முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டிய முன்பள்ளிக் கல்வி

அறிமுகம்
ஒரு பிள்ளையின் ஒட்டுமொத்த கல்வி வாழ்க்கையில் (Educational Life) முன்பள்ளிப் பருவம் என்பது முதலாவதாக அமைவதுடன் முதன்மையானதாகவும் உள்ளது. . Preschool, Kindergarten, Nursery, Day Care, Play school  என பல்வேறு நாடுகளிலும் பல்வேறு பெயர்களினாலும் அறியப்படும் முன்பள்ளிப் பருவம் என்பது பொதுவாக ஒரு பிள்ளையின் மூன்று வயது தொடக்கம் ஐந்து வயது வரையான கல்விக் காலமாகும். இக் காலப்பகுதி என்பது ஒரு குழந்தை தன்னை எதிர்காலத்துக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் மிக முக்கிய காலப்பகுதியாகும். இப் பருவத்திலேயே ஒரு மனிதனின் மூளையின் எண்பது சதவீதம் விருத்தியடைவதாக மருத்துவ நிபுணர்களும் உளவியல் வல்லுனர்களும் தங்கள் ஆய்வுகளின் முடிவாக தெரிவித்துள்ளார்கள். இதனையே நமது முன்னோர் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என மொழிந்தார்கள். முன்பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாடுகளும் தமது கல்விக் கொள்கைகளுக்கேற்ற விதத்தில் பல்வேறு விதமான அணுகுமுறைகளை பின்பற்றுகின்றன. பல மேலைத்தேய நாடுகளில் முன்பள்ளி ஆசிரியர்களாக இருப்பதற்கு முன்பள்ளிக் கல்வித்துறையில் பட்டம் முடித்து இருக்க வேண்டும் என்பது அவசியமான நிபந்தனையாகவுள்ளது. அது மட்டுமன்றி குழந்தை உளவியல் சுகாதாரம் போசாக்கு போன்ற துறை சார் அறிவு மற்றும் திறன்சார் தகமைகளை மெய்ப்பிப்பதற்கு ஏற்ற சான்றுப்பத்திரங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதும் முக்கியமான நிபந்தனையாகவுள்ளது. ஆனால் இலங்கையின் நிலமை வேறானதாகவிருக்கின்றது.

இலங்கையின் முன்பள்ளிக் கல்வி

இலங்கையின் முறைசார் கல்வி முறைகளுள் ஒன்றாக கருதப்படும் முன்பள்ளிக் கல்வி தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் கொடுக்கப்படும் கரிசனைகளும் உரிய மட்டத்தில் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதொன்றாகும். இலங்கையில் பிள்ளைகளின் விருத்தி தொடர்பில் 0-2 வயது வரை கொடுக்கப்படும் கரிசனை அதி உன்னதமான மட்டத்தில் உள்ளது. இருந்தும் 2-5 வயது வரையான முன்பள்ளிப் பருவ காலத்தில் வழங்கப்படும் கரிசனை என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

உலக வங்கியின் ஆய்வொன்றின் பிரகாரம் இலங்கை முழுவதும் ஏறக்குறைய 17,020 முன்பள்ளிகள் உள்ளன எனவும் இவற்றில் அண்ணளவாக 29,340 ஆசிரியைகள் பணியாற்றுவதாகவும் இவ் முன்பள்ளிகளில் 84 சதவீதமானவை அரச சார்பற்ற முகாமைத்துவங்களினாலேயே பரிபாலனம் செய்யப்படுகின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அது போன்றே முன்பள்ளிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் உள்ள சட்ட ஏற்பாடுகளும் போதாதுள்ளதாகவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதும் இவ் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் கல்விக் கொள்கைகளில் முன்பள்ளிக் கல்வி தொடர்பான கொள்கை வகுப்புக்கள் மேலும் விருத்தி செய்யப்படவேண்டியதாகவுள்ளன.
அதனையும் தாண்டி பின்வரும் காரணங்களும் இலங்கையின் முன்பள்ளிக் கல்வி விருத்தியின்மைக்கான காரணங்களாகவுள்ளன.

கல்வி அமைச்சில் முன்பள்ளிகள் தொடர்பிலான ஏற்பாடின்மை
முன்பள்ளிக் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் கீழ்பட்ட கல்வித் திணைக்களங்களில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள போதும் முன்பள்ளிகள் அரசினால் நிர்வகிக்கப்படாத கல்விக் கட்டமைப்புக்களாகவேயுள்ளன. கல்வி அமைச்சிலும் முன்பள்ளிக் கல்வி விருத்தி தொடர்பிலான குறிப்பிடத்தக்க அலகு அல்லது பிரிவுகள் எவையும் இல்லை. மேற்குறித்த உதவிக்கல்விப் பணிப்பாளரினாலும் முன்பள்ளிகள் மீது அதிக செல்வாக்கை உத்தியோகரீதியில் பிரயோகிப்பது என்பது கடினமானதாகவுள்ளதுடன் சாத்தியமற்றதாகவும் உள்ளது. எனவே அரசின் பிடியில் இருந்து நழுவிய கல்விக்கட்டமைப்புக்களில் முதன்மையானவையாக முன்பள்ளிகள் உள்ளன.

திறனற்ற முன்பள்ளி நிர்வாக கட்டமைப்பு
அனேகமான முன்பள்ளிகள் ஆலயங்கள் சனசமூக நிலையங்கள் கூட்டுறவு அமைப்புக்கள் என்பவற்றினால் நிர்வகிக்கப்படுவதுடன் அவற்றின் நிர்வாகிகளுக்கு முன்பள்ளி நிர்வாகம் தொடர்பிலான அறிவு போதியளவு இல்லாமலேயுள்ளது. அதிலும் மேற்குறித்த நிர்வாக கட்டமைப்புக்கள் காலத்துக்காலம் மாற்றம் பெறுவதும் அதைத் தாண்டி பொதுவாக இவ் கிராமிய மட்ட சமூகக் கட்டமைப்புக்களில் காணப்படும் உள்ளக முரண்பாடுகளும் அவற்றினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளின் செயற்பாட்டிலும் தாக்கம் செலுத்துகின்றன. இருந்தும் மிகச் சிறப்பாக முன்பள்ளிகளை இயங்கும் நிர்வாகங்களும் உள்ளன. குறிப்பாக வடமாகாணத்தில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் கீழ் நூற்றுக்கு மேற்பட்ட முன்பள்ளிகள் பரிபாலனம் செய்யப்படுவதுடன் அவற்றில் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கான கொடுப்பனவுகளையும் குறித்த சமாசமே வழங்கி வருகின்றமை பாராட்டத்தக்கது.

ஆசிரியர்களுக்கான அடிப்படைத் தகமையின்மையும் குறைந்த ஊதியமும்
முன்பள்ளி ஆசிரியைகளுக்கான அடிப்படைக் கல்வித் தகமை எதுவென்பது இதுவரை சட்ரீதியாக வரையறை செய்யப்படவில்லை. அனேகமான முன்பள்ளிகளில் க.பொ.த உயர்தரச் சித்தியற்ற பலர் ஆசிரியைகளாக பணியாற்றுகின்றார்கள். முன்பள்ளி ஆசிரியைகளுக்கான அடிப்படைச்சம்பளம் தொடர்பில் எந்தவிதமான திட்டமிடப்பட்ட சம்பளக் கொள்கைகளும் இல்லாத காரணத்தினால் மிகக் குறைந்த ஊதியத்துடன் அல்லது சேவை மனப்பாங்குடன் முன்பள்ளி ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டியிருப்பது கவலைக்குரியதாகும். இருந்தும் சில மாகாண சபைகள் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றன. அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானவர்களுக்கே வழங்கப்படுகின்றது. சம்பள முறைமையிலிருக்கும் பாதகங்களினால் தரமான முன்பள்ளி ஆசிரியைகளை தக்கவைப்பதும் உருவாக்குவதும் பெரும் சவாலான விடயமாகவுள்ளது.

அதுபோன்றே முன்பள்ளி ஆசிரியைகளின் வாண்மை விருத்திக்கான வாய்ப்புக்களும் மிகக் குறைந்தளவிலேயே உள்ளன. கல்வியியல் துறைகளை கொண்டுள்ள பல்கலைக்கழகங்கள் முன்பள்ளிக் கல்வி தொடர்பிலான சில கற்கைநெறிகளை வழங்கிவந்தாலும் அவற்றின் செறிவும் தரமும் போதாததாகவேயுள்ளது. அத்துடன் அனுமதி நிபந்தனைகள் க.பொ.த உயர்தரத்தை மையப்படுத்தியிருப்பதனால் பல முன்பள்ளி ஆசிரியைகள் அடிப்படைத் தகுதியை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வாண்மை விருத்திக் கற்கைகளை தொடர்வதில்லை. பொருளாதார ரீதியில் ஆசிரியைகள் எதிர்நோக்கும் பின்னடைவுகளும் இவ்வாறான வாண்மை விருத்திக் கற்கைகளில் இருந்து அவர்களை தூரவிலகச்செய்கின்றது.

பௌதிக வள விருத்தியின்மை
முன்பள்ளிகளில் பிள்ளைகளின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தத்தக்க பௌதிக வள ஏற்பாடுகள் போதியளவு இல்லாவிட்டாலும் கருத்தத்தக்களவிலாயினும் இருத்தல் வேண்டும். பொருத்தமான வகுப்பறைச் சூழலை உருவாக்குவதற்கான தளபாட வசதிகள், பூங்கா, உள்ளக விளையாட்டு உபகரணங்கள், ஒலி ஒளி சாதனங்கள், கழிப்பறை வசதிகள் என்பன அவசியமாக ஒரு முன்பள்ளியில் இருக்க வேண்டிய பௌதிகவள ஏற்பாடுகளாகும். இவ்வாறான பௌதிகவள ஏற்பாடுகள் என்பது பிள்ளையின் ஆளுமை விருத்தி கூட்டுணர்வு மனப்பாங்கு புதிது புனையும் ஆற்றல் என்பவற்றை விருத்தி செய்யவும் மிகவும் அவசியமானது. இருந்தும் பல முன்பள்ளிகளில் பௌதிக வள பற்றாக்குறையே நிலவுகின்றது. முன்பள்ளிகளின் பௌதிக வளங்களை விருத்தி செய்வதற்கான அரச நிதி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதில்லை. குறிப்பாக நாட்டின் வரவு செலவுத்திட்டத்தில் கல்வித் துறைக்காக ஒதுக்கப்படும் பெருமளவு நிதியில் சிறிதளவேனும் முன்பள்ளிக் கல்வி விருத்திக்கு ஒதுக்கப்படுவதில்லை. இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி மூலமாக அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள முன்பள்ளிகள் தமது தேவைகளை ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்யத்தக்க ஏற்பாடுகள் உள்ளமையையும் கவனிக்கத்தக்கது. ஆனால் பொருளாதார பின்னடைவுடன் இயங்கும் பல முன்பள்ளிகள் பௌதிக வள விருத்தியில் அக்கறையற்று இருப்பதும் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புக்கள் மூலம் கிடைக்கும் பௌதிக வளங்களை கூட பராமரிக்க முடியாதிருப்பதும் கவலைக்குரியது.

சமூக ஏற்றத்தாழ்வுகள்
பொதுவாக சமூகக் கட்டமைப்புக்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் செல்வாக்கு செலுத்தும் கல்வி அலகுகளாக முன்பள்ளிகள் உள்ளன. நகரப்புறங்களில் இவற்றின் தாக்கம் குறைவாக உள்ளபோதும் கிராமிய மட்டச் சூழலில் தவிர்க்கவும் தடுக்கவும் முடியாதளவில் சமூக ஏற்றத்தாழ்வு பிரச்சனைகள் முன்பள்ளி கல்விமட்டத்தில் இழையோடியுள்ளன. சில சமூகங்கள் தமது பிள்ளைகளுக்கென முன்பள்ளிகளை உருவாக்கி வைத்திருப்பதும் சில சமூகங்கள் பிற சமூகத்தவரின் நிர்வாகத்தில் இயங்கும் முன்பள்ளிகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதைத் தவிர்ப்பதும் கிராமிய மட்டத்தில் அவதானிக்கப்பட்ட பெரும் சவாலாகவுள்ளது. இவற்றை தாண்டுவது மிகக் கடினமாகவுள்ளபோதும் தாண்ட வேண்டிய அவசியமுள்ளது.

முடிவு
எதிர்காலத்தில் நல்ல விளைச்சலைத் தரவல்ல தலைமுறையின் நாற்றுமேடைகளாகவிருக்கும் (ரேசளநசல) முன்பள்ளிகள் தொடர்பில் கவனம் எடுப்பது மிக அவசியமானது. முன்பள்ளிகளில் வழங்கப்படும் ஆரோக்கியமான அடித்தளமே ஒரு பிள்ளையின் ஒட்டுமொத்த கல்வி வாழ்க்கையினதும் வெற்றியைத் தீர்மானிக்கின்றது. நாட்டின் பொருனாதார அபிவிருத்திக்கும் தேசிய இலக்குகளை அடைவதற்குமான பல்வேறு ஏற்பாடுகள் குறித்து சிந்திக்கின்ற போதும் அவை அனைத்துக்கும் அடிப்படையர்கவிருக்கும் முன்பள்ளிகள் குறித்த விழிப்புணர்வும் மீளாய்வும் போதியளவு இல்லாதிருப்பது கவலைக்குரியதே. எனவே எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கல்விக் கொள்கை மறுசீரமைப்புக்களிலும் மீளாய்வுகளிலும் முன்பள்ளி கல்விதொடர்பில் அதிக கவனம் எடுத்தல் அவசியமானது. அதற்கான சில பரிந்துரைகளுடன் இன்னொரு கட்டுரையில் சந்திக்கலாம்.

 

இ.சர்வேஸ்வரா B.Sc(Hons) spl in Sc & Edu(Jaffna)  MPA (PIM-SJP)

சிரேஸ்ட உதவிப் பதிவாளர்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்.

 

Advertisement

Comments are closed.