தமிழ்ப் பௌத்தன் – (சிறுகதை)

                                                         

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுவும் இலங்கையர்கோன் பரிசில் நிதியமும் இணைந்து வீரகேசரி பத்திரிகையின் அனுசரணையுடன் நடாத்திய இலங்கையர்கோன் நினைவு அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில்  எமது இணையத்தளத்தின் இணை ஆசிரியர் வேலாயுதம் சிவராஜா தமிழ்பௌத்தன் எனும் தனது சிறுகதைக்காக முதலிடம் பெற்று எமக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஊர்காவற்றுறை பிரதேச சமூகசேவை உத்தியோகத்தரான இவர் நீண்ட காலமாக சிறுகதைகளை எழுதி வருவதுடன் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் பல்வேறு போட்டிகளிலும் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றவர். அரச ஊழியர் ஆக்கதிறன் போட்டியில் விரும்பித்தொலைத்த டயறி எனும் சிறுகதைக்காக தேசிய மட்டத்தில் முதலிடத்தையும் உதயன் பத்திரிகையின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் எனக்குப்பயமாய்க்கிடக்குதுஎனும் கதைக்காக முதலிடத்தையும்  அதேவேளை கடந்த வருட தமிழ்ச் சங்கப் போட்டியில் சுகமாகஅழவேண்டும் எனும் கதைக்காக இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமையும் இவரது குறிப்பிடத்தக்க அடைவுகளாகும். அண்மையில் அளவெட்டி மகாஜன சபையின் வெளியீடாக இவரது தொகுப்பில் இதுவும் ஒரு கதை எனும் சிறுகதை தொகுதியொன்று வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்துறையில் சிறுகதைத் துறையுடன் கவிதை விவாதம் என பல்வேறு துறைகளிலும் தனது தடங்களைப் பதித்துள்ள சிவராஜா சமூகத்துக்கான தனது பங்களிப்பையும் நல்கத் தவறவில்லை. அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் தலைவராகவும்  அளவெட்டி மகாஜனசபை மற்றும் அளவெட்டி அரசினர் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும் மகாஜன சபை கலைஞர் வட்டத்தின்  செயலாளராகவும் சேவையாற்றி வரும் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணி மற்றும் அபிவிருத்திக்கற்கைகளில் முதுமாணிப் பட்டங்களையும் அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகத்தில் உளவளத்துணைக்கற்கை நெறி டிப்ளோமா பட்டமும் பெற்றவர். இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில்  பயின்று வருகின்றார்.

வரணி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் வரணியூரான்(ஜுனியர்) எனும் புனைபெயரில் ஆக்க இலக்கியங்களைப் படைத்து வருபவர் என்பதும் குறி்ப்பிடத்தக்கது. தேசிய வெற்றியை பதிவு செய்து தனது ஆற்றலை மீள ஒரு தடவை நிறுவியுள்ள சிவராஜாவுக்கு அளவை மக்கள் சார்பான வாழ்த்துக்களை எமது இணையத்தளம் வாயிலாக தெரிவித்து மகிழ்கின்றோம். ….இம் முறை பரிசு பெற்ற தமிழ்ப் பௌத்தன் எனும் அவரது சிறுகதை தங்கள் வாசிப்புக்காக……(alaveddy.ch) 12.01.2013 //

                                                      தமிழ்ப் பௌத்தன் – (சிறுகதை)

                                                                        1 உலக போகம்

குரல்வளையிலிருந்து கழுத்தின் பின்புறம் வரை வெட்டப்பட்டிருந்தது. கழுத்தின் முள்ளந்தண்டு; எலும்பு மட்டும் நறுக்கப்படாமல் தலையை உடலோடு இணைத்து வைத்திருந்தது. சிதைவில்லாத திருத்தமான வெட்டுக்காயம் மிகக்கூர்மையான ஆயுதமொன்றால் அறுக்கப்பட்டிருப்பதை ஊகிக்க வைத்தது. தலை பின்புறமாகச் சாய்ந்து வெட்டப்பட்ட காயப்பிளவு விரிந்து கருமையான பின்னணியில் பக்கவாட்டான பார்வைக்கு தெரிந்த காட்சி உயிரை நடுங்க வைத்தது. குரல்வளைப் பகுதியிலிருந்து வழிந்த குருதி முன்புற உடலெங்கும் பரவி நிலத்தையும் தொட்டிருந்தது. இவ்வளவிற்கும் வெட்டப்பட்ட மனிதன் விழாமல் பூமிக்கு செங்குத்தாக நின்றுகொண்டிருந்தான்.

 

நீக்ரோ இனத்தைச்சேர்ந்த ஆபிரிக்க வாசிபோல தெரிந்தது. மிகத்தடித்த பருமனான உதடுகள், அகன்ற மேலுயர்ந்த மூக்கு, எண்கோண வடிவ வலிமையான முகஅமைப்பு, மரஅமைப்பை ஒத்த பருத்த உடலமைப்பு. சுருட்டையான தலைமுடி வயது முதிர்ந்த மரமொன்றின் பரட்டையான தழைகளாகத் தெரிந்தது. வாய், உதடுகள், கண்கள் புருவங்கள் எல்லாம் சிறிய கிளைகளாக இருந்தன. உற்றுப்பார்ப்பவர்களால் மட்டுமே  அவை மரக்கிளைகள் தான் என்பதனை உறுதிப்படுத்த முடிந்தது. நாற்புறமும் இருந்து பெரியகிளைகள் பொருந்தும் பகுதிக்கு கீழுள்ள மரத்தின் தண்டுப்பகுதி வெட்டப்பட்ட கழுத்தாக இருந்தது. அதிலிருந்து வேர்வரையான பகுதி மனித உடலின் சாயலை ஒத்திருந்தது.

 

என்ன ஒரு அற்புதமான கலைப்படைப்பு, மனிதர்களை மரங்களாகக்கருதும் இந்தக் காலத்தில் மரத்தை மனிதனாக உருவகித்து மரங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்படி ஒரு ஓவியத்தை வரைந்தவன் சாதாரண ஓவியனாக இருக்க முடியாது. பசுமையை நேசிக்கின்ற சமூக அக்கறையுள்ள ஒரு சிந்தனையாளன் மட்டுமே இப்படி ஒரு படைப்பினைத் தரமுடியும். சூழல் பாதுகாப்பினை மையப்படுத்தி நடாத்தப்படும் பல விழிப்புணர்வுக்கூட்டங்கள், செயலமர்வுகள், பிரச்சாரங்கள் எல்லாம் ஒன்றுகூடி சமூகத்திற்கு என்ன செய்தியை வழங்கமுடியுமோ அத்தனைக்கும் பலமடங்கு அதிகமான செய்திகளைத் தாங்கியபடி வார்த்தைகளின்றி மௌனமாய் கம்பீரமாய் நின்றது அந்த ஓவியம்.

என்னப்பா இந்தப்படத்தோடையே நிண்டிட்டீங்கள் அங்காலையும் பாக்க கிடக்குது

என்ற நர்த்தனியின் அழைப்பு என்னை சிந்தனை வலயத்திற்கு வெளியே தூக்கிப் போட்டது. இதற்கு மேல் எதைப்பார்க்க முடியும் என்று தெரியவில்லை இந்த ஓவியம் சொல்லாத வேறு என்ன செய்தியை மற்ற ஓவியங்கள் சொல்லிவிடப்போகின்றன.

 

இனிமேல் எப்போதாவது ஒருமரத்தை என்னால் வெட்டமுடியுமா தெரியவில்லை. நிச்சயமாக மரத்தை வெட்டும்போது மனிதனை வெட்டுகிற உணர்வினைத் தவிர்க்கமுடியாமல் போகும்.

 

கல்விச்சமூகத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் மட்டுமேயானது என நான் மதிப்பிட்டிருந்த ‘ இயற்கையைப் பாதுகாத்தலுக்கான விழிப்புணர்வு ஓவியக்கண்காட்சி’ இந்த ஓவியத்தினால் தனது வீச்செல்லையை விஸ்தரித்திருந்தது. யாரையாவது இது தொடவில்லையெனில் அப்படியானவர்களின் மனங்களை உலகில் எதுவும் இனித்தொட்டுவிடமுடியாது. ‘ கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார், இரு காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார்  ‘ என்ற சுசீலாவின் ஆடிப்பெருக்கு பாடல் வரிகள் ஏனோ தவிர்க்கமுடியாமல் ஞாபகத்திற்கு வந்தன.

 

                                                                      11 உண்மையைத்தேடி

நடைபாதை மிகத்திருத்தமாக ஆறடி அகலத்தில் செதுக்கப்பட்டிருந்தது. அதன் இரண்டு பக்கமும் உள்ளுரில் காணக்கூடிய அறுகம்புல், பிள்ளையார் பிடிப்பதற்கும் கோயிற்பூசைக்கும் மட்டுமேயானது என்ற எங்களின் சாதாரண வரையறையைத் தாண்டி அழகாக வளர்க்கப்பட்டு ஆறு அங்குல உயரத்தில் கத்தரிக்கப்பட்டிருந்தது. அந்தப்பச்சைக் கம்பளத்தின்மீது பல இன மரங்கள் வௌ;வேறு இன பூமரங்கள், பூச்செடிகள் ஒரு ஒழுங்கில், நேர்த்தியாக வளர்க்கப்பட்டிருந்தன. அல்லது வளர்ந்திருந்தன. இந்தப்பின்னணியில் சிறிய அளவிலான வீடு. முன்புறக்கதவு திறந்திருந்தது. வாசல் முன்பாக வீட்டிலிருந்தும் வீதியிலிருந்தும் சம அளவானது எனக்கணிக்கத்தக்க தூரத்தில் கீழ்ப்பகுதியில் கிளைகளின்றி மிக உயரமாக வளர்ந்த அரச மரம். வாசலில் அமைக்கப்பட்ட மேடையொன்றில் சாடியில் மதாளித்து வளர்ந்த துளசிச்செடி, வீட்டின் முன்புறக்கதவின் வலது பக்கமாக பெரிய அளவிலான ஆஞ்சநேயர் படம். அதன் அருகிலும் துளசிச்செடி முன்பாகவும் ஒன்றரையடி வரையில் நீளமான ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது. வாசல் நிலைக்கு மேலாக அதன் மையப்பகுதியில் நடுத்தர அளவில் ஒரு புத்தர் படம். தோட்டம் நிறைய பூக்களைக்காண முடிந்த போதிலும் ஆஞ்சநேயரிடமோ புத்தரிடமோ பூவைக்காண முடியவில்லை. இந்த வீட்டில் மனிதர்கள் வசிக்கிறார்கள், ஆகக்குறைந்தது கடந்த ஐந்து நிமிடங்கள் வரையிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்பட்ட போதும் மனிதர்களைக்காண முடியவில்லை.

வீட்டின் உட்புறமாக எட்டிப்பார்க்கும் எண்ணத்தை வாசல் நிலையில் எழுதப்பட்டிருந்த  உங்களை வரவேற்பதற்கு என்னை அனுமதியுங்கள் என்ற வாசகம் தடுத்தது.

வாங்கோ தம்பி, நான் பின்பக்கம் கொஞ்சம் வேலையோடை நிண்டதாலை நீங்கள் வந்ததைக்கவனிக்கேலை, இப்பதான் போனனான். உங்களைக்கண்டிட்டு வாறன். எனக்கு உங்களைத்தெரியேலையே? சரி சொல்லுங்கோ என்ன விசயமா வந்தனிங்கள் ?

என்ற அறிமுகத்தோடு பிரசன்னமான மனிதரை உண்மையில் எனக்கும் அறிமுகமில்லைத்தான். ஆனால் சிரித்த முகமாக கலகலப்பானவராகத் தெரிந்தார்.

கதிர்காமத்தம்பி எண்டு சொல்லுறது உங்களைத்தானே ஐயா ? ‘ என்ற கேள்விக்கு புன்னகை மாறாமலே தலையசைத்தார்.

 ஓவியக்கண்காட்சியில் பார்த்த அவரது ஓவியத்தைப்பற்றியும் அந்த ஓவியத்தால் கவரப்பட்டு அவரைச் சந்திக்க நினைத்ததையும் அக்கறைக் குறைவால் நாளாகி விட்டதையும் விபரித்த போதும் அதே சலனமில்லாத புன்னகையை கொஞ்சம் விசாலித்தார்.

சரி இப்ப என்ன விசயமா வந்தனிங்கள் எண்டு சொல்லுங்கோ என்று கேட்ட தொனியிலும், குரலிலும் என்னை விலக்கிவிடும் எண்ணம் கடுகளவும் தெரியவில்லை. நேரடியாகவும் சுருக்கமாகவும் பேசுபவராக இருக்கலாம்.

 

இல்லை ஐயா! நான் வேறை ஒரு அலுவலாயும் வரயில்லை, எனக்கு சித்திரம் சிற்பங்களிலை கொஞ்சம் ஈடுபாடு, அந்தத்துறை சார்ந்த அனேகமான ஆக்களையும் கொஞ்சம் பரிச்சயம். ஆனால் இதுவரையும் உங்களைப்பற்றி அறியேலை. அண்டைக்கு அந்தப் படத்தைப் பார்த்த பிறகு உங்களைப் பார்த்துக் கதைக்க வேணும் எண்டு நினைச்சனான். அதிலை உங்கடை பேரைக்கூட நீங்கள் எழுதயில்லை. உங்களைப்பற்றி கண்காட்சியை ஒழுங்கு படுத்தின ஆக்களிட்டை விசாரிச்சுத்தான் விபரம் கிடைச்சுது.’

விஜயகாந்த் படங்களில் பேசுவது போல நீளமாக நான் பேசிய வசனம் அவருக்கு சலிப்பாக இருக்குமோ என நினைத்தாலும் இதைவிட சுருக்கமாக பேச முடியவில்லை.

நீங்கள் என்னைப்பற்றி அறியிறதுக்கு நான் சித்திரக்காரன் இல்லைத்தம்பி. இதுக்கு முதல் நான் படம் கீறினதும் இல்லை

இந்தப்பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடன் பேசுவதைத் தவிர்க்க இப்படிப் பதில் சொல்லுகிறாரோ தெரியவில்லை. ஆனால் அவரிடம் தெரிந்த சாந்தம் கலந்த புன்னகை அப்படி இல்லையென்றது.

உண்மையிலை நீங்கள் பார்த்த அந்தப்படம்தான் நான் முதல்முதல் கீறின படம். அதுகும் ஒரு பழைய படத்தின்ரை ஞாபகத்திலை கீறினதுதான். அந்தக் கண்காட்சியைப்பற்றிக் கேள்விப்பட்டாப்போலை கீறிப்போட்டு நானா வலியக் கொண்டுபோய்க்குடுத்தனான். அவையும் அவ்வளவு அக்கறையாய் வேண்டேலை. எண்டாலும் அங்கை வைச்சிருக்கினம் அதுக்கு நன்றி சொல்ல வேணும்

இப்போது முன்னரிலும் ஏமாற்றமாக இருந்தது. ஒரு அற்புதமான கலைஞன் இப்படித் தன்னை வெளிப்படுத்தாமல் – வெளிப்படுத்த விரும்பாமல் இருப்பது இந்த சமூகத்திற்கு, கலையுலகத்திற்கு ஒரு இழப்பல்லவா?

ஏன் இப்பிடிச்சொல்லுறியள். எவ்வளவு அற்புதமாய் வரைஞ்சிருக்கிறியள், நீங்கள் இன்னும் நிறைய வரைய வேணும்;’

என்னுடைய கோரிக்கைக்காகவும் பழைய மாதிரியே சிரித்தார்

எனக்கு இந்த உயிரில்லாத விசயங்களிலை நாட்டமில்லைத் தம்பி! உயிருள்ள காரியங்கள் நிறையச் செய்ய வேண்டியிருக்குது

எதனைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.

உங்கடை படத்திலை உயிர் இருந்தததையா! அதாலைதான் உங்களைத் தேடி       வரவேணும் எண்டு நினைச்சனான்‘.

கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னேன். இப்போதும் சிரித்தார்.

அந்தப்படத்திலை உயிரிருந்ததெண்டால் அது இதுகளிலை நான் வைச்சிருக்கிற நேசம்தான்‘   

     என்று பேசத் தொடங்கியவர் சரளமாகப்பேசினார். தோட்டத்து மரங்களையும் செடிகளையும் வீட்டின் பின்புறமாகப் பரந்திருந்த நாற்றுமேடைகளையும் காட்டினார். மரங்களைப் பற்றிப் பேசும் போது தாய் தந்தையில்லாத அனாதைப் பிள்ளைகளைப்பற்றி, அவர்களின் எதிர்காலத்தைப்பற்றி, பேசுகின்ற, கவலைகொள்கின்ற ஒரு காருண்யவானின் உணர்வு தெரிந்தது. மரம் வளர்ப்பதற்காகவும், மரக்கன்றுகளை வளர்த்து வினியோகிப்பதற்காகவுமே தன்னுடைய பெரும் பொழுதைக் கழிப்பதை அறிய முடிந்தது. ஒரு நல்ல ஓவியரைச் சந்திக்க வந்த இடத்தில் ஒரு சூழலியலாளரைச் சந்திக்கும் அனுபவம் கிடைத்தது. அவரது இயற்கை மீதான நேசிப்பின் அவதாரமே அந்த ஓவியம் என்பதும் தெரிந்தது.

நாட்டைப்பிரிக்கிற சண்டையிலை சனங்களை மட்டுமில்லை நிறைய மரங்களையும் இழந்து போனம் தம்பி! சனங்கள் இனித்திரும்பி வராதுகள். மரங்களாவது திரும்பி வரவேணும் அதுக்காகத்தான் இவ்வளவும்

                என்று சொன்னபோது முகத்தில் இதுவரை ஒட்டியிருந்த புன்னகை சிறிய இடைவேளையின் பின் மீண்டும் தொடர்ந்தது. மக்களுக்காகக் கவலைப்படுகிறாரா? மரங்களுக்காகவா? அல்லது இரண்டுமா? என்று தெரியவில்லை.

 

                வீட்டில், குறிப்பாக வீட்டுவாசலில் அரசமரம் நிற்கலாமா? பூக்கள் நிறைய இருந்தும் படங்களில் ஏன் பூக்களைக் காணவில்லை? புத்தர் கடவுள் என்றால் அவருக்கு ஏன் ஊதுபத்தி கொளுத்தப்படவில்லை.? இத்தனைக்குப்பிறகும் தமிழர்கள் நாங்கள் புத்தர் படம் வைத்திருப்பது சரியானது தானா? வந்த நேரத்திலிருந்து சில சந்தேகங்கள் மனதைக்குடைந்து கொண்டிருந்தன.

இப்போது எங்களுக்கிடையில் சுமுகமான, அந்நியோன்யம் ஏற்பட்டிருக்க சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தது. மனிதர்போல மரங்களை நேசிக்கும் இந்த மனிதரால் எந்த மரத்தையும் அகற்றவோ, எந்த செடியிலிருந்தும் பூப்பறிக்கவோ முடியாது என்பது தெரிந்த போது இதுவரை தரிசிக்காத மெல்லிய மனஉணர்வுகள் தரிசனமாயிற்று. இத்தனை மென்மையான மனிதர்கள் இருப்பதை அறிய ஆச்சரியமாகப்பட்டது.

நான் அவ்வளவாய்ப் படிக்கேலைத் தம்பி, ஒன்பதாம் வகுப்போடை நிண்டிட்டன். கொஞ்சம் புத்தகங்கள் வாசிப்பன். அதைக்கொண்டுதான் உம்மோடை பேசிறன்.’

என்ற முன்னுரையுடன் ஆரம்பித்து புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பௌத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை. மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள். கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எனினும் பௌத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே. என்பதையெல்லாம் கதிர்காமத்தம்பியர் விபரிக்க அவரது அனுபவப்படிப்பின் முன்னால் எனது பல்கலைக்கழக முதுநிலைப்பட்டம் வாலறுந்து தொங்கியது.

இந்தப்படம் என்னட்டை முப்பது வருஷமாய் இருக்குது தம்பி, நான் அரசியலோ சமயமோ பேசயில்லை. அதுகள் எனக்குத்தெரியாது. ஆனால் புத்தர் ஒரு நல்ல மனிசன். நீங்கள் காந்தி படம், விவேகானந்தர் படம் வைச்சிருக்கிற மாதிரி, நானும் வைச்சிருக்கிறன். குழப்பமான நேரத்திலை அவரைப்பாத்தால் மனதுக்கு ஆறுதலாயிருக்கும் அவ்வளவுதான்.’  கதிர்காமத்தம்பியர் புத்தர் சொன்ன  நற்காட்சி நல்லெண்ணம் நன்மொழி நற்செய்கை நல்வாழ்க்கை நன்முயற்சி நற்கடைப்பிடி நற்தியானம்  என்ற எட்டு நெறிகளிலும் தெளிவாக இருந்தார்.                பதில் தெளிவானதாக இருந்தது. ஆனால் நாட்டின் நடைமுறை வேறானதாக இருக்க எனக்குள் குழப்பம்தான் எஞ்சியது.

அப்பிடியெண்டால் புத்தர் நல்ல மனிசன், அவர் சொன்னதும் சரி, இவங்கள் இந்த சிங்களவர்தான் எல்லாத்தையும் பிழையாக்கிப்போட்டாங்கள் அப்பிடியே ஐயா ?’

                என்னுடைய இந்தக்கேள்விக்கு கொஞ்சம் விசாலமாகவே சிரித்தார்.

தம்பி! நான் சொல்லுறன் எண்டு குறை நினையாதையும், உங்களுக்குத்தெரிஞ்ச சிங்களவர் வேறை, உண்மையான சிங்களவர் வேறை. உண்மையிலை எங்கடையாக்களை விட சிங்களவன் நல்லவன். அழகுணர்ச்சியும் மனிதாபிமானமும் உள்ளவன். உபசரிப்பும் நன்றியும் உள்ளவன். அவங்களை நீங்கள் ஒரு சுடலையிலை குடியிருத்தினாலும் வீடு மாதிரி ஆக்கி வைச்சிருப்பாங்கள்;. எங்கடையாக்களை ஒரு வீட்டிலை குடியிருத்தினாலும் சுடலை மாதிரி ஆக்கி வைச்சிருப்பாங்கள்‘.

என்று சொன்னபோது இந்தச் சந்திப்பில் இதுவரை அவரைப்பற்றி என்னிடம் உருவாகியிருந்த பிம்பம் உதிரத்தொடங்கியது .

மடைத்தனமாய்க் கதைக்கிறார், இப்பிடியானவை இருக்கிற வரைக்கும் எங்கடை சனத்துக்கு விடியாது. மரங்களை நேசிக்கிற அளவுக்கு இனத்தையும் மக்களையும் மண்ணையும் நேசிக்கத்தெரியாத ஆக்கள்

என்ற மன ஆதங்கத்தோடு விடைபெற வேண்டியிருந்தது.

                                                                                      

                                                                                            111  ஞானம் 

குருநாகல் நகரத்திற்கு முன்பாக இப்பாகமுவ என்ற பெயர்ப்பலகை தெரிந்தவுடன் பஸ்ஸிலிருந்து இறங்கும்படி கெமுனு சொல்லியிருந்தான்;. இதை நான் பஸ் நடத்துனரிடமும் பல தடவைகள் சொல்லியாகிவிட்டது. தம்புள்ள வந்ததிலிருந்து இப்பாகமுவ என்ற பெயர்ப் பலகைக்காக விரிந்த விழிகள் இரவு இரண்டு மணித்தூக்கத்தையும் வென்றிருந்தன.

ஐயா ஒயா பஹின்ட

என நடத்துனர் என்னை விழித்த போது பதற்றத்தில் திடீரென எழும்பி தள்ளாடி விழுந்து நான் கொண்டு வந்த பெரிய உரப்பை மூடையினை இறக்குவதற்கு வசதியாக பின் கதவினைத் திறக்கும்படி கேட்ட போது

ஏக்கத் கெனலா இஸ்ஸறாட்ட எண்ட

என மூடையுடன் முன்பக்கம் வரும்படி ஏறத்தாள மிரட்டினான். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஏற்றும் போது இருந்த பணிவும் மரியாதையும் வழிநெடுகிலும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் இப்போது மிரட்டல் தெரிந்தது. பின்புறத்திலிருந்து இழுத்து வந்த மூடையுடன், பஸ் நடைபாதைக்கு குறுக்கே கால்நீட்டி ஆசனத்தில் உறங்கும் பயணிகளை பயம் கலந்த மரியாதையோடு கடந்து முன்பக்கம் வந்த போது அவன் இறங்கச்சொன்ன இடத்திலிருந்து பதினைந்து கிலோமீற்றர் கடந்திருந்தது.

இறங்கிய இடம் இப்பாகமுவ தானா தெரியவில்லை. இரவு இரண்டரை மணிக்கு யாரிடம் கேட்பது. கேட்பதற்கு ஆளிருந்தாலும் கேட்கப்பயமாக இருந்தது. முன்பின் தெரியாத இடம். தமிழன் என்று தெரிந்தால் என்ன பிசகாகுமோ தெரியவில்லை. இறங்கியவுடன் கெமுனு தனக்கு போன் பண்ணச் சொல்லியிருந்தான். யாழ்ப்பாணத்திலிருந்து வர அதிகாலையாகும் என்ற அவனது கணிப்பைப் பொய்யாக்கி பஸ்காரன் இரண்டரை மணிக்கு கொண்டு வந்து இப்படி இக்கட்டில் விட்டிருக்கிறான். கைவசம் இருந்த சிகரட்டை எடுத்து பற்ற வைத்தபோது ஒரு தெம்பு பிறந்தது. இறங்கி நின்ற இடத்திற்கு எதிர்ப்பக்கம் ஒரு பெற்றோல் நிலையம் தெரிந்தது. கெமுனுவிற்கு அடையாளம் சொல்ல இது வசதியாக இருக்கும்.

இந்தப்பயணத்தை தவிர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றியது. யப்பான் தயாரிப்பு மோட்டார் சைக்கிள் வாங்க குருனாகல்தான் வாய்ப்பான இடம் என்று யாரோ சொன்னதை நம்பி எப்போதோ வேலை விடயமாக கொழும்பு போனபோது அறிமுகமான கெமுனுவின் தொலைபேசி இலக்கத்தை போன வருட டயறியில் தேடிப்பிடித்து தொடர்பு கொண்ட போது

ஹலோ கணேஸ் மஹாத்தா குட்மோணிங்

என்ற பதிலில் அதிர்ந்து போனேன். கொழும்பில் மூன்று நாள் பயிற்சிப்பட்டறை ஒன்றின் போது இரண்டாம் நாள் எதேச்சையாக எனக்கருகில் அமர்ந்தவனிடம் (எனது சிங்கள ஞானத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு காட்டுவதற்காக) பேச்சுக் கொடுக்கப்போய் அந்த நட்பு மறுநாள் வரை தொடர்ந்தது. பிரியும்போது எனது தொலைபேசி இலக்கம் கேட்டு நான் எழுதிக்கொடுக்க நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்டான். நான் கேட்காமலே தனது இலக்கத்தை என் டயறியில் எழுதி கெமுனு விஜேரத்தின – குருநாகல என்று எழுதி வைத்தான். என் இலக்கத்தை ஞாபகமாக சேமித்து வைத்திருப்பான் என்றோ, என்னை ஞாபகம் வைத்திருப்பான் என்றோ நான் நம்பியிருக்கவில்லை.

கெமுனு கொடுத்த நம்பிக்கையில் அவனை மட்டுமே நம்பி குருனாகல் புறப்பட்டது பிசகாகி விட்டது, இப்போது இரண்டரைமணி இரவில் இந்த வீதியில் நிற்கவேண்டியிருக்கிறது. அவனைத்தொடர்பு கொள்வதை விட வேறு வழியிருக்கவில்லை.

ரெலிபோன் அடித்த சில விநாடிகளிலேயே

ஹலோ கணேஸ் மஹாத்தா , தங் கொஹேத இன்னே ?

 என்றவனுக்கு நான் நிற்கும் இடத்தைச்சொல்ல எனக்கு தெரியவில்லை. எனக்காக விழித்திருந்தானோ, அல்லது எதேச்சையாக அவன் எழுந்த நேரம் தொலைபேசி ஒலித்திருக்குமோ தெரியவில்லை. நான் தரையிறங்கி விட்டதையும்  ஆசிரி என்று நான் நிற்குமிடத்தில் உள்ள பெயர்ப்பலகையில் எழுதியிருப்பதையும் பெற்றோல் நிலையம் இருப்பதையும் சொன்னபோது அதிர்ந்தது தெரிந்தது.

ஒஹெம இன்ன மங் தவ டிக்கங்கின் என்னங்

 என்ற பதில் நம்பிக்கையைத் தந்தது. அவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எனக்கு இப்படியே நிற்பதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை.

இருபது நிமிடத்தில் என்னருகில் இருந்தான். மோட்டார் சைக்கிளில் ஏறத்தாள அரை மணித்தியாலம் நான் வந்த திசையிலேயே ஓடி பிரதான வீதியில் இருந்து உட்புற வீதியொன்றிற்கு இறங்கியபோதுதான் நான் இறங்கவேண்டிய இடத்தை விட்டு இருபது கிலோமீற்றர் வரை தள்ளிப்போயிருக்கிறேன் என்பது தெரிந்தது.

அதிகாலை மூன்றரை மணிக்கு கெமுனு வீட்டில் எல்லோரும் விழிப்பாக இருந்தார்கள். நீண்டநாள் பழகியவனைப்போல வரவேற்றார்கள். பயணத்தில் வாந்திவரும் எனப்பயந்து சாப்பாட்டைத் தவிர்த்திருந்த எனக்கு இப்போது பசி தாங்க முடியவில்லை. குளித்துவிட்டு சாப்பிட வரும்படி அழைத்தார்கள்.

சிங்களவன் நல்லவன். அழகுணர்ச்சியும் மனிதாபிமானமும் உள்ளவன்.’

என்று சொன்ன கதிர்காமத்தம்பியர் ஞாபகத்திற்கு வந்தார். அவருக்கும் கெமுனு வீட்டாரைத் தெரிந்திருக்குமோ தெரியவில்லை.

                காலை ஏழு மணிக்கு கண்விழித்த போது இன்னும் கொஞ்ச நேரம் படுத்தால் என்ன என்று தோன்றியது. நான் படுத்திருந்த அறையில் கெமுனுவின் பிள்ளைகள் இரண்டு பேரும் பாடசாலைக்காக புத்தகப்பையை தயார் செய்து கொண்டிருந்தார்கள். இது அவர்களுடைய அறையாக இருக்க வேண்டும். இருவருக்கும் ஓரிரு வயது வித்தியாசம் இருக்கலாம். இளையவனாகத் தெரிந்த பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க மகன் நான் எழுந்தததைப்பார்த்ததும் வெளியே ஓடினான். நான் எழுந்து விட்டதை தந்தைக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

                குடும்பமாக காலை வணக்கம் சொன்னார்கள், நான் குளித்துச் சாப்பாட்டை முடித்துக் கொண்ட போது பிள்ளைகள் பாடசாலை செல்ல தயாராக இருந்தார்கள். காலை வேளைகளில் எங்கள் வீடுகளில் தெரியும் பதட்டம் தெரியவில்லை. அருகில் வந்து

அங்கள்! அப்பி பாசலட்ட கீங் எமு

என்றவர்கள் அடுத்து செய்த செயல் நான் ஒருபோதும் எதிர்பாராதது. திடீரென எதிர்பாராத விதமாக என் காலைத் தொட்டார்கள். பதறிப்போனேன். எனக்கு இது பழக்கமில்லாதது. என்னால் செய்ய முடியாதது கூட. வெறுமனே தலையைத் தொடுவதைத்தவிர எதுவும் சொல்லத்தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட முடியவில்லை என்பதே சரியானது. மூன்று நாட்களுக்கு முன்புதான் யாழ்ப்பாணத்தில் அமைச்சரை வணங்க மறுத்த மாணவன் பற்றிய இணையத்தள செய்திக்கு

நாங்கள் இழந்தவைகள் பல இருந்தாலும் தன்மானத்தை  இழக்கவில்லை என்பதை நிரூபித்து விட்டான்

என்று பின்னூட்டமிட்டிருந்தேன்.

குருனாகல் பயணம் முடிந்து ஊருக்குப் போனவுடன் ஒருதடவை கதிர்காமத்தம்பியரை சந்திக்க வேண்டும் என்று மனது சொல்லியது.

                                                                                                      

கதிர்காமத்தம்பி ஐயா வீட்டிற்குள் நுழையும் போதே இந்த இரண்டு வார இடைவெளியில் ஒரு மாறுபாடு தெரிந்தது. முற்றத்தில் இருந்த மேடையும் துளசிச்செடியும் காணாமல் போயிருப்பது தெரிந்தது. முதல் நாள் பார்த்த புன்னகை கொஞ்சம் தேய்ந்திருக்க கதிர்காமத்தம்பி ஐயா

வாரும் வாரும் முந்தநாளும் உம்மைப்பற்றி யோசிச்சனான் என்று வரவேற்றார்

ஓம் ஐயா ஒருக்கால் குருனாகல் போகவேண்டியிருந்தது. நேற்றுத்தான் வந்தனனான். உங்களையும் ஒருக்கால் பாத்திட்டு போவம் எண்டு வந்தனான்

சம்பிரதாயமான உரையாடல்கள் முடிந்து

எங்கை ஐயா இதிலை நிண்ட துளசியைக் காணயில்லை

வேதனையுடன் தலையை ஆட்டினார். மேலே கையைக்காட்டி பெருமூச்சு விட்டார். நிமிர்ந்து பார்த்த எனக்கு மின்சார அதிர்ச்சி. அரச மரத்தின் கிளைகள் எல்லாம் முழுமையாக  வெட்டப்பட்டு மரம் ஒற்றைத் தடியாக எஞ்சியிருக்க

ஐயா !!!!!!!!!!!!!! ??????????????????

என்ற எனது ஆச்சரியக்குறிகளுக்கும் கேள்விக்குறிகளுக்கும் அவரிடம் பதில் இல்லை. கையும் மெய்யுமாகப் பிடிபட்ட கொலைகாரனின் பதட்டம் தெரிந்தது.

இந்த மரக்கொப்புகளை வெட்டேக்கை அது துளசிக்கு மேலை விழுந்து மேடையும் சாடியும் உடைஞ்சு போய்ச்சுது தம்பி . இன்னொரு துளசிக்கண்டு வைக்க வேணும்‘.

என்ற பதிலில் ஒரு வைராக்கியம் தெரிந்தது. சில நேரத்தில் சில மனிதர்கள், துளசி மாடம், என்று மனதில் பல நாவல் தலைப்புக்கள் வந்து போக எதுவும் புரியாமல் நின்ற என்னை அவர் பார்த்த பார்வையில் தெரிந்த வேதனையின் ஆழம் விபரிக்க முடியாதது.

போன கிழமை எங்கடை ஊருக்கு ஆக்களை விடுகினம் எண்டு காணி பார்க்கப்போனனான் தம்பி. காணியிருக்குது ஆனால் அது எங்களுக்கு இல்லையாம்‘. 

இப்போதுதான் கதிர்காமத்தம்பியரின் பூர்வாச்சிரமம் எனக்கும் வாசகருக்கும் அறிமுகமாக இருபத்தொரு வருடங்களாக தவழ்ந்த மண்ணைப்பிரிந்த ஏக்கத்தோடு வாழ்ந்திருப்பது தெரிந்தது. தொண்ணூறுகளில் பிரிந்த தாய் நிலத்தை கடந்த வாரம் சென்று பார்க்கவும் மீள்குடியேறவும் அனுமதி கிடைத்த போதும் இவரது வீடு மட்டும் அனுமதிக்கப்படாதிருந்தது. அவர்களின் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருந்த அரச மரத்தின் கீழ் அவர் நேசித்த புத்தர் அடாத்தாக அமர்ந்து கொண்டு இவரது காணி உரிமையை நிராகரித்தார்.

அந்தக்காணி இனிக்கிடைக்காது தம்பி, அதை மறந்திட வேண்டியது தான். அது பரவாயில்லை. ஆனால் இந்தக்காணியையும் விட மாட்டாங்கள் போலை கிடக்குது.’

என்றவரைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. காணி போய்விட்ட கவலையில் புத்தி பேதலித்துப்போயிருப்பாரோ? என்று தோன்றியது. இடம் பெயர்வின் பின் இவர் வாங்கி சோலையாக மாற்றியிருந்த இந்தக்காணியில் இருந்த அரசமரம் இவரது அர்த்தமில்லாத பயத்திற்குப் பலியாகியிருக்க வேண்டும். மரத்தை முழுமையாக வெட்ட சட்டம் அனுமதிக்காது என்பது தெரிந்து கிளைகளை மட்டும் வெட்டியிருக்கிறார்.

ஏன் ஐயா அப்பிடிச் சொல்லுறியள், குடியிருக்கிற காணியை ஒருத்தரும் பிடிக்க மாட்டினம்.’ எனது ஆறுதல் வார்த்தைகள்  அவரைத் திருப்திப்படுத்தியதாகத் தெரியவில்லை.

அப்பிடியில்லைத்தம்பி இந்த ஏரியாவிலை அரசாங்கக் கட்டிடடம் ஒண்டு கட்டிறதுக்கு அரை ஏக்கர் காணி வேணுமாம். இந்தக்காணியை விலைக்குத்தரச்சொல்லி போன கிழமை மூண்டு தரம் வந்திட்டாங்கள். எனக்குப்பாஷை விளங்காதெண்டு நினைச்சு அரச மரம் நிக்கிறதாலை இதுதான் பொருத்தமான காணியெண்டு தங்களுக்கை கதைக்கிறாங்கள்.’

நிலைமையின் விபரீதம் விளங்க எனக்குள்ளும் பயம் தொற்றிக்கொண்டது. இந்த ஜீவகாருண்யனின் மன அதிர்வுகள் என்னையும் தொட்டதோ தெரியவில்லை. சர்ச்சைக்குரிய இந்த அரச மரத்தை ஒருமுறை தொட்டுப்பார்க்க வேண்டும் போல இருந்தது. மரத்தைத் தொட எத்தனித்த என்னை நெருப்பைத் தொட எத்தனிக்கும் குழந்தையை விலக்குவது போன்ற பதட்டத்துடன் அவசரமாக விலக்கினார்.

தம்பி இஞ்சாலை வாரும் அதிலை அசிட் ஊத்தியிருக்கு

இப்போது உண்மையில் திராவகம் பட்டது போலத்தான் இருந்தது. என்னைப்பார்த்த பார்வையில் தெரிந்தது பயமா? குற்ற உணர்ச்சியா? வேதனையா? புத்திர சோகமா தெரியவில்லை?

மனக்குழப்பமெண்டால் புத்தரைக் கொஞ்ச நேரம் பார்த்தால் மனதுக்கு ஆறுதலாயிருக்கும், இப்ப புத்தரே பிரச்சினையெண்டால் என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. தம்பி இந்த மண்ணெண்டாலும் எனக்கு வேணும்யாரிடம் யாசிக்கிறார் என்று தெரியவில்லை. தொண்டையைத் துக்கம் அடைப்பது தெரிந்தது. கண்களில் கண்ணீர்.

 நான் பார்த்த பௌத்தர்களும், கதிர்காமத்தம்பியர் சொன்ன புத்தரும் நல்லவர்கள் தானே? அவர்களின் உறவும் போதனையும் அன்பையும் ஜீவ காருண்யத்தையும் தானே வளர்க்க வேண்டும். ஆனால் இங்கே எல்லாம் தலைகீழாக இருப்பது ஏனென்று தெரியவில்லை. எங்கேயோ தவறிருப்பது தெரிந்தது. எங்கே என்று யோசிக்க தலை சுற்றியது. எல்லாம் இருட்டுவது போல இருந்தது.

 

(கள யதார்த்தம் கலந்த சிந்தனைகள்)

 

  • வரணியூரான் (ஜுனியர்)                                                                                     12.  01.2013

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement

Comments are closed.