எனக்குப் பயமாய்க்கிடக்குது.

ஒருகாலத்திலை சரியெண்டு சொல்லப்பட்ட விசயம் இன்னொரு காலத்தில் பிழையாய் கேவலமானதாய் பேசப்பட்டிருக்குப்பிள்ளை. அஞ்சுபேருக்கு ஒருபொம்பிளை பெண்சாதியாய் இருந்ததைச் சரியெண்டு சொல்லியும் கதை வந்திருக்கு. ஒருத்தனுக்கு ஒருத்தி என்றும் ராமர்சீதை கதை இருக்கு. இரண்டும் அந்தந்தக்காலத்துக்குச்சரி. காலம் மாறமாற நியாயங்களும் மாறும். இதுதான் சரியென்டு நிரந்தரமாய் ஒண்டும் இல்லைப் பிள்ளை. நீ ஒண்டைப் பற்றியும் யோசிக்காதை. இஞ்சை நாங்கள் உயிரோட இருக்கிறது தான் பெரிய விசயம்.’

நலன்புரிமுகாமில் இருந்து  முதற்கட்டமாக அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டபோது விடுதலையாகிச்சென்றுவிட்ட இந்த தத்துவ வரிகளுக்குச் சொந்தக்காரியான ‘மணியாச்சி’யின் நினைவு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.

 

படிப்பறிவு குறைவு என்றாலும் உலகஅனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடத்தால் வாழ்க்கை பற்றிய ஒருதெளிவும் எந்தப்பிரச்சினைக்கான தீர்வும் ஆச்சியிடமிருந்தது. அறுபது வயது தாண்டியும் ஆச்சியால் எல்லாவேளையிலும் தெளிவாக சிந்திக்க முடிந்தது. ஆச்சி எங்களைவிட்டுப்போய் ஏறக்குறைய ஒருவருடம் கடந்து விட்டது. இப்பொழுதும் கூட இருந்திருந்தால் இந்தப்பிரச்சினைகளுக்கெல்லாம் சரியான தீர்வு சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.

 

ஜெயபுரத்தில் தொடங்கி வட்டுவாகல்வரை நாங்கள் ஓடிய மரதன் ஓட்டத்தில் இடையில் இணைந்து கொண்டவர்தான் மணியாச்சி;. இந்தப் பயணத்தில் இடை நடுவே பிரிந்தவர்களின் கதைகளையும் சொல்லாமல் விட்டுவிட முடியாது. ஜெயபுரத்திலிருந்து கிழக்கு நோக்கிப் புறப்பட்ட பயணத்தில் எனது கணவர் சரவணன் என்னையும் இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டுப் போய்விட்டார். அவராகப் போகவில்லை. எங்கோ இருந்து வந்த எறிகணை கொண்டு போய்விட்டது. அந்த எறிகணைக்கு உரிமையாளர் யார் எண்டு விவாதம் நடத்தும் மனநிலையில் இப்போதும் நான் இல்லை.

மரணங்கள் மலிந்தபூமியாய் மாறிப்போயிருந்த அந்தப்பிரதேசத்தின் அப்போதைய கணங்களில் பெரும்பாலும் மரத்துப்போன மனங்கள்  மரணத்திற்காக அதிகநேரம் அழுவதில்லை. அதற்கு நேரமும் இல்லை. எங்களுக்குப்பின்னால் நாய் கூட ஊரில் தங்காது என்ற நம்பிக்கையோடு மரணித்தவர்களை மணலில் புதைத்துவிட்டு கால்போன திசையில் பயணம் தொடர்ந்தது. அந்தக்கவலைக்கு ஆறுதல் சொன்ன யாரோ ஒரு மனுஷிதான் இந்த மணியாச்சி. என்னுடைய குடும்பம் மட்டுமல்ல என்னைப் போல பலரின் குடும்பங்களும் குறைந்தது ஒருவரையாவது பாதையில் பலி கொடுத்து விட்டுத்தான் வரமுடிந்தது.

 

செட்டிக்குளம் முகாமிலிருந்து படிப்படியாக ஆட்கள் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். நாங்களும் வீட்டுக்குப்போகலாம் என்ற நம்பிக்கை வரத்தொடங்கியது. செட்டிக்குளத்திருந்து பஸ்ஸிலேற்றி ஜெயபுரத்தில் கொண்டுவந்து  இறக்கியபோது இழந்தது எல்லாம் திரும்பக்கிடைத்துவிட்டது போன்ற உணர்வு சிலருக்கு.

 

போகேக்கை நடந்து போனனாங்கள்

 இப்ப பஸ்ஸிலை கொண்டு வந்து விட்டிருக்கினம்

என்று முதியவர் ஒருவர் அந்தவேளையிலும் இடமறியாமல் பேசி வெறுப்பேற்றினார்.

இங்கிருந்து பயணத்தை ஆரம்பித்தபோது

எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ரை பிள்ளையளுக்கும்

 உனக்கும் ஒண்டும் நடக்கக்கூடாது

என்று சொன்னபடி பயணத்தை ஆரம்பித்த சரவணனை அவர் ஆசைப்பட்டபடியே எங்களுக்கு எதுவும் நடக்காமல்  பாதையில் பறிகொடுத்து விட்டு கனத்தமனமும் வெறுங்கையுமாய் திரும்பி வந்திருக்கிறோம். மீள் குடியேற்றத்திற்காக ஜெயபுரத்திற்கு அழைத்து வந்தபோது வீட்டை போனால் காணும் எனும் மனநிலை இருந்தது. இங்கு வந்த பின்னர் இந்த வெறுமையின் வெம்மை தாங்க முடியவில்லை.

மீள் குடியேற்றமென்று கூட்டி வந்து விட்டிருக்கினம். வீடு இருந்த இடத்தில் மேடு கூட இல்லை. தகரம், சீமெந்து, பிளாஸ்ரிக் தறப்பாள் தந்திருக்கினம். ஒரு சைக்கிளும் தந்தார்கள். வீட்டிற்கு வந்தபோது எங்களுக்கு முன்பாகவே வந்து பிரச்சினை வீட்டுவாசலில் காத்திருந்தது. எங்கள் வீட்டுவாசலின் எதிர்புறமாக வீதியின் மறுகரையில் உயரமாக காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி எங்களைப்பாதித்துவிடாமல் இருப்பதற்காக இரண்டுபேர் அதில் எப்போதும் காவலிருந்தனர். நாங்கள் குடியேறிய ஆரம்பநாட்களில் எங்களோடு எந்தவிதமான பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை.

 

சிலஉறவினர்கள் உதவியோடு மீள் குடியேற்றமென்று தந்ததகரத்தையும் பிளாஸ்ரிக் தறப்பாளையும் பாவித்து வீடொன்றும் அமைத்தாயிற்று.

பாவம் புருசனில்லாத பிள்ளை சின்னப்பிள்ளையளோடை கஸ்டம்

என்ற உணர்வோடு உதவிய உறவுகளும் நண்பர்களும் எப்போதும் கூடவே இருக்கமுடியாதல்லவா…. நானும் இரண்டு பிள்ளைகளும் தனித்த குடித்தனம். மரத்துப்போன மனம் என்பதால் பயஊசிகள் அதிகம் நுழையமுடியவில்லை. போதாததற்கு வாசலில் காவலுக்கிருப்பவர்களுக்கு அடிக்கடி தண்ணீர், தீப்பெட்டி, வெங்காயம் போன்றவைகள் வினியோகம் செய்யும் உரிமையும் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

 

ஆறுவயதேயான எனது மகன் பவித்திரனும், அவனிலும் இரண்டு வயது குறைந்த தமிழ்வாசனும் பாஷை தெரியாமல் அவர்களோடு எப்படிக்கதைக்கிறார்கள்? என்னகதைக்கிறார்கள்? என்று எனக்குப்புரியவேயில்லை. ஆனால் நாளாந்தம் கதைக்கிறார்கள். நான்வீட்டுவேலைகள் சமயல்வேலைகளில் ஈடுபடுகிறநேரத்தில் எல்லாம் வாசலில் நிற்கிற சிப்பாய்கள் இரண்டு பேரும் அவர்களைக்கூப்பிட்டு வம்பளக்கிறார்கள்.

எங்கடை குருவிக்கூட்டைக்கலைச்சு வாழ்கையை சின்னாபின்னப் படுத்தினவங்கள்.இப்ப குழந்தையளுக்கு செல்லம் காட்டிறாங்கள் இப்பிடி எத்தினை குருத்துகள் நாங்கள் ஓடினபாதையிலை கருகிப்போனதுகள்‘;.

சேகரண்ணாவின் மனைவி ஆனந்தியக்காவின் வார்த்தைகளில் என்னுடைய மனதில் கொழுந்துவிட்டெரிகிற கோபத்திற்கு சமமான உணர்வு இருந்ததால்.

ஓமக்கா இதுகளும் போய் அவங்களோடை செல்லம் கொஞ்சுதுகள். இதிலை ஆகமோசம் அவங்களிலை மணக்கிற சிகரட் புகை நெடி இங்கினை தண்ணி,தீப்பெட்டி எண்டு வரேக்கை ஏனோ தெரியாது உந்தப்புகைமணத்திலை எனக்கு வயித்தைப்பிரட்டும்

என்று ஆமோதித்தேன். உண்மையும் அதுதான். ஏனோ தெரியவில்லை இவங்களைக் காணுகிறபோதெல்லாம் சரவணனின் நினைப்புத்தான் வருகிறது. என்னுடைய எட்டு வருடகாலகல்யாண வாழ்க்கையில் ஒருநாள்கூட சரவணன் குடித்ததில்லை,புகைத்ததில்லை.இந்தவிடயங்களைப்பற்றி ஒருநாள் கூட நாங்கள் கதைக்கவில்லை. இப்போதுதான் நினைக்கிறேன்.எப்போதாவது குடித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆசையாவது சரவணனிடம் வந்திருக்குமோ? தெரியவில்லை. இனி யாரிடம் கேட்பது?

என்ரை பிள்ளையளையும் தகப்பனைப்போலை ஒழுக்கமான மனிசராய்,

அன்பான மனிசராய் வளர்த்துப்போடவேணும்.’

சேகரண்ணாவிடம் அடிக்கடி நான் சொல்லுகிற எனது ஆசை இதுதான்.

வாசலில் உள்ள காவலரணில் நிற்கும் ஒருவன் பெயர் ‘தனபால’ பவித்திரன் இப்போதெல்லாம் அவனைப்பெயர் சொல்லித்தான் கூப்பிடுகிறான். எனக்கு ஏனோதெரியவில்லை அவனைக்கண்டாலே ஒருவித வெறுப்பும் இனம்புரியாத கோபமும் வருகிறது. என்னுடைய கோபம் ஆத்திரம், இயலாமை இதையெல்லாம் அவன் மீது காட்ட முடியவில்லை. கோபப்படுவதற்கு தெம்பு, பலம் மட்டுமல்ல உரிமையும் கூட வேண்டும். என்பதால் அவன் மீதுள்ள கோபத்தை எனது மகன் மீது திசைமாற்ற வேண்டியதாயிற்று. அவன்கொடுத்த கச்சான் அல்வாத்துண்டொன்றை பவித்திரன் வாங்கிச்சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருஞாயிற்றுக்கிழமை

டேய் பவித்திரன் வாடா இஞ்சாலை சனியன்.

ஆர் தந்தாலும் வேண்டி நக்கிற பழக்கத்துக்கு நொருக்கி போடுவன்

என்னுடைய கூச்சலை தனபால எதிர்பார்க்கவில்லை. எனது கூச்சல் எனக்குக்கூட அதிசயமாயிருந்தது. மொழி புரியாவிட்டாலும் என்னுடைய உணர்வுகள் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். பிள்ளையைப் போகும் படி கைகாட்டி விட்டு வீதியின் மறுபக்கமாக நின்ற மர நிழல் நோக்கிப் போவது தெரிந்தது. அதற்கு மேல் அவனைக் கவனிக்க வேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை.

கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே என்கிற ஏக்கம் பவித்திரனின் முகத்தில் தெரிந்தது. நான் சுமந்து பெற்ற பிள்ளைக்காக மனதின் ஒரு புறத்தில் இரக்கம் கசிவதை உணர முடிகின்றது. ஆனாலும் என்னுடைய ரௌத்திரம் அடங்கவில்லை. விரக்தியோ, கோபமோ விபரிக்க முடியாத உணர்வு அவன்கையிலிருந்த அல்வாத்துண்டை பிடுங்கி வீசிவிட்டு கையில்கிடைத்த ஒரு தடியால் என் கை சலிக்கும் வரை விளாசி விட்டேன். அன்றைக்குப் பவித்திரன் கதறிய கதறல் இன்றைக்கும் என்னைக் கண்ணீர் சிந்த வைக்கிறது.

                ‘அப்பா, அப்பா… … … … என்று அவன் கதறிய அந்தக் கணங்கள் என் சாவு வரை மறக்க முடியாதவை. திரும்பியே வரமுடியாத பயணம் போய்விட்ட தந்தை இருந்திருந்தால் தான் இப்படித் தண்டிக்கப்பட்டிருக்க மாட்டேன் என்னும் அந்தப் பிஞ்சின் ஏக்கம் என்னை இரவிரவாகக் கதற வைத்தது. சரவணன் உயிரோட இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. உயிரோடு இருந்தவரையில் ஒருநாள் கூட பிள்ளைகளையோ என்னையே அடித்தது கிடையாது. யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஊறிப்போன எனது குடும்பத்தாரின் மேட்டுக்குடிச்சிந்தனையில் சரவணன் தாழ்ந்த மனிதனாக இருந்திருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் உன்னதமான கணவராக, உயர்வான தந்தையாக தன்னுடைய கடைசிப் பயணம் வரை இருந்தவர்.

இதுநடந்து இரண்டு நாட்களின் பின்

அக்கா அக்கா கொஞ்சம் வாங்க

என்று யாரோ கூப்பிடுவது கேட்டு தறப்பாள் கூடாரத்துக்கு வெளியேவந்து பார்;த்த போது கையில் கடதாசியில் சுற்றப்பட்ட ஏதோ பொருளுடன்

 ‘அக்கா இது மிரிஸ் இருக்கா கொஞ்சம் சம்பொல் செய்து தாறது.’

என்றபடி தனபால நின்றான். மிளகாய்ச்சம்பல் இடித்துத் தரச்சொல்லி கேட்கிறான். என்பது புரிந்தது. உள்ளே மனம் மறுப்பதற்கான மார்க்கத்தை தேடிக்கொண்டிருந்தது.

 ‘எங்களிட்டைத் தேங்காய் இல்லை. சம்பல் இடிக்கேலாது

 என்ற பதிலுக்கு தயாராகவே இருந்தவன்போல

 ‘சரி சரி நாங் தேங்கா தாறங்

என்றபடி மிளகாய்ப் பொதியை என்னிடம் நீட்டினான். உரல் இல்லை என்று சொல்ல நினைத்த போது காலையில் சம்பலிடித்த உரல் முற்றத்தின் ஓரமாக கண்ணிற்பட்டது. வீட்டுக்கு முன்பாக ஒவ்வொருநாளும்; நிற்பவன் காலையில் சம்பலிடித்ததையும் கட்டாயம் கண்டிருப்பான். சரி என்று வாங்கிக் கொண்டேன்.

அரைமணித்தியாலத்தில் பத்துப்பன்னிரண்டு உரிக்காத தேங்காய்களோடு இன்னொருத்தன் கூட வந்தான். ஒரு உரப்பையில் போட்டு;கொண்டு வந்த தேங்காய்களை முற்றத்தில் கொட்டினான். இவன் தேங்காய் கொண்டுவருவான் என்று எதிர்பாராமல் சலித்தபடியே நான் சம்பலை இடித்து முடித்திருந்தேன்.. 

எங்களுக்கு உங்கடை தேங்காய் தேவையில்லை.

உங்களுக்குச் சம்பலுக்குத்தான் தேங்காய் கேட்டனான்.

உதை நீங்களே கொண்டு போங்கோ

என்றேன். அவனுக்கு விளங்கியிருக்க வேண்டும்.

சரி சரி அக்கா. நீங்களுக்கு கோபம் இல்லை. இது தேங்காய் நீங்களுக்கு என்றான்.

கொண்டுவந்த பாத்திரத்தில் சம்பலைப் போட்டுக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு போய்விட்டான். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அக்கா என்ற குரல் கேட்டது. எட்டிப்பார்த்த போது கையில் இரண்டு சாப்பாட்டுப் பார்சலுடன் முற்றத்தில் திரும்பவும் நின்றான்.

என்ன என்ன வேணும் வேண்டுமென்றே குரலைக் கடுமையாக்கியிருந்தேன்.

என்னோடு கூட நின்ற பவித்திரனிடம்

தம்பி சாப்பிடுங்க

என்று பாசலை நீட்டினான்.

எங்களுக்கு வேண்டாம். நீங்கள் கொண்டு போங்கோ‘.

என்னுடைய மறுதலிப்பை அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

தம்பி சாப்பிடுங்க அம்மாட்டத் தென்ன

என்று பவித்திரனின் கையில் பார்சலைத் திணித்தான்.

பவித்திரன் என்னைப் பாத்த பார்வையில் இரண்டு நாட்களுக்கு முன் வாங்கிய அடியின் வலி தெரிந்தது.

அம்மா கஹன்னே நா. தம்பி சாப்பிடுங்க‘.

என்று பார்சலைத் திணித்துவிட்டு சிறிது தூரம் நடந்தவன் திரும்பி ‘அக்கா’ என்றான். கடந்த காலத்தின் கனத்த நினைவுகளை இன்னும் கலைத்து விடாத மனது ஏதோ அபாயத்தை எடைபோட்டது.

நீங்களுக்கு அண்ணா எங்க?  என்ற கேள்வியோடு ஊடுருவிப் பார்த்தான்.

அவரைத் தானே துலைச்சுப் போட்டியள்;. இதுகளைத் தேப்பன் இல்லாத

 பிள்ளையளாக்கிப் போட்டு இப்ப சுகம் விசாரிக்கிறியள்.’

மனதில் பயம் இருந்தாலும் அது பதிலில் பதியாமல் பார்த்துக் கொண்டேன்.

அவன் முகத்தில் உண்மையிலேயே அனுதாபம் தெரிந்தது. பவித்திரனைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு மீண்டும் அவனை நெருங்கினான்;. நான் விலகிக் கொள்ள பவித்திரன் பயத்தில் மீண்டும் என்னுடன் ஒட்டிக் கொண்டான்.

அக்கா தம்பி பிஸ்கட் சாப்பிடுங்க என்று ஆயிரம் ரூபா காசை எடுத்து நீட்டினான்.

வேண்டாம், வேண்டாம், காசு வேண்டாம். தம்பி வாங்காதை

                என்று பவித்திரனை அதட்டினேன். எங்கள் வேதனைகள் இவர்களின் காசாலோ பரிதாபத்தாலோ மறைந்து விடக்கூடியதல்லவே. ஆனாலும் அவர்களின் பாசமும் பரிதாபமும் தொடரத்தான் செய்கிறது.

‘சேகரண்ணா’ சரவணனுடைய நண்பராக எனக்கு அறிமுகமான காலத்திலிருந்து சரவணன் இறப்பு வரையிலும் எங்களின் எல்லாவிடயங்களிலும் கூடஇருந்தவர். சரவணன் இறந்தபோது எல்லாக்காரியங்களையும் அழுதபடி முன்னின்று செய்தவர். நாங்கள் மீளக்குடியேறியபோதும் காணிதுப்புரவு செய்ததும் வீடுகட்டியதும் அவர்தான்

தங்கைச்சி மங்களம்

என்று வாஞ்சையோடு அழைக்கின்ற போது எனக்கு சொந்த அண்ணன் இல்லாத குறை தீர்ந்துவிடும்.

இப்பொழுது சிறிது காலமாக அவருடைய பார்வையும் பேச்சும் அவ்வளவு நல்ல விதமாகப்படுவதில்லை. இடையிடையே சிலநாட்கள் வாயைக் கைகளால் மூடிக்கொண்டு கதைக்கிறபோது சாராயம் மாதிரியான ஒருஅருவருப்பான வாடையடிக்கிறது.

உங்கடை வீட்டிலை கனநேரம் மினக்கெட்டால் வீட்டை மனிசியிட்டை பேச்சு வாங்க வேணும்.பேச்சு வாங்கினாலும் பரவாயில்லை அந்தளவுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்குதோ எண்டால் அதுகுமில்லை.’

என்று சொல்லிவிட்டு அவர் சிரித்த சிரிப்பிலும் அந்தப் பார்வையிலும் சகோதர வாஞ்சை சத்தியமாய் துளிகூட இல்லை.

சரியண்ணா போயிட்டுவாங்கோ நானும் விதானையாரிட்டை ஒருக்காப் போகவேணும்

என்று பேச்சைத் திசை மாற்றினேன்.

ஓம் பிள்ளை விதானையாரோடை கதைப்பியள், ஆமி கதைகேட்டால் கதைப்பியள்நாங்கள்தான் இப்ப கூடாமல் போயிட்டம் ……………..

என்று கதை தொடங்கி ஒருகட்டத்தில் குழந்தை போல அழத்தொடங்கிவிட்டார்.

நான் இதை சேகரண்ணாவிடம் எதிர்பார்க்கவில்லை.அதிர்ந்து போய்விட்டேன்.

ஆரண்ணா உங்களைக்கூடாது எண்டு சொன்னது.

நீங்கள் போட்டு நாளைக்கு வாங்கோ மிச்சம் கதைப்பம்

பிரச்சினையைத் தற்காலிகமாக தீர்க்க முடிந்தது.

நாளைக்கோ? நாளைக்கு கட்டாயம் வரட்டோ

சேகரண்ணா எதிர்பார்த்த நாளை என்பது என்னவென்று அவர்பேச்சில் புரிந்தது.

ஓமண்ணா நீங்கள் போட்டு நாளைக்கு வாங்கோ ஓருவாறு அவரை அனுப்பியாயிற்று.அவர் எதிர்பார்க்கும் அந்த நாளை என்பது அவருக்கு இன்னும் வரவேயில்லை.ஆனால் நந்தனார் போல நாளை என்பதற்காகவே  தவறாமல் ஒவ்வொருநாளும் இந்த தங்கையிடம் நலம் விசாரிக்க வருகிறார்.வந்து போகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கிறது.பாவம் நிறைய உதவி செய்த மனிசன். ஏன் இப்படி மாறிப்போனார் என்று மனது கனக்கிறது.

இப்போதெல்லாம் சிகரட்புகை நெடியும் மதுவாடையும் பழகிப் போய்விட்டது. அனுசரித்துப் போகும் அளவுக்கு மனம் மரத்துப் போய்விட்டதோ? பழகிப் போய்விட்டதோ? தெரியவில்லை. தனபாலவைக்கண்டால் கூட பழையமாதிரி கோபம் வருவதில்லை. பாவம் அவங்களும் சம்பளத்துக்கு வந்து அரசாங்கம் சொன்னதைச்செய்யிறாங்கள். சண்டையிலை செத்துப்போன அவங்கடை குடும்பங்களும் எத்தினை எங்களைப்போல வேதனைப்படுகுதுகளோ? என்று மனம் இரண்டாகப் பிரிந்து நின்று விவாதம் நடத்துகிறது. போதாததற்கு மணியாச்சியின் உபதேசம் வேறு மண்டையைக்குழப்பிக்கொண்டிருக்குது.

இந்தமண்ணில் எல்லாமே மாறிப்போய்விட்டது. மனிதர்கள் மாறிவிட்டார்கள்.வாழ்வும் ஒழுக்கமும் வழித்தடம்மாறிப்பயணிக்க எத்தனிக்கிறது. இருபது வருடங்களுக்கும் மேலாக இரும்புப்பூண்போட்டுப் பாதுகாத்த கலாசாரக்குமிழிகள் காலக்காற்றுப்பட்டு உடைந்துவிடும் போலிருக்கிறது. சட்டக்கட்டுப்பாடுகள் சிதறிக்கிடக்குது.               சமூகம் குழம்பிக்கிடக்குது.   சந்தர்ப்பங்கள் நிறைஞ்சு கிடக்குது. என்னை நினைக்க எனக்குப் பயமாய்க்கிடக்குது.

 

  • வரணியூரான் (ஜுனியர்) 23 டிசம்பர்., 2010

 

Advertisement

Comments are closed.