கலைத்துறை மாணவர்களுக்கு கதவடைக்கும் பல்கலைக்கழக கற்கைநெறிகள்

இ.சர்வேஸ்வரா
விரிவுரையாளர்
கல்வியியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

சுருக்கம்
2023/2024 கல்வியாண்டு தொடக்கம், முன்னர் கலைத்துறை மாணவர்களுக்கு அனுமதிவழங்கப்பட்ட நான்கு கற்கைநெறிகளுக்கு முற்றாக விண்ணப்பிக்க முடியாதவகையில் அனுமதித் தேவைப்பாடுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இக் கற்கைநெறிகளுக்கான மொத்த அனுமதிகளின் எண்ணிக்கை 483 ஆகும். அத்துடன் முன்னர் விண்ணப்பிக்க கூடியதாகவிருந்த இரண்டு கற்கை நெறிகளுக்கு கலைத்துறை மாணவர்கள் 2023ஃ2024 கல்வியாண்டுக்கு பின்னர் விண்ணப்பிப்பதாயின் கட்டாயமாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தை உயர்தரத்தில் தெரிவுசெய்யவேண்டியுள்ளது. இத் துறைகளுக்கான மாணவர் அனுமதி 635 ஆகும். அது போன்று வேறு மூன்று கற்கைநெறிகளுக்கு அனுமதி பெறுவதற்கான அடிப்படைத்தகமைகளில் உயர்தர கலைத்துறை பாடத்தேர்வுகளின் சேர்மானங்களில் முன்னர் இருந்த தன்மையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது பாடத்தெரிவுகளின் தன்மைகள் மேலும் குறுக்கப்பட்டுள்ளன. இவ் மூன்று கற்கை நெறிகளுக்கும் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 357 ஆகும். 2023ஃ2024 கல்வியாண்டுக்கு முன்னர் கலைத்துறை மாணவர்கள் பொதுவாக விண்ணப்பிக்கத்தக்கதாகவிருந்த ஒன்பது கற்கைநெறிகளின் அனுமதித் தேவைப்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இக் கற்கைநெறிகளுக்கான மொத்த மாணவர் உட்சேர்க்கை 1375. இதற்கு முன்னைய கல்வியாண்டிலும் குறித்த இரண்டு கற்கைநெறிகளுக்கு கலைத்துறை மாணவர்கள் விண்ணப்பிக்கத்தக்தாகவிருந்த நிலமைமாற்றியமைக்கப்பட்டு கலைத்துறை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது செய்யப்பட்டது. அவ்விரு துறைகளுக்குமான அனுமதிகளின் எண்ணிக்கை 173 ஆகும். இவற்றின் அடிப்படையில் 1548 மாணவர் எண்ணிக்கையை கொண்ட பதினொரு துறைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை கலைத்துறை மாணவர்கள் அடுத்துவந்த இரண்டு கல்வியாண்டுக்குள் இழந்துள்ளனர். இந்த நிலமை அடுத்துவரும் ஆண்டுகளில் மேலும் தீவிரமடைய வாய்ப்புண்டு. எனவே இது மிகவும் உன்னிப்பாக கவனம் கொடுக்கப்படவேண்டிய விடயமாகும்.

அறிமுகம்
இலங்கையின் கல்விமுறைமையைப் பொறுத்தவரையில் அரசாங்கப் பல்கலைக்கழகமொன்றுக்கு அனுமதி பெறுவது என்பது பல்வேறுவகைகளிலும் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக உயர்கல்வியை நிறைவு செய்தபின்னர் நிரந்தர வேலையொன்றைப் பெற்றுக்கொள்வது அல்லது மேற்படிப்புக்களை மேற்கொள்வது மற்றும் சமூக அந்தஸ்தை தக்கவைப்பது என்பன உள்ளிட்ட பல வகைளில் பல்கலைக்கழகப் பட்டம் அவசியத்தேவையாகின்றது. குறிப்பாக நிலைபேண் தண்மைமிக்க தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்ள பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு அவசியமானதாகின்றது. அதேவேளை அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் பலர் அரசாங்கமே தமக்கான வேலையையும் தரவேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பு நியாயமானதாக இல்லாவிட்டாலும் அதனைப் பூர்த்தி செய்யவேண்டும் என்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றது. அத்தகைய நடவடிக்கைகளுள் ஒன்றாக க.பொ.த உயர்தரத்தில் கற்கும் துறைகளின் அடிப்படையில் வழங்கப்படும் பல்கலைக்கழக அனுமதிகளுக்கு அப்பால்; குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான கற்கைநெறிகளுக்கு சகல துறைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களும் விண்ணப்பிக்ககூடியதாகவுள்ளது. இவ்வாறான கற்கைநெறிகளின் எண்ணிக்கை ஐம்பதை அண்மித்தாகவுள்ளது.
அதிலும் குறிப்பாக கலைத்துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் தொழில்சந்தையின் கேள்வி கருதி கலைத்துறைக்கு நேரடியாக வழங்கப்படும் வாய்ப்புக்களைவிட வேறு கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்புக்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகவுள்ளன. கலைத்துறை மாணவர்களைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகத்தில் பயிலும் பட்டப்படிப்பின் தன்மை அவர்கள் விரைவாக ஒரு வேலையைப் பெற்றுக்கொள்வதில் அதிக செல்வாக்கு செலுத்துவதாகவுள்ளது. தொழில்சந்தையில் அதிக கேள்வியுள்ள கற்கைகளைப் பயில்வது கலைத்துறை பட்டாதாரிகளின் வேலையின்மைப் பிரச்சனையை இழிவளவாக்கவும் உதவுகின்றது. இதனால் கலைத்துறையில் கற்கின்ற மாணவர்கள் உரிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தமது துறைக்கான தனித்துவமான கற்கைகளைத் தவிர்த்து விசேடமான கற்கைகளுக்கு விண்ணப்பிக்கும் தன்மை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருந்தது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிலிருந்து முன்னர் கலைத்துறை மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையதாகவிருந்த சில கற்கைநெறிகளின் அனுமதித் தேவைப்பாடுகள் மீள் பரிசீலணை செய்யப்பட்டு வருகின்றமையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் மூலம் அறியமுடிகின்றது. இவ் மீள்பரிசீலனைகள் குறித்த பல்கலைக்கழகங்களினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த கால சில அனுபவங்களின் அடிப்படையில் கற்கைநெறித் தேவைப்பாடுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கலைத்துறையும் பல்கலைக்கழக அனுமதியும்
இலங்கையில் க.பொ.த உயர்தரத்தில் அதிகளவான மாணவர்கள் கலைத்துறையைத் தெரிவு செய்கின்றார்கள் என்பது ஒரு சவாலான விடயமாகும். உயிரியல், பௌதிக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறைகளைத் தெரிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை என்பது கலைத்துறையுடன் ஒப்பிடும் போதும் மிகக் குறைவாகவேயுள்ளது. குறிப்பாக கலைத்துறை மாணவர் மற்றும் மேற்குறிப்பிட்ட துறை மாணவர் எனும் விகிதம் 5:1 எனும் அடிப்படையில் உள்ளது. கல்விக் கொள்கை வகுப்பாளர் மட்டத்தில் அதிகம் கவனம் கொள்ளப்படும் பிரச்சினையாக இது உள்ளது. கலைத்துறையைத் தெரிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல்வேறு உபாயங்கள் வகுக்கப்பட்;ட வண்ணமுள்ளன. க.பொ.த உயர்தரத்தில் தொழில்நுட்பத்துறை அறிமுகப்படுத்தப்பட்டமை இத்தகைய பிரதான உபாயமாகவிருந்தபோதும் அது அவ்வளவு தூரம் பயன்கொடுக்கவில்லை. அத்துடன் பல்கலைக்கழக கற்கைநெறிகளின் தன்மையில் கலைத்துறை மாணவர்களை விஞ்ஞானம் சார்ந்த துறைகளுக்கு அல்லது தொழில் சந்தை வாய்ப்பு அதிகமாகவுள்ள துறைகளுக்கு மடைமாற்றம் செய்யும் நுட்பமும் இன்று வரை கைக்கொள்ளப்படுகின்றது. கலைத்துறை மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத்தக்கதாகவுள்ள 11 கற்கைநெறிகளுக்கு மேலதிகமாக பொதுவான நிலையில் விண்ணப்பிக்கத்தக்க 34 கற்கைநெறிகள் கலைத்துறை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவ் 34 கற்கை நெறிகளும் பின்வரும் ஆகக்குறைந்த அனுமதித் தேவைகளுள் ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்டவையை கொண்டுள்ளன.

1. க.பொ.த உயர்தரத்தில் ஏதேனும் துறைகளில் மூன்று பாடங்களில் சித்தி
2. பல்கலைகழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கான ஆகக்குறைந்த தகமை
3. க.பொ.த உயர்தரத்தில் தெரிவுசெய்யும் பாடச்சேர்மானங்கள்
4. க.பொ.த சாதாரணதரத்தில் கணிதம்,விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறித்த பெறுபேறு
5. பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சையில் சித்தி

மேற்குறித்த அனுமதித்தகமைகளுக்குள் செய்யப்பட்டு வரும் உப மாற்றங்களின் காரணமாகவே கலைத்துறை மாணவர்கள் விண்ணப்பிக்கத்தக்கதாகவிருந்த 11 கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை அத் துறை சார்ந்த மாணவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் இழந்துள்ளனர். இருந்தும் இக் கற்கைகளுள் இரண்டு கற்கைநெறிகளுக்கு அனுமதிப்பதற்கான பாடச்சேர்மானங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள போதும் அவை இன்னும் கலைத்துறை மாணவர்கள் விண்ணப்பிக்கத்தக்கதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலைத்துறை மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிகளின் எண்ணிக்கை இழப்பு அல்லது குறைப்பு எனும் விடயத்தில் ஆரம்பகட்ட விழிப்பை ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது.

கலைத்துறை பல்கலைக்கழக அனுமதியில் ஏற்படப்போகும் மாற்றங்கள்
கலைத்துறை மாணவர்கள் விண்ணப்பிக்கத்தக்கதாகவிருந்த 11 கற்கைநெறிகளின் அனுமதித் தேவைப்பாடுகளுக்குள் மிக விசேடமான மாற்றங்கள் கடந்த மூன்று வருடங்களுக்குள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 2023/2024 கல்வியாண்டு தொடக்கம் இக் கற்கை நெறிகளுக்கு கலைத்துறை மாணவர்கள் முற்றாக விண்ணப்பிக்க முடியாத வகையிலும் அல்லது மிகவும் அரிதான சந்தர்பங்கள் உள்ள நிலையிலும் அனுமதித் தேவைப்பாடுகள் குறுக்கப்பட்டுள்ளன. பிரதானமாக நான்கு அடிப்படைகளில் இவ் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ன.

1. முற்றாக விண்ணப்பிக்க மறுக்கப்பட்ட கற்கை நெறிகள் – 03
2. க.பொ.த உயர்தர பாடச்சேர்மானத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை கொண்டிருந்தால் விண்ணப்பிக்க கூடிய கற்கைநெறிகள் – 03
3. கலைத்துறையில் குறிக்கப்பட்ட சில பாடச்சேர்மானங்களை கொண்டிருத்தல் – 02
4. ஏனைய துறைகளின் பிரதான பாடங்களில் ஒன்றைக் கற்றிருத்தல் – 03

மேற்குறித்த மாற்றங்கள் குறித்த வி;டயங்கள் தொடர்பான விரிவான விபரங்களை கற்கைநெறிகள் மற்றும் அவற்றை வழங்கும் பல்கலைகழகங்கள் அனுமதிகளின் எண்ணிக்கையில் ஆராயலாம்.
பின்வரும் கற்கைநெறிகளுக்கு கலைத்துறை மாணவர்கள் முற்றாக விண்ணப்பிக்க முடியாதவகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. தொழில்முயற்சியும் முகாமைத்துவமும்
2. விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமை
3. பேச்சும் செவிமடுத்தல் விஞ்ஞானமும்

இவற்றுள் முதலிரு கற்கைநெறிகளும் ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்றன. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சையின் பெறுபேறுகள் அடிப்படையில் இக் கற்கை நெறிகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. தொழில்முயற்சியும் முகாமைத்துவமும் கற்கைநெறிக்கு 101 அனுமதிகளும் விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமை கற்கைநெறிக்கு 107 அனுமதிகளும் கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இக் கற்கைநெறிகளுக்கு ஒரு மாணவர் விண்ணப்பிப்பதாயின் அவர் கலைத்துறையைத் தவிர்த்து பௌதிக விஞ்ஞானம்,உயிரியல் விஞ்ஞானம் அல்லது வர்த்தக துறையில் கல்வி கற்றிருக்க வேண்டும் என அனுமதித் தேவைப்பாடு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது வெளிப்படையாகவே கலைத்துறை மாணவர்களுக்கு முற்றாக கதவடைப்புச் செய்யும் ஏற்பாடாகும்.

அத்துடன் களனிப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினால் வழங்கப்படும் 75 மாணவர்களின் எண்ணிக்கையைக்கொண்ட பேச்சும் செவிமடுத்தல் விஞ்ஞானமும் எனும் கற்கைநெறி முன்னர் கலைத்துறை மாணவர்களையே அதிகம் இலக்கு வைப்பதாகவிருந்தது. குறிப்பாக பிரதான தேசிய மொழிகளை கற்கும் மாணவர்கள் அத் துறையில் அனுமதி பெறும் வாய்ப்பைக் கொண்டிருந்தனர். இருந்தும் 2023ஃ2024 கல்வியாண்டு தொடக்கம் உயிரியல் துறையில் கல்வி கற்ற மாணவர்களுக்கே இவ் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
அடுத்து கலைத்துறை மாணவர்கள் பின்வரும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அவர்கள் தமது மூன்று பாடங்களுள் ஒன்றாக தகவல் தொடர்பாடல் தொழில்நுடபப் பாடத்தை கொண்டிருக்க வேண்டும் எனும் நிபந்தனை இருக்கத்தக்க வகையில் பின்வரும் கற்கைநெறிகளின் அனுமதித் தகமைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

1. கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்
2. தகவல் முறைமைகள்
3. தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும்

கலைத்துறை மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்டப் பாடத்தை தமது உயர்தரப் பாடச் சேர்மானங்களுக்குள் கொண்டிருப்பது தற்போது மெதுமெதுவாக அதிகரித்துவருகின்றது. மேற்குறித்த கற்கைநெறிகளைப் பயில தகவல் தொடர்பாடல் தொழில்நுடப தறை சார் அடிப்படை அறிவு அவசியம் எனும் பின்னணியில் இம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கருதாலாம்.

கலைத்துறையில் கற்கக்கூடியதாகவுள்ள பாடங்களின் அடிப்படையில் பரந்தளவில் வழங்கப்பட்ட பாடச்சேர்மானங்களின் அனுமதி என்பது பின்வரும் கற்கைநெறிகளுக்கு குறுக்கப்பட்டு விசே;டமாக ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் மட்டும் அனுமதித் தேவைப்பாடாக வரையறை செய்யப்பட்டுள்ளன.
1. செயற்றிட்ட முகாமைத்துவம் –
2. மொழிபெயர்ப்புக் கற்கைகள்
வவுனியாப் பல்கலைக்கழத்தினால் வழங்கப்படும் செயற்றிட்ட முகாமைத்துவம் எனும் கற்கைநெறிக்கு வருடம் தோறும் 138 மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முன்னர் எந்தவிதமான பாடச்சேர்மான விதிமுறைகளும் அற்று க.பொ.த உயர்தரத்தில் ஏதேனும் ஒரு பாடத்துறையில் பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த தகமையைப் பூர்த்தி செய்திருக்கும் மாணவர் இக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க கூடியதாகவிருந்தது. ஆனால் 2023ஃ2024 கல்வியாண்டு தொடக்கம் குறித்த இரு பாடங்களை கற்றிருக்க வேண்டும் எனும் அவசிய நிபந்தனை அமுல்படுத்தப்படவுள்ளது. அதன் பிரகாரம் கலைத்துறையில் புவியியல், பொருளியல் பாடங்கள் மட்டும் இப் பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், சப்பிரகமுவப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழத்தினால் வழங்கப்படும் மொழிபெயர்ப்புக் கற்கைகளுக்கான அனுமதிதேவைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கல்வியாண்டு 2023ஃ2024 தொடக்கம் மொழிபெயர்ப்புக் கற்கைகளுக்கு விண்ணப்பிக்கவிரும்பும் மாணவர்கள் உயர்தரத்தில் தமிழ் அல்லது சிங்களத்தைக் கற்றிருக்க வேண்டும் என நிபந்தனை மிகக் குறுக்கப்பட்டுள்ளது. 138 அனுமதிகளை இக் கற்கைநெறி கொண்டுள்ளது.

அடுத்த பிரதான மாற்றமாக, கீழ்குறிப்பிடப்படும் கற்கைநெறிகளுக்கு கலைத்துறை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் ஆகக் குறைந்தது ஒரு பாடத்தையேனும் பௌதிக விஞ்ஞானம் அல்லது உயிரியல் விஞ்ஞானம் அல்லது வர்த்தகத் துறையின் பிரதான பாடங்களுள் இருந்து கற்று இருக்க வேண்டும் எனும் அடிப்படையில் அனுமதித் தேவைப்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன.
1. நிதிப் பொறியியல்
2. பட்டினமும் நாடும் திட்டமிடல்
3. கணக்கிடலும் முகாமைத்துவமும்
இருந்தும் மேற்குறிப்பிடப்பட்ட பாடத்தெரிவு தொடர்பான நிபந்தனையை கலைத்துறை மாணவர்கள் பூர்;த்தி செய்வது என்பது சாத்தியமற்றது என்பது யதார்த்தமான விடயம். எனவே இத் துறைகளும் கருதுகோள் அளவில் முற்றாக கலைத்துறை மாணவர் அனுமதியைத் தவிர்த்த துறைகளாகவே கொள்ளப்படவேண்டும். இத் துறைகள் மூன்றும் 254 அனுமதிகளைக் கொண்டுள்ளன.

கலைத்துறை மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கான காரணங்கள்
இக் கட்டுரையின் முன்னைய பகுதியில் அனுமதித் தேவைப்பாடுகள் மாற்றப்பட்டமை தொடர்பாக குறித்த கற்கைநெறிகளை வழங்கும் யாழ்ப்பாணம், ஊவா வெல்லஸ்ஸ மற்றும் வவுனியாப் பல்கலைக்கழகங்களின் துறைகளில் பணியாற்றும் கல்விசார ஆளணியினருடான கலந்துரையாடிய போது பின்வரும் விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது.
1. கலைத்துறையில் இருந்து இக் கற்கை நெறிகளுக்கு அனுமதி பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் குறித்த கற்கை நெறிகளைப் பின்பற்றுவதற்கு தேவையான அடிப்படை அறிவைக் கொண்டிருக்கவில்லை.
2. கற்கை நெறியில் அடிப்படை அறிவில்லாமையால் கற்றலில் இடர்படுவதுடன் மனஅழுத்தங்களுக்கும் உள்ளாகின்றனர். சிலர் பல்கலைக்கழக கல்வியிலிருந்து இடைவிலகும் தன்மையும் காணப்படுகின்றது.
3. ஒப்பீட்டளவில் கலைத்துறை மாணவர்கள் க.பொ.த உயர்தரப்பரீட்சையில் பெற்றுக்கொள்ளும் இசட் புள்ளிகள் ஏனைய துறை மாணவர்களைவிட அதிகமாகவுள்ளது. இதனால் குறித்த கற்கைநெறிகளில் கலைத்துறை மாணவர்களின் செறிவு அதிகரிக்கும் போது மேற்குறிப்பிடப்பட்ட 1 மற்றும் 2 நிலமைகளினால் குறித்த மாணவர்களுள் அனேகமானோர் இடர்படுகின்றனர். இதனால் குறித்த கற்கைநெறியின் தரம் பாதிக்கப்படுகின்றது.
4. அத்துடன் கலைத்துறையில் உயர் இசட் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் தொழில்வாய்ப்பை மையப்படுத்தி இக் கற்கைநெறிகளுக்கு வருகின்றனர். ஆனால் கற்கை நெறியில் சிறப்பான செயற்பட முடியாது போகின்ற போது அவர்கள் எதிர்காலம் பாதிப்படைகிறது. ஆனால் அவர்கள் தமக்குரிய கலைத்துறை கற்கைகளுக்கு அனுமதி பெற்றிருந்தால் அத்துறைகளில் மீதிறனான மாணவர்காளக இருந்திருப்பார்கள்.
5. கற்கை நெறியை பூர்த்தி செய்தாலும் வேலைவாய்ப்புள்ள துறைகள் கணித விஞ்ஞானத்துறையுடன் தொடர்புற்று இருப்பதால் பலர் உரிய துறைகளில் வேலைகளைப் பெறாது வேறு மார்க்கங்களை நாடுகின்றனர். இது உரிய கற்கைநெறிகள் வழங்கவேண்டிய தேசியப் பங்களிப்பை குறைக்கின்றன.
6. மொழிபெயர்ப்புக் கற்கைகளைப் பொறுத்தவரையில் மொழிசார் இலக்கணங்கள் முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளன. இதனால் உயர்தரத்தில் மொழிப் பாடங்களைக் கற்காத மாணவர்கள் பல்கலைகழக கற்றலில் இடர்படுவதுடன் கற்றலின் நிறைவில் வேறு துறைசார் பரப்புக்களில் தமது தொழிலைத் தேடுகின்றனர். இது சவாலான விடமாகவுள்ளது.
7. கலைத்துறை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனும் அரசின் கல்விக் கொள்கையை வலுப்படுத்த மாணவர்களை திசைமுகப்படுத்தவேண்டியுள்ளது. அத்தகைய செயற்பாடுகளுக்கு இத்தகைய முடிவுகள் வலுச்சேர்க்கும்.
8. கற்கை நெறிகள் சிலவற்றுக்கு உளச்சார்புப் பரீட்சை அவசியமாகின்றது. உளச்சார்பு பரீட்சைகள் அனைத்தும் ஆங்கில மொழி மூலமாகவே நடத்தப்படுகின்றன. இப் பரீட்சையிலும் விண்ணப்பிக்கும் கணிசமானளவு கலைத்துறை மாணவர்கள் சிறப்பாக செயற்படுவதில்லை. இதனால் உளச்சார்புப் பரீட்சைகளில் அதிக எண்ணிக்கையான மாணவர்களை தேவையற்ற விதத்தில் இணைத்து நிர்வாக மற்றும் செயற்பாட்டு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

நிறைவுரை
கற்கைநெறிகளுக்கான அனுமதித் தேவைப்பாடுகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் கலைத்துறையை முற்றாக தவிர்ப்பது, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத் தெரிவை அவசியமாக்குவது, கலைத்துறையின் பொருளியல் மற்றும் புவியியல் உள்ளிட்ட சமூக விஞ்ஞானத்துறை பாடங்களின் தெரிவை முதன்மைப்படுத்துவது மற்றும் தமிழ் சிங்களம் ஆகிய பாடங்களை அவசியமாக்குவது, ஏனைய துறைகளில் இருந்து பாடங்களை உயர்தரத்தில் கற்க நிபந்தனைப்படுத்துவது எனும் அடிப்படைகளில் செய்யப்பட்டுள்ளன.
பிரதானமாக இக் கற்கைநெறிகளில் கலைத்துறை மாணவர்களின் செறிவைக் குறைப்பதற்கான உத்தியாகவே இம் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது கலைத்துறையை கற்கும் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிவாய்ப்புக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் வகையில் அமைகின்றது. இக் கற்கை நெறிகளில் வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்படும் போது கலைத்துறைக்கான நேரடி அனுமதியில் போட்டித்தன்மை மேலும் அதிகரிக்கும்.
இவ் விடயம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு செய்யப்படவேண்டும். கலைத்துறையை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உரிய வகையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான பொறிமுறைகளை வகுக்க வேண்டும். அத்துடன் கலைத்துறையைத் தெரிவுசெய்யும் போது பாடத்தெரிவுகளில் அதிகம் கவனம் எடுக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தப்படவேண்டும். இதன் மூலம் கலைத்துறை மாணவர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள பல சவால்களை முகாமைசெய்ய உதவக்கூடியதாகவிருக்கும்.

Advertisement

Comments are closed.