அபிவிருத்தி மன்றம்

பொருளாதாரம், சமூகவாழ்வியல், கலை, இலக்கியம், ஆன்மீகம், அறிவியல், சிந்தனைச் செல்வம், பண்பாடு, அரசியல் என பல்துறை சார்ந்தும் உலகை உற்றுப்பார்க்க வைத்த பெருமையுடையது அளவையூர். இந்தப் பெருமையெல்லாம் வெறும் பழங் கதையாய் மெல்ல மங்கி மறைந்து அடை யாளம் தொலைந்தும், வழக்கொழிந்தும் போய்விடுமோ என அஞ்சுகின்ற ஒரு காலகட்டத்தில் காலத்தின் தேவை உணர்ந்து அளவெட்டியில் மூன்று தலைமுறைகளின் அடையாளமாகத் திகழ்ந்த மூதறிஞர் பண்டிதர் க.நாகலிங்கம் அவர்கள் தொன்று தொண்டு இன்றுவரை நின்று நிலவுகின்ற பெருமையெல்லாம் தொகுத்து ஆவண மாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் பதிவில் ஓர் பின்னிணைப்பாக “காலத்தின் தேவை கருதி முகிழ்த்ததோர் எண்ணக்கரு” வான அளவெட்டி அபிவிருத்தி மன்றம் பற்றிய பதிவும் பொருந்தும் என்பது எமது நம்பிக்கை.

காலநியதி கருதி கடல் கடந்து உலகத்தின் திசை யாவும் பரந்து வாழும் அளவையூர் உறவுகள் எக்காலத்திலும், எந்நிலையிலும் தாயகத்தையும், தம் கிராமத்தையும் மறந்த வர்களல்லர். கிராமத்தின் வளர்ச்சியினையும் மீண்டும் செழுமை பெற அவாவி நிற்கும் எமது சமூகத்திற்கு உரமூட்டுவதனையும் இலக்காக வரித்து அந்நோக்கத்திற்காக அமைப்புக்களை நிறுவி செயற்படுபவர்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட அமைப்புக்களின் ஊடாகவும் தனி நபர்களாகவும் அள வெட்டிப் பிரதேசத்தின் பல்துறைசார் அபிவிருத்திக்கும், மீள் எழுச்சிக்கும் இவர்கள் ஆற்றுகின்ற பங்களிப்பு காலம் நம் இனத் திற்கு தந்து சென்ற காயத்திற்கும், வேதனை வலிகளுக்கும் மருந்தாய் அமைந்தது. அவர்கள் அனைவரும் ஆற்றுகின்ற அரும் பணிக்கு நாம் கூறும் “நன்றி” எனும் வார்த்தை பதிலுபகாரமாகாது என்பது அறிவோம். எனினும், நெஞ்சத்தெழுந்த நன்றி உணர்வை சொல்லாமல் அடக்கமுடியவில்லை என்பதால் அவர்கள் அனைவருக்கும் அளவெட்டி சமூகம் சார்பாக மனம் நிறைந்த நன்றிகள்.

புலம் பெயர்ந்து வாழுகின்ற அளவையூர் விழுதுகளின் நிதி மற்றும் அறிவு சார் பங்களிப்புடனும், வேதனை தோய்ந்த வாழ்வியல் அனுபவங்களைச் சுமந்தபடி மீண்டெழுவோம் எனும் மிடுக்கோடு தாயத்தில் வாழும் உறவுகளின் அறிவு, திறன், உழைப்பு சார்ந்த பங்களிப்போடும் எமது கிராமத்தின் பல்துறைசார்ந்த மேம்பாட்டினை எய்துவதை இலக்காகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே அபிவிருத்தி மன்றம்.

பூமிப்பந்தின் பல திசைகளிலும் பரவி, சிதறி வாழ்ந்தாலும் அளவையூரின் குழந்தைகள் என்ற உணர்வால் ஒன்றித்து இறுகக் கைகோர்த்துள்ள எம்மவரின் தன்னலங் கருதாத பங்களிப்பே எம்மன்றத்தின் ஆன்மா. இவர்கள் வழங்குகின்ற நிதி வளமும் அறிவு வளமும் சரியான திசை நோக்கிய வழிகாட்டலும் எமது பயணத்தை எளிமைப்படுத்தி நிற்கின்றன. தாமாக எம்மோடு இணைந்து நாமாகத் தீட்டுகின்ற திட்டங்கள் எல்லாம் செயலுருப் பெற உதவுகின்ற எங்கள் இயங்குசக்தி இவர்களே. அளவெட்டி மக்கள் சங்கம் – இலண்டன், அதன் தலைவர் மு.ஜெயவரதன் அவர்கள் அளவெட்டி நலன்புரிச் சங்கம் – சுவிற்சர்லாந்து, இவ் அமைப்பின் தலைவர் செ. சிவபாலன் அவர்கள், மற்றும் வெளித்தெரியாத வேராக மறைந்து நின்று இவ் அமைப்புக்களினூடாக அளவெட்டி எனும் விருட்சத்திற்கு ஊட்ட மளிக்கின்ற உன்னதர்கள் அனைவரும் எமது மன்றத்தின் – அளவெட்டி சமூகத்தின் நன்றிக்குரியவர்களே!

மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக நலன் சார்ந்த செயற்திட்டங்கள் அனைத்தும் செம்மையுற பங்காற்றுகின்ற- கிராமத்தின் நலன்சார்ந்து உழைக்கின்ற தாயக உறவுகளும் போற்றப்படவேண்டி யவர்கள். சமூக நலனுக்காக உழைப்பதை வாழ்வின் ஒரு பகுதியாக அல்லாமல் வாழ்வாகவே வரித்துக்கொண்டவர்கள் பலர். இவர்கள் ஆற்றும் பணிகளே மன்றத்தின் சாதனைகளாக மறுபதிவு பெறுகின்றன.

எல்லோரும் இணைந்து இறுகக் கரம் பற்றி மீண்டும் சிறப்பெல்லாம் மிளிர வேண்டும் எனும் நோக்கோடு மன்றத்தைக் கூட்டிணைப்பதில் முன்னின்று செயற்பட்ட, செயற்படுகின்ற சான்றோர் பலர். அவர்கள் என்றும் சமூகத்தின் மதிப்பிற்குரியவர்கள்.

மன்ற ஸ்தாபக உறுப்பினர்களில் முதன்மையானவராகவும், மன்றத்தின் முதலாவது தலைவராகவும் விளங்கிய காலஞ்சென்ற திரு.செ. வேலாயுதபிள்ளை (ஓய்வு பெற்ற முகாமையாளர், அரச உப்புக் கூட்டுத்தாபனம்) அவர்களை மனம் நெகிழும் உணர்வோடு எமது சமூகம் எப்போதும் நினைவுகூருகின்றது. பெற்றெடுத்த மகவிற்கு பெயர் சூட்டுமுன் பிரிந்திட்ட தந்தையிவர். மன்றத்திற்குப் பெயர்சூட்டுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அகாலமாய் தேகவியோக நிலையினை எய்திவிட்டார்.

வேலாயுதபிள்ளை அவர்களின் பின் மன்றத்தின் தலைமைப்பொறுப்பினை ஏற்றவர் வைத்தியகலாநிதி க. இராதேயன். இவரது தலைமையிலேயே அளவெட்டி அபிவிருத்தி மன்றம் எனப் பெயர் சூட்டப் பட்டதோடு, மன்றம் சமூக சேவைகள் திணைக்களத்தில் தன்னார்வ உதவி நிறுவன மாக (Voluntary Service Organization)) பதிவு செய்யப்பட்டது.

இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவர் களுக்கான இலவச திறன் விருத்திப் பயிற்சி நெறிகள், இரத்ததான முகாம்கள், மருத்துவ விழிப்புணர்வுச் செயலமர்வுகள், கிரா மத்தைச் சேர்ந்த தேசியமட்ட சாதனையாளர் கௌரவிப்பு, வங்கிகளுடன் இணைந்து கிராமத்தின் தொழில்முயற்சியாளர் களுக்கான இலகுமுறைக் கடன்கள் பெற்றுக் கொடுத்தல். போன்ற பல வேலைத்திட்டங்கள் இராதேயன் தலைமைவகித்த காலப் பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டன. இவர் தற்போது தனது உயர்நிலை மருத்துவக் கல்விக்காக இலண்டனில் தங்கியுள்ளார்.

மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் முதன்மையான ஒருவராகவும், மன்றத்தின் செயலாளராகவும் பணியாற்றி மன்றத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்பு நல்கி வருபவர் திரு.வை.சுப்பிரமணியம் (வை.பாலு).

வெளிநாடுகளில் உள்ள உறவுகளை மன்றத்தோடு இணைத்து அவர்களின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்வதில் பிரதான பங்காற்றுபவர் சுன்னாகம் மக்கள் வங்கி முகாமையாளராகக் கடமையாற்றிய திரு.ம. சந்திரகாந்தன். அளவெட்டி மக்கள் சங்கத்தின் (இலண்டன்) ஆலோசனைக்கமை வாக மன்றத்தை ஸ்தாபிப்பதில் முன்னின்று உழைத்தவர். மன்ற இணைப்பாளராக நீண்டகாலம் பணியாற்றி வருகின்றார்.

இவ்வாறே இவர்கள் போன்ற பலரின் பலன் கருதாத பங்களிப்புக்களின் பலத்துடன் மன்றம் தொடர்ந்தும் தனது சமூகம் நோக்கிய செயற்பாட்டில் முன்நோக்கி நகர்கிறது. கிராமத்தின் பொதுநலப் பணிகள், சமூக செயற்றிட்டங்கள், கலை இலக்கிய ஆன்மீகப் பரப்புக்கள், மனிதாபிமானத் தொண்டுகள் என பல்வேறு பரப்புக்களிலும் மன்றத்தின் வெற்றிகரமான செயற்பாட்டிற்கு ஆதரவும் அனுசணையும் வழங்கி அர்ப்பணிப்புடன் பங்காற்றுகின்ற அரச, அரச சார்பற்ற, தனியார் அமைப்புக்களும் சமூகமட்ட நிறுவனங்களும் மன்றத்தின் தூண்களாகின்றன.

வலிகாமம் வடக்கு-தெல்லிப்பளை பிரதேச செயலர், அவர்தம் ஆளணியினர், தெல்லிப்பழை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட வைத்திய அதிகாரி, அவர்கள் சார்ந்த பணியாளர்கள், மானிப்பாய் வட்ட லயன்ஸ் கழக அங்கத்தவர்கள், அளவெட்டி கோணேஸ் மற்ஸ் அக்கடமி கல்விச் சமூகம், அளவெட்டி பாடசாலைகளின் சமூகம், கிராம அபிவிருத்தி அமைப்புக்கள், சனசமூக நிலையங்கள் என மன்றத்தை தாங்கும் தூண்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

கிராமத்தின் பல்வேறு துறைகளினதும் வளர்ச்சியினைக் கருத்திற்கொண்டு இது வரை அளவெட்டி அபிவிருத்தி மன்றம் ஆற்றிய பணிகள் சிலவற்றை இப்பதிவில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றோம். இவ் வகையில் –
• பிரதேச மாணவர்களின் திறன் விருத்திக் காக ஆங்கிலமொழி, சிங்கள மொழி, கணனிப் பயிற்சி நெறிகள் கடந்த இரு வருடங்களாக இலவசமாக நடத்தப் படுகின்றன.
• இளைஞர் யுவதிகளுக்கான ஆங்கில மற்றும் சிங்கள மொழித்திறன், கணனிப் பயிற்சி நெறிகள் இலவசமாக நடத்தப் படுகின்றன.
• மருத்துவ – சமூக விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களை முன்னெடுத்தல்.
• இரத்ததான முகாம்கள், நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத் தரங்குகள், சுகாதார விழிப்புணர்வை மையப்படுத்திய சைக்கிளோட்டப் போட்டிகள் போன்றவற்றை நடாத்துதல்.
• பிரதேசத்தின் பொருளாதார அபி விருத்திக்கு பங்களிக்கும் நோக்கில் வங்கிகள், அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் கருத்தரங்குகளை ஒழுங்கமைத்து நடாத்துதலும் அனுசரணை வழங்கலும்.
• விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகளில் இலகு முறையிலான மூல தனக் கடன்களைப் பெற்றுக் கொடுத்தல். இதுவரை ரூபா 15 மில்லியனுக்கும் அதிக மான தொகை இவ்வாறு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
• பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாடசாலை அதிபர் களால் நியமனம் செய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு ஊக்கு விப்புக் கொடுப்பனவு வழங்கல்.
• கிராமத்தின் பாடசாலைகளில் பௌதீக வளத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுதல் – கணனி உபகரணத் தொகுதி, விளையாட்டு உபகரணங்கள் போன்ற வற்றைப் பெற்றுக்கொடுத்தல்.
• பொருளாதாரம், கலை, இலக்கியம், பாரம்பரிய மரபுகள், கல்வி, விளை யாட்டு, சமூகப்பணி…. போன்ற துறை களின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய எமது கிராமத்தைச் சேர்ந்த சாதனையாளர் களை கௌரவித்தலும், வெகுமதி அளித்தலும்.
• இயற்கை, போர் அனர்த்தங்களின்போது நிவாரணப்பணிகளில் உதவுதல்.
• பல்வேறு துறை சார்ந்தும் தமது வாழ்நாள் பங்களிப்பினை வழங்கிய சிரேஷ்ட பிரஜைகளை கௌரவித்து மதிப்பளித்தல்.
• சமூகத்தின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துச் சேவையாற்றி இன்று “வரலாறாகிவிட்ட பெரியோர்களை” நினைவுகூரும் முகமாக “செந்நெறி யோர்” எனும் கௌரவ விருதினை தேகவியோக நிலையில் வழங்கி அவர்களின் சமூகப் பங்களிப்பினை நினைவில் நிறுத்துதல்.

என பல்வேறு துறைசார்ந்தும் பங்காற்று வதுடன் எதிர்காலத்திலும் எமது கிராம மேம்பாட்டிற்காய் எப்பணிகள் ஆற்ற முடியுமே அத்தனையையும் ஆற்றுவதற்கு ஆர்வம் உடையவர்களாய் இருக்கின்றோம் என்ற செய்தியோடு மன்றம் எதிர்காலம் நோக்கி – கனவு காணும் இலட்சிய சமூகம் நோக்கி பயணிக்கின்றது. நீண்ட நெடும் பயணத்தில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும் என்ற அழைப்போடு….

வே. சிவராசா
(சமூக சேவை உத்தியோகத்தர்)
தலைவர்
அளவெட்டி அபிவிருத்தி மன்றம்