சீனன்கலட்டி ஞானோதயா

சீனன்கலட்டி ஞானோதயா

அளவெட்டி பழம் பெரும் சான்றோர்களைக் கொண்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சிற்றூர் தோறும் கல்விச்சாலைகளை நிறுவிய காலம் அது.ஆறுமுகநாவலரின் வேணவா இந்த உணர்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்த காலத்தில் நம்மூர்ச் சான்றோர்களான வைத்தியர் த.தாமோதரம்பிள்ளை அவர்களது காணியில் சமூக சேவையாளர்களான சரணமுத்து செல்லையாவும் அப்பாச்சாமி கணபதிப்பிள்ளையுஞ் சேர்ந்து ஒரு வாசிகசாலையை அமைத்து மக்களின் அறிவுப்பசியைப் போக்கினர்.
இச் சூழற்சிறார்கள் கல்வியறிவின்றித் தவிர்ப்பதைப் போக்கத் திருவுளங் கொண்ட நம் பெரியார்கள் இதைக் கல்வி நிறுவனமாக மாற்றியமைத்தனர். 1907ஆம் ஆண்டு ஆவணி மாதம் 28ஆந் திகதி இப் புனித கைங்கரியத்தை ஆரம்பித்தனர். திரு.வே.சபாபதிச்சட்டம்பியார் வைத்திலிங்கச் சட்டம்பியார் கணபதிப்பிள்ளைச் சட்டம்பியார் இளையதம்பிச் சட்டம்பியார் ஆகியோர் தொடக்கத்தில் இலவசமாக மாணவர்கட்குக் கல்வியை நல்கினர்.

1912இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக்கப்பட்டு திரு.எஸ்.மே.லோட்டன் முகாமையாளராகப் பணி புரிந்தார். இக் காலகட்டத்தில் மாணவர் தொகை இருநூற்றுக்கும் அதிகமாக வித்தியா பகுதியினரின் வேண்டுதற்படி மேல் வகுப்புகட்குப் புறம்பான கட்டடம் அமைக்கும் தேவையெழுந்தது. திரு.வே.சபாபதிப்பிள்ளை அவர்களது குடும்பத்தார் நல்கிய மேற்குப் புறக்காணியில் 1917இல் பெரிய மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. இக் காலகட்டத்தில் புலோலியூர் பழம்பெரும் சைவப்பெரியார் திரு.சு.சிவபாதசுந்தரம் பீ.ஏ.முகாமை தாங்கினார். அக்காலந் தொடக்கம் சி.பா.த.ப.வகுப்பு மாத்திரமன்றி மாணாக்க உபாத்தியாயர் வகுப்பும் நடாத்தப்பட்டது. இப்பாடசாலை யாழ் மாவட்டத்திலே சிறந்த தமிழ்ப்பாடசாலையாகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

1921இல் திரு.வே.சபாபதிப்பிள்ளை முகாமையாளராகக் கடமையேற்றார். 1924ஆம் ஆண்டின் பின் பயிற்சி பெற்ற பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மிக உன்னத நிலையிற் கல்வி புகட்டப்பட்டது. தீவுப்பகுதிகளிலிருந்தும் வேறு பல இடங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். பாலபண்டிதர்இ பிரவேச பண்டிதர் வகுப்புக்களிலும் தேர்ச்சி பெறும் வாய்ப்பினைப் இப்பாடசாலை நல்கியதைப் பெருமையுடன் ஈண்டு குறிப்பிடுகின்றோம்.
1935ஆம் ஆண்டில் ஆங்கில ஆசிரியர்களை நியமிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இக் காலகட்டத்தில் திரு.வே.சபாபதிப்பிள்ளை அவர்கள் காலமாக அவரைத் தொடர்ந்து திரு.வை.இராசதுங்கம் வைத்தியர் முகாமைப் பொறுப்பை ஏற்றார். அவரது பரந்த சிந்தனை எம்பாடசாலை வளர்ச்சிக்குப் பெரும் வரப்பிரசாதமாயிற்று. 1961 டிசம்பர் 15ஆம் திகதி அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்கும் வரை திரு.வை.இராசதுங்கம் இவர்களே முகாமையாளராக இருந்து பாடசாலை வளர்ச்சிக்கு வேண்டியன நல்கப் பாடசாலை பல நிறைவுடனும் பொலிந்தது.

வைத்திலிங்கம் சட்டம்பியாரின் சிரேட்ட புத்திரர் திரு.வை.நடராசா அவர்கள் 28.02.1925 முதல் 26.01.1961 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து முப்பது வருடங்கள் தலைமையாசிரியராய் இருந்து திரிகரண சுத்தியுடன் தமது உடல், பொருள் ஆவியை அர்ப்பணித்துப் பாடசாலைக்கு ஆற்றிய அரும்பெரும் தொண்டு நம் பாடசாலை வரலாற்றில் பொன்னெழுத்திற் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அன்னார் 63வயதெய்தியும் பாடசாலையையே தம் உயிராக மதிக்கும் தன்மை கண்டு நாம் இறும்பூதெய்துகின்றோம். அவரைத் தொடர்ந்து

 1. திரு.வை.நடராசா ———– 26.01.1961
 2. திரு.வீ.சின்னத்தம்பி 27.01.61 20.01.64
 3. திரு.எஸ்.சிவக்கொழுந்து 21.01.64 09.07.69
 4. சி.சின்னத்துரை 10.07.69 31.12.70
 5. திரு.ம.மாணிக்கம் 01.01.71 01.08.71
 6. செல்வி.சி.தையல்முத்து 01.08.71 18.12.72
 7. திரு.வ.பொன்னம்பலம் 01.01.74 12.11.79
 8. திரு.க.மாரிமுத்து 13.11.79 19.05.83
 9. திரு.சி.பத்மநாதன் 20.05.83 31.05.83
 10. திரு.க.திருநாவுக்கரசு 01.06.83 03.09.90
 11. திருமதி.ம.தம்பிராசா 04.09.90 29.12.90
 12. திருமதி.சி.விசாலாட்சி 30.12.90 15.01.91
 13. திருமதி.அ.முத்துக்குமாரசாமி 16.01.91 04.03.99

ஆகியோர் அதிபர்களாகப் பொறுப்பேற்று பாடசாலையைத் திறம்பட நடாத்தி வந்தனர். திருமதி.அ.முத்துக்குமாரசாமி அவர்கள் அதிபராக விளங்கிய வேளையில் 400 மாணவர்களும் 18 ஆசிரியர்களும் இருந்தனர். மிகச் சிறந்த முறையில் இயங்கி வந்த எமது பாடசாலை வருடா வருடம் ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறுவதில்லை. 20.08.1992 இல் அளவெட்டி வடக்கில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து உடுவில் மான்ஸ் கல்லூரியிலும்இ 10.03.93இல் இருந்து உடுவில் அ.மி.பாடசாலையிலும் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கையால் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து 01.02.96 இலிருந்து விக்னேஸ்வரா வித்தியாலயம் கைதடியிலும் மாலை நேரப் பாடசாலையாக இயங்கியது. 19.05.96 இன் பின் யாழ் வரக்கூடிய சூழ்நிலை உருவானதும் மீண்டும் அ.மி.பாடசாலையிலும் பின்னர் கல்விப் பணிப்பாளரின் பணிப்பின் பேரில் 10.06.96 இல் இருந்து மகாஜனக் கல்லூரியுடன் கற்றல் கற்பித்தலில் இணைந்தும் செயற்பட்டது. மகாஜனக் கல்லூரியில் இயங்கிய வேளையில் அக்கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறையை எமது பாடசாலை ஆசிரியர்கள் நீக்கியதுடன் எமது மாணவர்கள் பெரும் பயன் அடைந்தனர்.

அளவெட்டி வடக்கு கிராமத்திற்குச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டதும் 25.06.97 அன்று இராணுவத்தின் அனுமதியுடன் அதிபரும் நானும் பாடசாலைக்குச் சென்ற போது கட்டடம் முற்றாக அழிக்கப்பட்ட பாடசாலைக் காணியை காவல் அரணின்; மேல் நின்று பார்க்க முடிந்தது. அன்றிலிருந்து பாடசாலைக் காணியில் இருந்து மிதி வெடிகளை அகற்றுவதற்காக நடவடிக்கைகயை மேற்கொண்டோம். பின்னர் 07.09.1998 இல் இருந்து  சதானந்தா வித்தியாலயத்தின் ஒரு பகுதிக் கட்டடத்திலும் 18.06.99 இல் இருந்து அப்பாடசாலையுடன் இணைந்தும் இயங்கியது. 04.03.99 இல் திருமதி.அ.முத்துக்குமாரசாமி மாற்றலாகிச் செல்ல திரு.ந.அமிர்தலிங்கம் பதில் அதிபராகக் கடமை ஏற்றுச் செயற்படுத்துகின்றார். இராணுவ நடவடிக்கையால் முற்றான அழிக்கப்பட்ட எமது பாடசாலைக்கு U.N.H.C.R. நுண்கலைத்திட்ட நிதியில் புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்ட பின் 06.09.99 அன்று சுபவேளையில் பிரதேச செயலர் திருமதி.ப.திலகநாயகம்போல் அவர்களும் செயலக அலுவலர்களும் தெல்லிப்பழை உதவிக்கல்விப் பணிப்பார் திரு.ஆ.வ.கணேசலிங்கம் அவர்களும் கல்வித்திணைக்கள அலுவலர்களும் பாடசாலைச் சமூகமும் அடிக்கல் நாட்டி திரு.க.ஸ்ரீதரன் அவர்களின் கட்டட மேற்பார்வையின் கீழ் சிறப்பாகக் கட்டப்பட்டு 27.01.2000 வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
எமது பாடசாலை மீண்டும் வளர்ச்சி பெற அளவெட்டி கும்பழாவளை விநாயகப் பெருமானையும் தவளக்கிரி முத்துமாரி அம்மனையும் வேண்டி நிற்கின்றோம்.

திரு.நல்லையா அமிர்தலிங்கம்

அதிபர்
அளவெட்டி சீனன் கலட்டி ஞானோதயா வித்தியாலயம்