மிருதங்க வித்துவான் சிவபாதம் காலமானார்

அளவெட்டியைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் மிருதங்க வித்துவான் சிவபாதம் 02.06.2018 காலமானார்.செப்டெம்பர் 21, 1940, அளவெட்டியில் பிறந்த இவர் ஒரு திறன்மிகு மிருதங்க வித்துவான் ஆவார். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் மல்லாகம் திரு. த. ஆறுமுகம், த. இரத்தினம் ஆகியோரிடம் மிருதங்கப் பயிற்சியைப் பெற்றுப் பின்னர் இந்தியாவில் திருவாவூர் திரு. நாகராஜனிடம் கற்றுள்ளார். இவர் 1960 ஆம் ஆண்டு தனது மிருதங்க அரங்கேற்றத்தை ‘இசைமணி’ பொன் முத்துக்குமாரின் இசைக்கச்சேரி மூலம் நிறைவு செய்து தொடர்ந்து கலைவிழா, இசைவிழாக்களில் பிரபலமான வித்துவான்களுக்கும், நடன நிகழ்வுகளுக்கும் பக்கவாத்தியம் வாசித்தார்.  இவர் தவில், தபேலா, கெஞ்சிரா, கடம், கொன்னக்கோல் போன்ற தாள வாத்தியக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர். ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயது முதல் கலையார்வம் கொண்டு விளங்கினார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும், இலங்கை ரூபவாகினியிலும் உயர்தர இசைக்கலைஞராகப் பணியாற்றி உள்ளார்.இவர் பார்வதி சிவபாதம் என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை நடாத்தி வந்தார். கிளிநொச்சியில் சிவபாதம் கலையகம் என்ற பெயரில் ஒரு கலைப்பயிற்சி நிறுவனமும் இயங்கி வந்தது. இவரது திறமையைப் பாராட்டி லய வாத்தியத் திலகம் எனும் பட்டம் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது. அது போன்று பல்லியக் கலைமணி எனும் பட்டம் இணுவில் பண்டிதர் சா.வே பஞ்சாட்சரம் அவர்களால் வழங்கப்பட்டது. வலிகாமம் வடக்கு கலாசார பேரவையால் கலைச்சுடர் எனும் சிறப்புப் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. 2008ம் ஆண்டு இலங்கை கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூசண விருது எனும் உயர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இவர் பற்றிய  கட்டுரைக்கு கீழே அழுத்துக

ஐயாத்துரை சிவபாதம்

Advertisement

Comments are closed.