//அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் சிறுகதைப் போட்டியில் யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் வே.சிவராஜா தேசியரீதியில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கலை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அரச அலுவலர்களுக்கிடையிலான கலை இலக்கிய ஆக்கத்திறன் போட்டி -2013 இல் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரீ.பீ.ஏக்கநாயக்க தலைமையில் கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் ‘கனபேர் வந்து போயிருக்கினம்’ எனும் தலைப்பிலான சிறுகதைக்கு முதற்பரிசு நினைவுக் கேடயம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசினை நிகழ்வின் தலைவர் கலாச்சார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்கள் வழங்கிக் கௌரவித்தார். –
http://www.tamilcnn.lk December 22nd, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது.//
கனபேர் வந்து போயிருக்கினம் – சிறுகதை
கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை, எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் எண்டு அடையாளம் காட்டவும் கதைக்கினம். இன்னொருத்தருக்கு ஒரு கஸ்டம் எண்டால் அரைவாசிப்பேருக்கு சந்தோசம். அரைவாசிப்பேருக்கு அக்கறையில்லை. உண்மையான அக்கறையுள்ளவன் கதைக்கமாட்டான், கதைக்கிறதைவிட செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்குது’
அதிகமான சமூக அக்கறை காரணமாகவோ, இந்த சமூகக்கட்டமைப்பின் மீதான திருப்தியீனமோ, எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமோ தெரியவில்லை, சரவணன் பேச்சில் எப்போதும் இப்படியான ஒருவித கோபம் தெரியும்.
இரண்டுமே மணல்தான் என்றாலும் வடமராட்சி கிழக்கின் சிலிக்கா வெண்மணலுக்கும் புல்மோட்டை இல்மனைற் கருமணலுக்கும் எவ்வாறு ஒத்த இயல்புகள் எவையும் இல்லையோ அதுபோல, வெளிமாவட்டத்தில் ஒருபோதும் வேலைசெய்யாதவர்கள் என இனங்காணப்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிப் பெருநிலப்பரப்பின் தொலை தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டவர்கள் என்பதைத்தவிர ஒரே உத்தியோகம் பார்த்தாலும் வேறு எவ்விதத்திலும் எங்கள் இரண்டு பேருக்கு இடையிலும் இன்றுவரை கருத்தொற்றுமை காணமுடியாமல் இருந்தது.
கொக்கிளாயிலிருந்து நான்கு மணிக்குப் புறப்பட்ட தனியார் பேரூந்து அளம்பில் கடந்தபோது, சாரதியாலும் நடத்துனராலும் இனங்காணமுடியாத நோயினால் தாக்கப்பட்டுவிட, பேரூந்திற்கு ஏற்பட்ட நோய் இன்னதென நிர்ணயம் செய்து சிகிச்சையளிப்பதற்காக வேறொரு நிபுணரின் வரவிற்காக தெருவோரம் வெகுநேரம் காத்திருக்கவேண்டியிருந்த ஒரு வெள்ளிக்கிழமை மாலை வேளை.
‘நாங்கள் என்னதான் செய்தாலும் எங்கடை சனம் சீரழியிறன் பந்தயம் பிடி எண்டுதான் மச்சான் நிக்குதுகள்’
சிகரட் ஒன்றைப்பற்ற வைத்தபடி நான் கதையை ஆரம்பித்தபோது ஆமோதிப்பது போல சிரித்தான். இன்று சமூக அக்கறையுள்ள பலராலும் பேசப்படும் சமுக சீர்கேடுகளின் அதிகரிப்பின் வேதனை என்னையும் பேசவைப்பதுண்டு.
‘ஒருகாலத்திலை என்னமாதிரி இருந்தசனம், ஒழுக்கம் மலிஞ்சிருந்த பூமி. இண்டைக்கு புருஷன் இல்லாமல் குழந்தை பிறந்த கதையளும், பிறந்த குழந்தையை புதைச்ச, வீசின கதையளும், மூண்டு நாலு கலியாணம் கட்டின கதையளும் மலிஞ்சு போய்க்கிடக்குது. எல்லாரும் கதைச்சும், கவலைப்பட்டும் ஒண்டும் நடக்குதில்லை மச்சான். நாங்களும் இந்தச்சனத்தை நல்லாக்கிப்போடவேணும் எண்டு யோசிக்கிறம். ஆனால்………..’ நான் கதையை இன்னும் முடிக்கவில்லை.
‘கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை……… என்ற சரவணனின் கோபம் இவனிடம் பேச்சுக் கொடுத்தது தவறோ என்று எண்ண வைத்தது. சுதாரித்துக்கொள்ள அதிக நேரமெடுத்தது. சிகரட் பற்றவைப்பதற்காக பிரயாணிகளிலிருந்து தொலைவாக வந்தது இப்போது நல்லதாகப்பட்டது.
இந்தச் சமூகத்தை அவலங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்போடு உழைக்கின்ற அத்தனை பேரையும் ‘எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் என்று அடையாளம் காட்டவும் கதைக்கினம்’ என்று கொச்சைப்படுத்தியது வேதனையாக இருந்தது. எத்தனை தனிநபர்கள், எத்தனை அமைப்புக்கள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்த மக்களுக்காக குரல்கொடுக்கிறார்கள்.
அவன் கருத்துக்கள் பெரும்பாலான வேளைகளில் நான் விரும்பத்தக்கதாக இருப்பதில்லை. ஆனாலும் அநேகமான நேரங்களில் நான் எதிர்வாதம் செய்வதில்லை. ஆனால் இன்று
‘எனக்குச்சொன்ன மாதிரி வேறை ஆருக்கும் சொல்லிப்போடாதை மச்சான். எங்களை சமூக அக்கறையுள்ள படிச்ச மனிசர் எண்டு சிலபேர் நம்புகினம். சனத்தின்ரை வேதனை விளங்காதவங்கள் கதைக்கிற மாதிரி நாங்களும் கதைக்கக் கூடாது. எனக்கும் கவலைதான் மச்சான். உடைஞ்ச குடும்பங்கள் சமூகத்திலை அதிகமாகுது. அதாலை வரப்போற குடும்ப, சமூகப் பிரச்சனையள் இந்த சமூகத்தை அவலமாகத் தாக்கப் போகுது. இதுக்கெல்லாம் கதைக்கிறது தீர்வில்லை. தீர்க்கவேண்டிய கனபேர் வேறை காரியங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறம்.’ என்று சமூகச்சீரழிவையும் சோரம் போவதையும் நியாயப்படுத்தி தொடர்ந்தும் பேசியபோது தவிர்க்கமுடியவில்லை.
‘நான் சொல்லுற மாதிரி ஒண்டும் நடக்கயில்லை எண்டு சொல்லுறியோ?’ என்ற என் கேள்வியில் ஒருவித ஆவேசமிருப்பதை என்னாலேயே உணரமுடிந்தது.
‘சமூகமீறல் எல்லாக்காலத்திலையும் இருந்திருக்குது பாலா!. இருக்கிற சமூக நிலைமையைப் பொறுத்து அளவு கூடிக்குறையும். பிழைசொல்லுகிற உங்களைப்போலை ஆக்களுக்கு அந்த வேதனை விளங்காது. எல்லாக்காரியத்திற்குப் பின்னாலையும் நிச்சயம் காரணங்கள் இருக்கும்.’
எல்லாம் தெரிந்தவன் போல எதையெடுத்தாலும் விமர்சிப்பதும், மட்டந்தட்டிப் பேசுவதும் பலரை அந்நியமாக்கும் என்ற அடிப்படை விடயம் கூட புரியாதவன்.
‘நீ கதைக்கிறது எனக்கு விளங்கயில்லை சரவணன்! இப்பிடி நடக்கிறது சரியெண்டு சொல்லுறியோ’
‘ நான் இதிலை சரி பிழை கதைக்கயில்லை, நீ சொல்லுகிற கதையள் மாதிரி எனக்கு நிறையக்கதை தெரியும் பாலா! இந்தமாதிரி சம்பவங்கள் நடக்கவே இல்லை எண்டதை எப்பிடி அறுதியிட்டுச் சொல்ல ஏலாதோ, அதே போலை அப்படித்தான் நடந்தது எண்டதையும் ஒரு போதும் நிரூபிக்க ஏலாது. ஆனால் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய நாங்கள் அதை விட்டிட்டு வீண்கதை பேசித்திரியிறம் எண்டுதான் சொல்லுறன் ‘
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா. முதலையை ஒரு கை பார்ப்பதென மனதில் முடிவு செய்து கொள்கிறேன்.
‘சரி சரவணா! எப்பிடித்தீர்க்கலாமெண்டு நீ சொல்லு? ஆதரவாகச்சிரித்தான். சிரிப்பின் அர்த்தம் விளங்கவில்லை.
‘மச்சான்! இலட்சியம் பேசிற எங்கடை தலைவர்கள், அவலங்களைச் சொல்லி அழவைச்சு புகழ் தேடுகிற படைப்பாளிகள், பத்திரிகைகள் மாதிரித்தான் நீயும் கதைக்கிறாய். இண்டைக்கு வெளிநாடுகளிலை செங்கொடி பிடிக்கிறவை, உள்நாட்டிலை உணர்வாளர்கள் எண்டு சொல்லித்திரியிறவை, இவையளிலை கனபேர் கல்யாணமாகாதவைதான். இவை ஒவ்வொருத்தரும் அநாதரவாய் நிக்கிற ஒரு குடும்பத்தைப்பொறுப்பெடுப்பினமோ ? கல்யாணமானவையும் விரும்பினால் செய்யலாம், ஏலுமோ? ஏலாதவை கதைக்கக்கூடாது’
தொலைவாகப் பார்த்தபடி பேசியது எதற்கோ எனக்கு அனுதாபம் சொல்வது போலப்பட்டது. அவனது பேச்சில் என்மீதான கோபம் துளியும் இருக்கவில்லை. பேரூந்தின் ஹோர்ன் அலறியது.
‘பஸ் சரியாம் மச்சான்! வாடா. இண்டைக்கும் சாமத்திலைதான் வீட்டை போகலாம்’
பயணத்தில் அதிகமான நேரம் பேசாமலே வந்தான். அந்த அமைதி உறுத்தியது.
‘சரவணன்! சைக்கிள் ரவுணிலை விட்டிட்டே வந்தனி’
என்ற கேள்விக்கு உற்றுப்பார்த்தான்.
‘சைக்கிள் இல்லையடா மோட்டபைக். இண்டைக்கு யாழ்ப்பாணம் போய்ச்சேர இரவு இரண்டு மணியாகும். இப்போதும் சிரித்தான்.
@@@@@ @@@@@ @@@@@
‘மண்டை கழுவுறது’ என்று கொஞ்சம் கொச்சைத்தனமான சொற்றொடர் ஒன்று புழக்கத்தில் இருக்கிறது. அதன் முழுமையான அர்த்தம் எனக்கு நேற்றுத்தான் புரிந்தது.
இன்னும் ஆறாத வடுக்கள் தீராத வேதனைகளோடு, முழுநாடுமே ஒன்றுசேர்ந்து துடைக்கவேண்டிய துயரங்களோடு, சமூகத்தின் ஒருபகுதி வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னொருபகுதி சமூக, கலாசாரச் சீரழிவுக்காகவே பிறந்தது போல வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் இரண்டாம் தரப்பைப்பற்றி பேசப்போய் சரவணனோடு ஏற்பட்ட தர்க்கத்தின் முடிவில் எனது நிலைமை ‘மண்டை கழுவியது’ போலத்தான் இருந்தது. இன்று திருச்செல்வத்தாரை சந்திக்கின்ற வரையில் என்னிடமும் நம்பிக்கையீனங்கள் இருந்தது என்பதை நினைக்க சங்கடமாக இருந்தது.
எத்தனை அற்புதமான மனிதர், சமயப்பணி என்பதை சமூகப்பணியாக மாற்றிக் காட்டியவர், சமூகத்தின் வேதனைகளை தன்னுடையதாக கருதி அதற்காகவே உழைக்கின்ற இவரை நேற்று எப்படி மறந்து போனேன் என்பது புரியவில்லை.
அவரோடு பேசப்பேச அவர் ஆற்றியிருக்கின்ற சமூகப்பங்களிப்பு பிரமிக்க வைத்தது. எத்தனை ஏழைகளுக்கு கல்விப்பணி, வலது குறைந்தவர்களுக்கு நோயாளிகளுக்கு வைத்திய உதவி, இலக்கியப்பணி என்று உழைத்திருக்கின்றார் என்பதைக் கேட்கக் கேட்க நம்பிக்கையும் தெளிவும் பிறந்தது.
இடமாற்றம் பெற்று வந்த கடந்த சில நாட்களில் ஒரு சக மனிதன் என்ற வகையில் நான் சந்தித்த மனிதர்களின் சோகம் என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் கதைகளைக் கேட்டு அவற்றைத் தீர்க்க வழிதேடி மனது கனத்துப்போயிருந்தது. மனம் பொறுக்காது சில நண்பர்களிடம் உதவுங்கள் என்று கேட்டுக்கொண்ட போது
‘பாலா! நீ ஒருக்கால் திருச்செல்வம் சேரை சந்திச்சுக் கதை. அந்தாள் நிறையப்பேருக்கு உதவி செய்திருக்கிறார். இப்பிடி நெருக்கடியிலை இருக்கிற சனத்துக்கு கட்டாயம் உதவி செய்வார்.’
என்று வழிகாட்டிய நண்பன் வேல்நிதி நன்றிக்குரியவன்தான். அவனது வழிகாட்டல்தான் இன்று என்னை திருச்செல்வத்தாரிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தது. அறிமுகம் செய்து கொண்டு, வந்த விடயத்தை சொன்னபோது
‘இப்போதைக்கு கொஞ்சம் சிரமத்திலை இருக்கிறன். கடும் கஷ்டத்திலை இருக்கிற ஏதாவது ஒரு குடும்பத்திற்கு உதவி செய்யலாம். அப்பிடி ஒரு குடும்பத்தைப்பற்றி சொல்லுங்கோ’
என்ற கேள்வியோடு பார்த்த பார்வையில் ஒரு தீட்சண்யமும் அதிக நேரம் விரயம் செய்ய வேண்டாம் என்ற வேண்டுகோளும் இருந்தது.
அவலங்கள் பற்றிப் பேசவும், எழுதவும் என்னிடம் பல தரிசனங்கள் – கதைகள் இருக்கின்றன. ஏழ்மையினால் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கமுடியாது தவிக்கும் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட பெண், தொடைக்கு மேற் பகுதியுடனேயே காலை இழந்து மனைவி குழந்தைகளை காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் பாலைப்பழம் விற்கும் குடும்பத்தலைவன். திருமணமாகி பத்தே மாதத்தில் காணாதுபோன தனது கணவன் இன்னும் உயிருடன் இருப்பார் என்னும் நம்பிக்கையுடன் 5 வயதுப் பெண்குழந்தையுடன் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இளம்தாய். இரு கைகளையும் தோள்மூட்டுடன் இழந்த தனது மகனை பராமரிக்கும் வயதான தந்தை, இறுதிப் போரில் பெற்றோர் சகோதரர்களையும் இருகண்களையும் இழந்த இளைஞன் என பல கதைகள்.
இதில் ஒன்றைச் சொல்வதற்கு தெரிந்தெடுப்பதில் அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. இது வாழ்க்கைக் கணக்கு, எண்கணிதம் போல இலகுவாக ஏறுவரிசைப்படுத்தவோ, இறங்குவரிசைப்படுத்தவோ முடியவில்லை. எழுமாறாக ஒன்றைப் பேசத்தொடங்கினேன்.
அங்கவீனமுற்றவர்களின் கிராம மட்ட சங்கத்துக்கு தலைவராக இருக்கின்ற ஒருவரின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாமல் அந்தக்கிராமத்திற்கு அவர் குறிப்பிட்ட வீட்டைத்தேடிப் போயிருந்தேன். வீட்டுக்கு வழி விசாரித்தபோது சிலர் முகத்தைச் சுளித்தனர். அசிங்கமான வார்த்தைகளில் திட்டினர். ‘அதுகளுக்கு என்னத்துக்கு உதவி செய்யிறீங்கள் ஊருக்குள்ள வேற ஆட்கள் இல்லையா’ என்ற வார்த்தைகளும் காதில் விழுந்தன. சிலரின் பார்வையில் ஒருவித சந்தேகம் தெரிந்தது. இருசிறுவர்கள் சைக்கிள் பழகிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அடையாளங்களைக் கூறியபோது வீட்டைக் காட்டினார்கள்.
உள்ளே இருந்து ஒரு வயதான பெண் வெளியே வந்தார். கிழிந்த ஊத்தையான துணியினை உடுத்தியிருந்த ஒரு பெண்குழந்தை படலையைத்தாண்டி ஓடினாள். மேலாடைமட்டும் அணிந்திருந்த ஒரு சிறுமி அப்பெண்ணருகிலேயே நின்றிருந்தாள். நான் யார் என்றும் வந்திருப்பதன் நோக்கத்தையும் குறிப்பிட்டேன். மகனைக்கூப்பிட்டார்.
மகன் சேதுராமனுக்கு தற்போது வயது 49 ஆகிறது. அவருக்கு ஒரு கை இல்லை. அன்றைய அதிர்ச்சிகளின் ஆரம்பம் அது. பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டோம். அவரின் முகத்தில் எம்மைப் பற்றிய நம்பிக்கை இருக்கவில்லை. மிகவும் அவதானமாகப் பேசத் தொடங்கினார்.
‘உங்களைப் போலை கனபேர் வந்து போயிருக்கினம்;. உத்தரவாதங்களும் தந்திருக்கினம். ஆனால் இதுவரை எதுவித உதவியளும் கிடைக்கயில்லை’ என்றார்.
வீட்டின் கிடுகுப்படலைக்குப் பின்னால் இருந்து ஒரு பெண் எம்மை கவனித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவரின் மனைவி. அழைத்து அறிமுகப்படுத்தினார். புன்னகைத்துக்கொண்டோம். அதிர்ச்சிகள் தொடர்ந்தன. செயற்கைக்கால் பொருத்திய ஒரு கால், மற்றைய கால் முழங்காலுக்கு கீழே சிதைந்திருந்தது. காயங்களில் இருந்து இரத்தமும் நீரும் வழிய கொசுக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. யுத்தத்தில் ஒரு காலை இழந்து மறு காலில் முழங்காலுக்கு கீழே காயப்பட்டிருக்கிறார். காயப்பட்டு ஏறத்தாள 04 ஆண்டுகளாகின்றன. சிறந்த வைத்திய வசதி இல்லாததால் பாதிக்கப்பட்ட ஒரு காலில் இன்றும் காயங்கள் வருகின்றன.
மூன்று பெண் பிள்ளைகள், கணவனது வயோதிபத் தாய், மொத்தம் ஆறுபேர் கொண்ட குடும்பம். அனைத்தையும் தானே பார்த்துக் கொள்வதாகச் சொன்னாள்.
‘அண்ணை நீங்கள் ஒருவேலையும் செய்யமாட்டியளோ’
கணவனை நோக்கிய என் கேள்வி விபரமறிவதற்கானதாக இருந்தது.
‘எனக்கு தலைக்கு உள்ளுக்கு குண்டுச்சிதறல் இருக்குது. வெளியிலை வேலைக்கு போறதில்லை. இடைக்கிடை மயங்கி விழுகிறதாலை வெளி இடங்களுக்கு போனால் இவைக்கு கஷ்டம்’ என்று மனைவியைக்காட்டினார்.
‘ஏன் வைத்தியம் செய்யயில்லை’
‘இரண்டு மூண்டு டொக்ரர்மாருக்கு வவுனியாவிலையும் கொழும்பிலையும் காட்டியாச்சு, ஒப்பிரேசன் செய்யவேணுமாம் ஆறு லட்சரூபா கேக்கினம்’
நகைச்சுவை சொல்வது போன்ற தோரணையில் சொன்ன பதில் விரக்தி, ஆற்றாமை, வேதனை போன்ற பல உணர்வுகளின் கலவையாய் இருந்தது. என்னிடம் இதற்கு பதில் இருக்கவில்லை. என் கண்களைச் சந்தித்த பார்வையை நேரே சந்திக்கமுடியாததால் தலையைக் குனிந்து கொண்டேன்.
‘உங்களாலை வீட்டிலையிருந்து என்ன தொழில் செய்ய முடியும் எண்டு சொல்லுங்கோ அதற்கான முயற்சிகளை செய்து பார்ப்பம்’ என்றேன்.
என்ன தொழில் செய்வது? எப்படிச் செய்வது? அது பற்றிய அறிவே எனக்கில்லையே’
என்றார். அவரின் வாழ்வில் 15 ஆண்டுகள் வேறொரு தளத்தில் கழித்திருக்கிறார். கல்விகற்கும் காலத்தில் அங்கே இணைந்ததால் கல்வித்தகைமைகள் எதுவுமில்லை. அந்தக் கட்டமைப்பில் உயர் பதவியில் இருந்ததால் தொழிற்பயிற்சியோ, அனுபவமோ இல்லை. இன்றைய வாழ்வியற் சூழலுக்குள் அவரால் இயங்கமுடியாது. மிகவும் தடுமாறிக்கொண்டிருந்தார்.
முதலாவது குழந்தைக்கு 9 வயதாகிறது. அவளிடம் பெயர் கேட்டேன். சிரித்தாள். தாய் அவளால் பேச முடியாது என்றார். தொடர்ச்சியான அதிர்ச்சிகள் அயர்ச்சி தந்தன. அக் குழந்தை இன்று வரை பாடசாலைக்குச் செல்லவில்லை. செவிப்புலனற்றவர்களின் பாடசாலை அங்கே இல்லை. மற்ற இருபிள்ளைகள் அருகில் உள்ள ஒரு பாடசாலைக்குச் செல்கிறார்கள்.
‘உங்களுக்கு உதவி செய்யக்கூடிய சொந்தக்காரர் ஒருத்தரும் வெளிநாடுகளிலை இல்லையோ? இது எனது இறுதி அஸ்திரமாக இருந்தது.
‘இருக்கினம், என்ரை சொந்தத்தம்பிமார் இரண்டுபேர் இருக்கினம். நான் எங்களிலும் குறைஞ்ச சாதிப் பொம்பிளையைக் கட்டிப்போட்டன் எண்டு எனக்கு கலியாணமாகி பத்து வருஷத்துக்குப்பிறகு இப்பதான் கண்டு பிடிச்சவையாம். என்னோடை சேர்ந்த பாவத்துக்கு அம்மாவையும் பாக்காமல் விட்டிட்டினம். நாலுவருஷமாச்சுது.
வருணாச்சிரம தருமத்திற்கு முறைதவறிப்பிறந்த குழந்தையான சாதியம், கடந்த முப்பது வருடங்களாக வெடித்துச்சிதறிய அத்தனை குண்டுகளுக்கும் சாகாது தப்பிப்பிழைத்து இன்னும் உயிர்ப்போடும் முழுப்பலத்தோடும் இருந்தது. மனது ஈரம் ஊறிய மண் போலாகி கனத்துப் போனது. என்னால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாகவிருந்தேன்.
கதைகேட்ட திருச்செல்வத்தார் மலைத்துப்போயிருந்தார். இத்தனை அதிர்ச்சிகளைத் தாங்குவதற்கு அவர் நிச்சயம் தயாராக இருந்திருக்க மாட்டார். அந்தக்குடும்பத்தின் வைத்தியத்திற்கோ வாழ்வாதாரத்திற்கோ உதவும்படி வேண்டிக்கொண்டேன்.
‘நீங்கள் போட்டு திங்கட்கிழமை வாருங்கோ. நான் கொஞ்சப் பேரோடை கதைக்கிறன்;. என்னாலை முடிஞ்ச அளவுக்கு உதவி செய்யிறன். முதல் வைத்தியம் செய்யிறதைப் பற்றி யோசிப்பம்’ என்ற பதில் அந்தக்குடும்பத்திற்கு விடியும் என்ற அசையாத நம்பிக்கை தந்தது.
‘சேர் அதுக்கு பெரிய தொகை செலவாகும். நீங்கள் விரும்பினால் நான் அவையை உங்களோடை நேரை தொடர்பு படுத்தி விடுகிறன்’
‘இல்லை. அது தேவையில்லை. அதுகளை சிரமப்படுத்த வேண்டாம். நீங்கள் சொன்னால் சரி’ இவனல்லவா மனிதன் என்று மனம் அங்கலாய்த்தது.
‘சூழுதல் வேண்டுந் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந் தாலு
ஆழுதல் வேண்டுந் தீமை அகன்று நான் இவற்கா ளாகி
வாழுதல் வேண்டும் ‘ – காரணமில்லாமல் கந்தபுராண வரிகள் மனதில் ஓடின.
‘சேர் நான் திங்கக்கிழமை காலமை ஐஞ்சு மணி பஸ்ஸூக்கு வேலைக்கு போகவேணும்’ நான் சொல்ல வந்த விடயத்தை உடனே விளங்கிக்கொண்டார்
‘இல்லைப் பிரச்சினையில்லை நான் காலமை நாலு நாலரைக்கு அன்னதான மடத்துக்கு சாமான் வாங்க சந்தைக்கு வெளிக்கிடுவன். நீங்கள் நாலரைக்கு வாங்கோ. நான் நிக்கிறன்.’
மனது விசிலடித்தது. நன்றி கூறி விடைபெற்றேன்.
‘உங்களைப் போலை கனபேர் வந்து போயிருக்கினம்;. என்று நம்பிக்கையீனமாகப் பார்த்த சேதுராமனின் முகம் ஞாபத்தில் வந்தது. வைத்திய செலவுக்குத் தேவையான ஆறுலட்ச ரூபாவை கொடுக்கும் போது அந்தக்குடும்பத்தின் மனநிலை எப்படியிருக்கும் என்று நினைக்க சிலிர்த்தது.
@@@@@ @@@@@ @@@@@
ஞாயிற்றுக்கிழமை இரவே பரபரப்பும் பதட்டமும் தாங்க முடியவில்லை. ஐந்துமணி பஸ்ஸிற்கு வருவேன் என்றும், எனக்காக காத்திருக்கும் படியும்; தொலைபேசியில் சரவணனைக் கேட்டுக்கொண்டேன். வரும்போது பேசிய பேச்சிற்கு நிச்சயம் திங்கட்கிழமை பதிலிருக்கிறது.
அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்துவிட்ட என்னை மனைவி அபூர்வமாகப் பார்த்தாள். நான் இவ்வளவு உற்சாகமாக எழுந்த நாளொன்றை இதுவரையில் அவள் கண்டதேயில்லை. நாலே காலுக்கு திருச்செல்வத்தாரிடம் நின்ற என்னை அவர் வரவேற்ற விதம் காரியம் ஜெயம் என்பதாகப்பட்டது.
‘வாங்கோ, வாங்கோ. காலமை உங்களைச் சிரமப்படுத்தாமல் நேற்றைக்கே உங்களை வரச்சொல்லியிருக்கலாம்.’ மேன்மக்கள் மேன்மக்களே.
‘இல்லைச்சேர் இதிலை என்ன சிரமம்’ தன்னடக்கமான பணிவான என் பதிலை ரசிப்பது தெரிந்தது.
அலுவலக காரியதரிசியை அழைத்து ஏதோ பேசினார். அவர் ஒரு வவுச்சர் புத்தகத்துடனும் தபாலுறையுடனும் வந்தார்.
‘நான் நேற்றே எடுத்து வச்சிட்டன். செக் அவைக்கு மாத்திறது பிரச்சினையோ தெரியயில்லை. ஆனால் உங்களுக்கு கொண்டு போகச்சுகம். ஓப்பின் செக்தான். மாத்திறது பிரச்சினையில்லை எண்டு சொல்லுங்கோ’ மகிழ்ச்சியில் ஐயோ என்று அலறவேண்டும் போலிருந்தது. சரவணா! சேதுராமா! காத்திருங்கள் வருகிறேன் என்று மனது கறுவியது.
‘உங்களுக்கு தெரியும் தானே, ஆச்சிரம வேலையளுக்கு நூற்றி முப்பது லட்சம் முடிஞ்சுது. இப்பதானே வேலை முடிஞ்சது. இல்லாட்டில் கொஞ்சம் கூட உதவி செய்திருக்கலாம். இப்ப இதைக்குடுங்கோவன். இனிமேலும் பாப்பம். இந்த வவுச்சரிலை சைன்பண்ணுங்கோ’
சுயவிளம்பர இரைச்சல்களுக்கு மத்தியில் இப்படி ஒரு அடக்கமான வள்ளலை இத்தனை நாள் எப்படி அறியாமல் போனேன்.
கையொப்பமிடும் போது பார்த்தேன். ரூபாய் ஐயாயிரம் பெற்றுக்கொண்டேன் என்று எழுதியிருந்தது. தபாலுறையிலிருந்து காசோலையை உருவினேன். ரூபா ஐயாயிரம் என்று தெளிவாக எழுதியிருந்தது.
‘சேர் நான் போட்டு வாறன்.’ இத்தனை பதற்றத்திலும் வலிந்து உருவாக்கிக் கொண்ட பணிவைப் பேண முடிந்தது.
‘ஓமோம் வாங்கோ. இனிமேலும் சந்திப்பம்’
‘உங்களைப் போலை கனபேர் வந்து போயிருக்கினம். என்ற சேதுராமனின் முகம் இப்போதும் ஞாபத்தில் வந்தது.
சரவணன்; ஐந்துமணி பஸ்ஸிற்கு எனக்காக காத்திருப்பான். அவனோடு போக எனக்கு விருப்பமில்லை. அடுத்த பஸ் விடிந்த பின்புதான் புறப்படும். கிழக்கே அதிகம் இருளாக தெரிந்தது. விடிவதற்கு இன்னும் அதிகம் காத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
(உண்மைத் தரிசனங்களின் நிழல்கள்)
வரணியூரான் (ஜுனியர்)