வைத்திய நாதத்தம்பிரான்

pulavar 2அளவெட்டியில் வாழ்ந்த புலவராக வரலாற்றாசிரியர் குறிப்பிடும் முதன்மைக்குரியவர் வைத்தியநாதத் தம்பி ரான் ஆவர். இவர் எந்த ஆதீனத்துத் தம்பிரான் சுவாமிகளாக இருந் தாரென்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆறுமுக நாவலருக்கு முற்பட்டவரெனவே வரலாற்றாசியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆறுமுகநாவலரின் குல முதல்வராகிய ஞானப்பிரகாச முனிவர்

காலத்தவர் என்றும் அளவெட்டி ஞானி எனப் போற்றப்பட்டவரெனவும் கூறுவர். இவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தவராகவேயிருக்க வேண்டுமென்று கருதுவார் கூற்றைப் புறந்தள்ளி விடமுடியாது. திருநெல்வேலி ஞானப்பிரகாச முனிவர் அண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்தவராதலால் வைத்திய நாதத்தம்பிரானும் அண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்தவராதல் வேண்டும் என்று கருதுவோரும் உளர்.

வைத்தியநாதத் தம்பிரான் அளவெட்டியில் வாழ்ந்த பேரறிஞர்களுள் ஒருவர் என்பதை மறுப்பதற்கில்லையாயினும் அவர் அளவெட்டியின் எப்பகுதியில் வாழ்ந்தா ரென்பதைத் திட்டவட்டமாகப் பேசும் சான்றுகள் கிடைக்கவில்லை. அளவெட்டி தெற்கில் தம்பிரான் வளவு என்னும் காணியுண்டு. அது சிதம்பர ஆலயத்துக்கு உறுதி மூலம் கையளிக்கப்பட்ட சொத்தென்பது தெளிவாகத் தெரிகிறது.அக்காணியே வைத்தியநாதத் தம்பிரானுக்குரியதாய் இருந்ததெனக் கருதலாம். அவர் சீவித்த காலத்தின் பின்னோ அல்லது அவர் காலத்திலேயோ அக்காணி சிதம்பர தேவஸ்தானத்துக்கு அறுதிசாதனம் முடித்துக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
வைத்தியநாதத் தம்பிரான் தமிழ், சமஸ்கிருதம் என்னும் இரு மொழி வல்லவராக விளங்கினார்.  சமஸ்கிருதத்தில் இருந்த வியாக்கிரபாதர் புரா ணத்தைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தது இவரது இருமொழிப் புலமைக்குச் சான்று பகரும். இவர் காலத்து அறிஞர்கள் பலரும் இருமொழிப் புலமை வாய்ந்தவர்களாகவே விளங்கினர். “இரு மொழிக்கும் முதற்குரவர் கண்ணுதலே” யெனச் சிவஞான முனிவர் கூறு வதைக் கொண்டு இரு மொழிகளையும் கற்றுக்கொள்வதில் அன்றிருந்தார் பெருஞ்சிரத்தை காட்டினார்களென்பதையறியலாம். பிரயோக விவேகமென்னுந் தமிழிலக்கண நூலையியற்றியவராகிய சுப்பிமணியம் தீட்சிதர் என்பார் இருமொழிக்கும் இலக்கணமொன்றே எனக்கூறினார். இலக்கணக் கொத்தாசிரியர் சுவாமிநாததேசிகர் தமிழ் மொழியை ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று கூறினார். அவர் வடமொழியில் இல்லாத னவாகத் தமிழ் மொழியில் இருக்கும் எ, ஒ, ழ, ற, ன என்னும் ஐந்தெழுத்துமே தமிழ் எழுத்துக்கள் என்ற கோட்பாடுடையவராக இருந்தார். தேவபாசை என்று கம்பன் குறிப்பிட்டது போல சமஸ்கிருத மொழிக்குத் தமிழ்  மொழியிலும் பார்க்க ஏற்றந் தந்தவர் பலராவர். தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள் கூட வடமொழியிலேயே பல நூல்களை எழுதியுள்ளார்கள். இன்று ஆங்கிலந் தெரியாதவனைக் கல்லாதவன் எனப் பொதுமக்கள் கருதுவதுபோல அன்று சமஸ்கிருத மொழியறிவில்லாதவர்கள் கல்லாதவர் என்ற கணிப்பும் இருந்தது. இதனால் மணிப்பிரவாள நடையென ஒரு நவீன நடை தமிழில் உதயமானது. வைணவ ஆழ்வார் பாடல்களுக்கு உரைவகுத்தோர் இந்த மணிப்பிரவாள நடையினையே பின்பற்றினார்கள். அந்த நடை தமிழுலகினாற் பின்பற்றப்படின் தமிழ்மொழி அழிந்தொழிந்து சிதைய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். மணி என்பது தமிழ்ச்சொல். பிரவாளம் என்பது பவளத்தைக்குறிக்கும் வடசொல். இவ்விரு மொழிச்சொற்களையும் கலந்தெழுதும் நடையே மணிப்பிரவாள நடையாகக் கொள்ளப்பட்டது. அந்நடை நெடுநாள் நில்லாது தமிழ்மக்களின் தனித் தமிழியக்கத்தால் அழிந்தது தமிழ்த்தாய் செய்த தவப்பேறே யெனலாம். வைத்தியநாதத் தம்பிரானும் வடமொழியிற் பெருவிருப்புற்றிருந்தார் என்பது மெய்யே.

வைத்திய நாதத்தம்பிரான் கண்டியில் அரசு புரிந்த முத்துச்சாமி என்னும் தமிழரசன் மேற் பிரபந்தம் பாடி அவராற் பாராட்டப்பட்ட தோடு பரிசும் பெற்றவர் என அறியவருகிறது.

Advertisement

Comments are closed.