இவரை வைத்தியநாதத் தம்பிரானுடைய வழித்தோன்றல் என்று சிலர் கருதுவதாகத் தெரிகிறது. உண்மை அப்படி யல்ல. இவர் அளவெட்டி வடக்கில் வாழ்ந்தவர். இவருடைய தந்தையார் பெயரெதுவென்பதை அறிய முடியவில்லை எனினும் இவருடைய தந்தையார் ஒரு சுதேச வைத்தியர் என்பது அறிய வந்துள்ளது.
இவர் தமது தந்தையாரிடம் சுதேச வைத்தியக் கல்வியும் டாக்டர் உவாட்டிடம் ஆங்கில வைத்தியமும் கற்று இருவகை வைத்தியத்துறைகளிலும் வல்லவராயிருந்தார். கிறிஸ்தவர்களின் தொடர்பால் இவர் சைவசமயத்தை விட்டு கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிக் கொண்டார். மதமாற்றம் பெற்றதோடமையாமல் அம்மதம் பற்றி ஆராய்ந்து அம்மதத்தில் மிக்க நம்பிக்கையுடையவரானார். இவர் தமிழ்மொழியை நன்கு கற்றதோடு அம்மொழியிற் பெரும்புலமையும் பெற்றவராக இருந்தார்.
அம்மதத்தினர் வேண்டிக் கொண்டதற்கிணங்க கனகசபைப் புலவர் திருவாக்குப் புராணம் என்றொரு நூலை இயற்றிக் கொடுத்துள்ளார். திருவாக்குப் புராணம் நயம் மிக்கது என்று சிலர் பாராட்டியுள்ளார்கள். திருவாக்குப் புராணம் ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தொரு விருத்தப் பாக்களைக் கொண்டதென்பர். அந்நூல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதெனத் தெரியவருகிறபோதும் அதன் பிரதி எதுவும் கைக்கு எட்டவில்லை.
ஒரு சொல் பல்பொருள் தொகுதி என்னும் நிகண்டையும் பல தனிப்பாடல்களையும் இவர் இயற்றியதாக அறிய வருகிறது. ஈழத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி முடியும் வரை ஈழத்தமிழகத்தில் சைவச்சார்புடைய இலக்கியங்களே படைக்கப்பட்டன. போத்துக்கேயர் காலத்தில் கத்தோலிக்க மதம் சார்பான நூல்களும் ஒல்லாந்தர் காலத்தில் அவர்களு டைய புரட்டாஸ்தாந்த கிறிஸ்த்தவ மதச் சார்பான நூல்களும் இயற்றப்பட்டன. சைவர்களாக விருந்து மரபு வழித் தமிழ் கற்று நல்லறிஞர்களாக விளங்கிய பலர் மதம் மாறித் தாம் சார்ந்த மதஞ் சார்பான நூல்களை வெளியிட்டமையை இலக்கிய வரலாறு பேசுகிறது. கனகசபைப் புலவர் 1816ம் ஆண்டு பிறந்தவர் இவர் வே.கனகசபைப்புலவர் என சதாசிவப்பிள்ளை எழுதிய பாவலர் சரித்திர தீபகம் என்ற நூலிற் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் சென்னையில் தங்கியிருந்த உவின்ஸ்லோ பாதிரியாரின் அகராதி வேலைகளுக்கும் பிற நூல்களின் தொகுப்பு வேலைகளுக்கும் உதவினார். இவர் 1873 ஆம் ஆண்டு தேக வியோகமெய்தினார். ஆறுமுக நாவலருக்கு இவர் ஆறுவயது மூத்தவர். நாவலர் தேக வியோகமடைய ஆறாண்டுகள் முன்பதாக இவர் மறைந்தார். இருவரும் ஐம்பத்தேழாண்டுகள் வரை இவ்வுலகில் வாழ்ந்தனர். இவர் மத மாற்றம் பெற்றதால் இவர் மூலம் கிறிஸ்தவர் அம்மதஞ்சார்ந்த சிறந்த நூலொன்றினைப் பெற்றுக் கொள்ளமுடிந்தது.