் இப்பதிவு மேற்கொண்ட காலத்தில் ஆலய முகாமையாளரும் உரிமையாளரு மாக அம்பலவாண முதலியார் சின்னத்தம்பர் மணியகாரர் விளங்கியதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

சின்னத்தம்பர் மணியகாரரின் தந்தை யாரான அம்பலமணியம் என அழைக்கப்பட்ட அம்பலவாண முதலியார் ஆலயத் தாபகர் வீரகத்தி முருகேசு உடையாரின் மகனாவார். 1840 முதல் 1869 இல் இறக்கும்வரை காங்கேசன்துறை வீரமாணிக்க தேவன்துறை தொடக்கம் தாவடி வரையிலான பிரதேசத் திற்கு மணியகாரராகவும் 17 உடையார் பிரிவுகளுக்கு மேலதிகாரியாகவும் விளங்கிய இவரின் சேவையை ஆங்கிலேய ஆட்சியாளர் கௌரவித்து “இராஜகாரிய – சிங்கை ஆரிய” அம்பலவாண முதலியார் என அழைத்தனர். இவரின் காலத்திலேயே ஆலய விஸ்தரிப் புக்கள் திருக்குள அமைப்பு என்பன இடம்பெற்றன. முற்குறிப்பிட்ட ஆவணத்தின்படி ஆனி மாதத்தில் பத்துத் திருவிழாக்களும் ஐப்பசியில் கந்தசஷ்டி 6 நாட்களும் மார்கழித் திருவெம்பாவை 10 நாட்களும் நியம உபயங் களெனவும் வருடத் திருவிழாவின்போது சுமார் 400 பேர் சமுகமளிப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் திருவிழாக்களின்போது சுவாமி வலம்வரும் பாதை திருவிழாவின் போது பிரசன்னமாயிருக்கக்கூடாதவர்கள் குழப்பம் விளைவிக்கக்கூடியவர்களென அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டவர்களின் பெயர்கள் போன்றவையும் அவ்வாவணங் களில் இடம்பெற்றிருந்தன.

இவ்வாலயம் ஓர் தனிப்பட்ட நம்பிக்கைச் சொத்தாகும். ஆலயத் தாபகரான வீரகத்தியர் முருகேசு உடையாரின் ஆண் சந்ததியினர் வழிமுறையாகப் பின்வரும் ஒழுங்குமுறையில் பரிபாலனம் செய்து வந்துள்ளனர்.
1) வீரகத்தியர் முருகேசர்
2) இராஜகாரிய – சிங்கை ஆரிய அம்பல வாண முதலியார்
3) சின்னத்தம்பர் மணியகாரர்
4) சின்னத்தம்பர் கந்தையா மணியகாரர்
5) கந்தையா நடராசா மணியகாரர்
6) தற்போதைய மணியகாரர் நடராசா சிவராஜா

இவ்வாலய பரிபாலன உரித்தானது ஆண் வழி ஆண் வழியாக முறையாகப் பின் வைத்துச் செல்லவேண்டுமெனவும் வேறெ வருக்கும் மாற்றமுடியாததும் பராதீனப் படுத்தப்பட முடியாதெனவும் பத்திரங்களில் உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலய அசையும் அசையா ஆதனங்கள் தொடர்பில் பேணவும் முடிவுகள் எடுக்கவும் உபயங்கள் தொடர்பில் முடிவுகள் மேற்கொள்ளவும் அந்தணர்களை நியமிக்கவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேறு பதிலாட்களை நியமிக்கவும் மணியகார னுக்குப் போதிய உரித்துள்ளது.

இவ்வாலயமானது கற்பக்கிருகம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் துவஜஸ்தம்ப மண்டபம் வெளி மண்டபம் போன்றவற்றோடு கூரை வேயப்பட்ட உட்பிரகாரத்தையும் மடப்பள்ளி குருக்கள் அறை களஞ்சிய சாலை நால்வர் மண்டபம் வாகனசாலை வசந்தமண்டபம் யாகசாலை போன்ற வற்றுடன் பரிவார மூர்த்திகளாக வைரவக் கடவுள் சுப்பிரமணியர் போன்ற உட்பிரகாரக் கோவில்களையும் துவஜஸ்தம்பம் நந்தி பலிபீடம் போன்றவற்றையும் கொண்டுள்ளது. மூலவர் விக்கிரகம் அமர்ந்த நிலையிலுள்ள கருங்கல்லினாலான சிலையாக உள்ளது. சகல அரச ஆவணங்களிலும் பிள்ளையார் கோவில் என்றே குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் பலராலும் சித்திவிநாயகப் பெருமான் என்றே அழைக்கப்பட்டு வருகின்றார். ஆனாலும் கோவில் சம்பந்தமான பாடல்களிலும் ஊஞ்சல் பாட்டு போன்றவற்றிலும் ஏரம்ப விநாயகனே அல்லது ஏரம்ப வள்ளலே என விழிக்கப்படு கின்றது.

அந்தணர் பரம்பரை
இவ்வாலய நிர்மாண காலத்திலேயே ஸ்தாபகர்களான மணியகாரர்கள் தென் னிந்திய நகரங்களான தஞ்சாவூர் கும்ப கோணம் போன்ற பகுதிகளிலிருந்து ஆசார மும் தேர்ச்சியும் பெற்ற அந்தணர்களை அழைத்து வந்து அவர்களுக்குரிய இல்லங் களையும் வருமானம் தரும் தோட்டங்கள் வயல்களையும் தரும சாதனம் செய்து பூஷகர்களாக நியமித்தனர். அவர்களின் பரம்பரையினரே இன்றும் தொடர்ச்சியாக ஆலய பூசைக் கருமங்களை நடாத்தி வருகின்றனர். முன்னாள் வித்யாதரிசி முகாந்திரம் தி. சதாசிவஐயர் அவர்கள் இவ்வாலயப் பரம்பரையில் வந்தவராவார். பிள்ளையார் மேல் அநேக பதிகங்களை அவர் பாடியுமுள்ளார். தருமசாதனமாகக் கிடைத்த நிலபுலன்களினால் வரும் வருமானத்தையும் நித்திய பூசை வருமானத்தையும் மட்டுமே வேதனமாகக் கொண்டு ஆலய பூசை முறைகளை இவ் அந்தணர்கள் முறையாக நடாத்தி வருவது சிறப்பானது.

நித்திய நைமித்தியங்களும் விசேட உற்சவங்களும்
ஆரம்பம் தொட்டு இவ்வாலயத்தின் நியம நைமித்தியங்களாக வருட மகோற்சவம் பத்து நாட்கள் கந்தஷஷ்டி 6 நாட்கள் மற்றும் திருவெம்பாவை 10 நாட்கள் என்பனவே இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் படிப்படியாக இந்நிலை மாறி பன்னிரு மாதங்கள் தோறும் இரு பட்ச சதுர்த்தித் திருவிழாக்கள் சிவராத்திரி தைப்பூசம் பங்குனி உத்தரம் சித்திராப் பௌர்ணமி வைகாசி விசாகம் ஆனி உத்தரம் திருஞான சம்பந்தர் குருபூசைஐப்பசி வெள்ளி திருக்கார்த்திகை மானம்பூ பிள்ளையார் கதை போன்றவை மேலதிக உபயங்களாக நடாத்தப்பட்டு வருகின்றன. பொருத்தமான நேரங்களில் புராண படனமும் இடம்பெறு கின்றது. கந்தசஷ்டியைத் தொடர்ந்து திருக் கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது

முக்கிய புனர்நிர்மாணங்கள்
ஆலய கர்ப்பக் கிரகம் ஆலய மணிய காரர்களால் கல்லினால் அமைக்கப்பட்டது. அது போன்றே வைரவர் மூலஸ்தானமும் பழங்கால கட்டட முறையில் அமைக்கப்பட்டு மணிக்கூடு துவஜஸ்தம்பம் போன்றவை அவர்களாலேயே அமைக்கப்பட்டது. ஆலய முன்பாக உள்ள தாமரைத் தடாகம் அம்பல வாண முதலியாரால் அமைக்கப்பட்டது. ஆலயத்தின் மடப்பள்ளி அதைத் தொடுக்கும் உட்பிரகார மண்டபம் மணியகாரர் பரம் பரையின் பெண்வழி உரித்துடைய செண்பக வரதர் சபாரட்ணம் அவர்களாலும் மகா மண்டபம் அருணாசல உடையார் குடும்பத்தி னராலும் மூலஸ்தான விமானம் று.ஆ. குமாரசுவாமி குடும்பத்தினராலும் மேற் கொள்ளப்பட்டன. 1968 1982 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஆர்வமுள்ள அடியவர்கள் ஊர்மக்கள் போன்றோரின் மனமுவந்த ஒத்துழைப்புடன் ஆலயத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிடேகம் நடாத்தப் பட்டது.

தகவல் – ஆலய பரம்பரை உரித்தாளர்