அழகொல்லை
அழகொல்லை விநாயகர் ஆலயம்
இந்துமா கடலின் முத்தென விளங்குவது இலங்கை. இலங்கேசன் ஆண்ட இலங்கையின் வடபால் அமைந்தது யாழ்பாடிப் புகழ்பெற்ற யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்திலிருந்து காங் கேசன்துறை செல்லும் பெருஞ்சாலையில் அமைந்துள்ள மல்லாகம் சந்தியிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சங்கானை வீதியின் அலுக்கைச் சந்தியை அடைந்து அவ்விடத்தி லிருந்து கூட்டுறவாளர் வீதியினூடாகச் செல்லு மிடத்து கவினுறு மாஞ்சோலைகள் சூழப்பெற்று வனப்புற அமைந்திருப்பதே அளவெட்டி அழகொல்லை விநாயகர் ஆலயமாகும்.
அழகொல்லை விநாயகர் ஆலயத்தின் பெயர் வரக் காரணம் பற்றி நோக்கும்போது அழகொல்லை ஆலயத்தைப் புனரமைக் கவேண்டி கட்டடம் கட்டிய வேளை முதல்நாள் கட்டிய கட்டடம் அடுத்தநாள் இடிந்து வீழ்ந்திருந்ததாகவும் அதனால் ஆச்சாரியார் உள் ளிட்ட மக்கள் அனைவரும் மனம் வருந்தி விநாயகரிடம் முறையிட்ட போது விநாயகர் ஆச்சாரியாரின் கனவிற் தோன்றி கோயில் நிர்மாண அளவுப் பிரமாணத்தில் பிழை இருப்ப தாகவும் அதனால்தான் கட்டடம் இழுந்துவிழு வதாகவும் “அளவு ஓலை” ஒன்று ஓர் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாகவும் அதன் பிரகாசரம் ஆலயத்தை அமைக்குமாறு கூறியதாகவும் அதன்படி கட்டியபோது எவ்வித விக்கினங்களு மின்றி கட்டடம் பூர்த்தியடைந்ததாகவும் ஓர் வரலாறு உண்டு. இதனாலேயே அளவு ஓலை யென்பது மருவி அளவோலை என இடப்பெயராயிற்று. காலப் போக்கில் அதுவும் மருவி அழகொல்லையாயிற்று. அழகிய சோலைகள் சூழ்ந்த இடமாதலால் அழகொல்லை என்ற பெயர் உண்டாயிற்று என்று கூறுவாருமுளர்.
அழகொல்லை விநாயகர் ஆலயம் பற்றிய விபரங்கள் கச்சேரியில் உள்ள தோம்பில் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் 1845இல் கல்லால் கட்டப்பட்டு ஓலையால் வேயப்பட்டது. நல்லதம்பி ஆறுமுகம் விநாயகர் வீரகத்தி சபாபதி ஐயர் சீனிவாச ஐயர் ஆகியோரின் முயற்சியால் இக்கோவில் கட்டப்பட்டது. 1852ஆம் ஆண்டு ஆலயத் தீர்த்தக் கேணி கட்டப்பட்டது. 1928இல் ச.துரையப்பா முகதாவில் 14047 ஆம் இலக்கத்தில் கோவில்காணி தருமசாதனமாக எழுதப்பட்டது.
“வடமாகாணம் யாழ்ப்பாணம் பெரும்பிரிவு வலிகாமம் வடக்குப் பகுதி மல்லாகம் கோவிற்பற்று அளவெட்டி இறை அழகோலை நிலப்பரப்பு கோயிலுக்குரிய தருமசாதனமாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 3060-24.9.59 ஆம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் வருடத்தில் ஒருமுறை அதாவது மார்கழி மாதத்தில் பத்துத் தினங்கள் திருவிழாக்கள் நடைபெற்றன. அக்காலத்தில் ஒரு திருவிழாவிற்கு சராசரி நூறு அடியார்கள் வரை பங்குபற்றினர். தற்போது மகோற்சவம் சித்திரை மாதத்தில் பத்துத் தினங்கள் நடை பெறுகின்றன. மேலும் சதுர்த்தி திருநாவுக்கரசர் குருபூஜை ஆடிப்பூரம் நவராத்திரி கந்தஷஷ்டி ஐப்பசி வெள்ளி பிள்ளையார் கதை திருவெம்பாவை சிவராத்திரி என்பன சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
கோயிற் காணியை அன்பளிப்புச் செய்த கோயிலைக் கட்டுவித்தோர் கோயிலை நிர்வகிப்பதற்கு ஒரு சபையையும் நியமித்தனர். இந்த நிர்வாகசபையில் இருந்தவர்கள் காலமான போது அவர்களின் இடத்திற்கு 1950ஆம் ஆண்டளவில் அங்கத்தவர் பட்டியல் தயாரிக்கப்பட்டு பொதுச்சபை கூட்டப்பட்டு புதிய யாப்பு அங்கீகரிக்கப்பட்டு அதற்கமைய புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு கோவில் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. இன்று அதன் வளர்ச்சி நிலையில் உயர் கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாலயம் தாபிக்கப்பட்ட பின்னர் 1928 1966 1978 ஆகிய ஆண்டு களில் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் நடைபெற்றதை அறியமுடிகின்றது. இதற்கான சான்றுகளும் கிடைக்கப்பெறுகின்றன. தற்போது பதவியிலுள்ள நிர்வாக சபையினரும் ஊர் மக்களினதும் பெருமுயற்சியால் திருப்பணி வேலைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு கர்ப்பக்கிரகம் புதிதாகப் புதுப்பிக்கப்பட்டு ஐந்துதள அமைப்பைக் கொண்ட வானளாவிய இராஜகோபுரமும் அதன் இரு புறமும் இரு துவாரபாலகர் சிலையும் இரண்டு மணிக் கோபுரங்களும் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பரிவாரத் தெய்வங்களுக்கு கோயில் அமைத்தும் வசந்த மண்டபம் அமைக்கப்பட்டும் உள்வீதி விசாலமாக்கப்பட்டும் வெளிமண்டபத்தில் கலையரங்கொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக இரு வருடங்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் நித்திய நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. இவ்வாலயத்தில் சிவாச்சாரியார்கள் பரம்பரை பரம்பரையாக பூசை செய்து வருவதுடன் ஆசார சீலர்களாகவும் நற்பண்பு உடையவர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். சுப்பையாக் குருக்கள் அவர் பின் இரத்தினக் குருக்கள் பின் அவரது புதல்வர்கள் மகாலிங்கக் குருக்கள் மணி வாசகக் குருக்கள் ஆகியோர் ஆலய வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர். மகாலிங்கக் குருக்களே தற்பொழுது ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாராகப் பணியாற்றி வருகிறார். மேலும் ஆலய சமூகமானது சமயத் தொண்டுகள் மட்டுமமல்லாது சமூகத் தொண்டிலும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர். அறநெறிப் பாடசாலை முன்பள்ளி வகுப்புக்கள் என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கன.
தொகுப்பு :
திருமதி. சங்கீதா பிரதீபன்
இந்துநாகரிகத்துறை ஆசிரியர்