நான் கதை சொன்னால் கேட்காது. (சிறுகதை)
மிகச் சிறிய குழந்தை, குழந்தை என்று கூட சொல்ல முடியவில்லை. சிசுபோலத் தெரிந்தது. விஞ்ஞான – உடற்கூற்றியல் விரிவுரைகளின் போது காண்பிக்கப்படுகின்ற ஒளிப்படங்கள், காணொளிகளில் இருப்பது போல தலைபெரிதாகத் தெரிந்தது. முழுமையாக வளர்ச்சியடையாதது போலத் தெரிந்த உடலைக் குறுக்கிக்கொண்டு படுத்திருந்த அந்தக் குழந்தையின் கால்களை கத்தரிக்கோல் போல இருந்த பெரிய ஆயுதமொன்றால் யாரோ நறுக்கினார்கள். குழந்தை வேதனையில் துடிப்பது தெரிந்தது. அவர்களிடம் எந்த சலனமும் இல்லை. தங்கள் காரியத்தில் கண்ணாக சாம்பாருக்கு கத்தரிக்காய் நறுக்குவது போல அனாயாசமாக கைகளையும் வெட்டினார்கள். பெரிதாக இருந்த தலையினை பலாப்பழம் போல நீளவாட்டில் பிளந்தார்கள், ஊசிபோலத்தெரிந்த பெரிய குழாய் ஒன்றினால் அதன் மூளையை உறிஞ்சினார்கள். உறிஞ்சப்பட்ட வேகத்தில் தெறித்த வெள்ளை நிறமான திரவம் என் முகத்தில் விழுந்தது. கையால் தொட்டபோது பிசுபிசுத்து கையில் ஒட்டியது.
‘ஐயோ’ என நான் அலறிய சத்தத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் விழித்துக்கொண்டது. இரவு ஒருமணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து வெடவெட என நடுங்கியபடி நிற்கும் என்னை எல்லோரும் வினோதமாகப்பார்த்தார்கள். மனைவி அர்ச்சனா அனுதாபத்துடன் தலைதடவி ‘என்னப்பா ஏதும் கனவு கண்டனிங்களோ?’ என்று ஆதரவாகக்கேட்டாள். பிள்ளைகள் அரைத்தூக்கத்தில் மலங்க மலங்க விழித்தார்கள்.
மாமனார் சாதாரணமாக ‘என்ன தம்பி ஏதோ கடிச்சுப் போட்டுதே ? என்று விசாரித்தபோது எனக்கு ஒருவிதத்தில் அவமானமாக இருந்தது. அவருடைய கணிப்பில் நான் கனவு கண்டு நடுநிசியில் ஐயோ என்று சத்தமிடக்கூடிய நபரல்ல. எதற்கும் அஞ்சாத பருத்திவீரனாக, சாமுராயாக அவருக்கு என்னை விம்பப்படுத்துவதில் இதுவரையில் நான் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றேன். இப்போது கனவுகண்ட விடயத்தை சொல்லி இதுவரை கஷ்டப்பட்டு சிறுகச்சிறுக கட்டிய மாயவிம்பத்தை உடைத்துவிடக்கூடாது என உள்மனம் எச்சரித்தது.
ஆனாலும் சூழ்நிலைக்கேற்ற பொய் ஒன்றினை தேடிப்பிடிக்கக்கூடிய வல்லமை இந்தச்சூழ்நிலையில் என்னிடம் இல்லை. இன்னும் கனவு தந்த பீதியிலிருந்து முழுமையாக விடுபடாமல் பயம், அருவருப்பு, பதட்டம் என்று கலவையான உணர்வுகளால் நடுங்கிக்கொண்டிருந்த என்னால் தெளிவாக சிந்திக்க முடியாமலிருந்தது. என்னை சரியாக மதிப்பிட்டு ‘கனவு கண்டனிங்களோ? என்று கேட்ட மனைவியின் மீது பொறுக்கமுடியாத கோபம் வந்தது. கனவுதந்த பயஉணர்வும், கத்திவிட்டேன் எனும் அவமான உணர்வும் கோபமாக வடிவமாற்றம் பெற மற்றவர்களுக்கு பதில் சொல்வதைத்தவிர்த்து
‘ மடைத்தனமான கேள்வி கேட்டுக்கொண்டிருக்காமல் பிள்ளையளை முதல் அறைக்கு வெளியிலை கொண்டு போ ‘
என்று சீறியபடி தலையணை, படுக்கை விரிப்பு எல்லாவற்றையும் விரித்து உதற ஆரம்பித்தேன். உடல் பயத்தினால் இப்போதும் நடுங்கிக்கொண்டிருந்தது.
‘தம்பி கவனம்! என்னெண்டு தெரியாமல் அவசரப்படாதையுங்கோ, நீங்களும் முதல் வெளியாலை வாங்கோ, நான் பாக்கிறன். இஞ்சாலை வாங்கோ ! எதிலை கடிச்சது பாப்பம் காயம் ஏதாவது இருக்கோ ‘
கையில் உடைந்து போன தும்புத்தடியுடன் மாமனார் நிற்க கடித்த ஜந்துவையோ கடிக்கப்பட்ட காயத்தையோ காட்டுவதற்கு மார்க்கம் தெரியாமல் அவசரப்பட்டு ஆடிய நாடகத்தின் அபத்தம் புரிந்தது. காட்ட முடியாத இடத்தில் காயம் என்று இன்னொரு பொய் சொல்ல வேண்யிருந்ததுடன் அடிக்கடி பின்புறத்தை தடவி வேதனையுடன் ஆ……..ஊ…… என்று முனகவேண்டியுமிருந்தது. முற்றான தேடுதல் வேட்டை நடந்தபோதும் பேரழிவு ஆயுதங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படாமல் அவர் வெறுங்கையுடன் திரும்ப, அந்த இரவு என்னைத்தவிர்ந்த எல்லோருக்கும் எந்த மறைவில் என்ன இருக்குமோ என்ற பயத்துடன் கழிந்தது.
வயிற்றில் இருந்த கட்டி வெடித்ததால் இறந்த பெண்ணைக்கூட ‘சட்டவிரோத கருக்கலைப்பால் இறந்தாள்’ என செய்தி வெளியிட்டு தம்மை பிரபல்யப்படுத்திக் கொள்வதுடன் என்னைப் போன்றவர்களை கிளுகிளுப்பூட்டும் ஊடகங்களின் செய்திகளும் விடுப்பு அறியும் என்னுடைய இயல்பான பலவீனமும் சேர்ந்து இவ்வளவு பயங்கரமான கனவினைத்தோற்றுவித்திருக்க வேண்டும்.
என்னுடைய நேற்றைய நாட்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நண்பர்கள் கூடும் இடங்களில் பேச்சு இணையத்தள செய்திகள் முகநூல் இடுகைகள் பற்றியதாகவே அமைந்துவிடும். இப்படித்தான் அன்றொருநாள் அரட்டையாகத் தொடங்கிய பேச்சு ‘முறையற்ற கர்ப்பத்தை கலைக்க முயன்றதால் இறந்துபோன பெண்களை’ப்பற்றிய விடயத்தில் வந்து நின்றது. சட்டவிரோதமான கருக்கலைப்புமுறைகள் பற்றி எங்கள் எல்லோராலும் ‘டொக்ரர்;’ என்று கேலியாக அழைக்கப்படும் வாகீசன் விரிவுரை நடாத்த அப்போது அறிந்த விடயங்களின் ஒரு பகுதி இன்று இரவு ஒருமணிக்கு கனவாக மலர்ந்து என்னைக் கதிகலங்க வைத்திருக்கிறது. நின்று கொல்லும் என்பது இதுதானோ?
இந்தக்கனவு பற்றி சந்தர்ப்பம் கிடைத்தால் நாளைக்கு மைதிலிக்கு சொல்ல வேண்டும்
@@@@@ @@@@@ @@@@@
‘மைதிலி’ இன்று போர் தின்ற பூமியின் ஒரு குறியீட்டு வடிவம். என்னை விட மூன்று வயது இளையவள், எனது உறவினரும் கூட, ஒரு காலத்தில் அவள் எனது கனவுக்கன்னியாக இருந்த கதை எனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் வலிகாமத்திலிருந்த மக்கள் ஒட்டுமொத்தமாகக் கலந்துகொண்ட மெல்ல நடத்தல் போட்டியில் எங்கள் குடும்பமும் தென்மராட்சி வரையில் மைதிலியின் குடும்பத்தோடு இணைந்து கலந்து கொண்டது. கொட்டித் தீர்த்தமழையிலும் நாவற்குழிப்பாலத்தில் ஏற்பட்ட சனநெரிசலிலும் மைதிலியும் சேர்ந்து வருகிறாள் எனும் நினைப்பில் இடப்பெயர்வுகூட எனக்கு மகிழ்ச்சியானதாகவே இருந்தது. ஊரில் இருக்கும் போது பல தடவைகள் கவிதை எழுதியும், கடிதம் எழுதியும் பயத்தில் கொடுக்காமல் விட்டு ஒத்திவைக்கப்பட்ட எனது காதல் பிரகடனத்தை இந்த இடம்பெயர்வு வேளையிலாவது தருணம் பார்த்து பிரகடனப்படுத்தி விடவேண்டும் என்ற தீர்மானம் மனதில் உருவாகியிருந்தது.
‘பாலா! என்னோடை வேலை செய்த ஒருவிதானையார் வரணியிலை இருக்கிறார், நாங்கள் அவற்றை வீட்டைதான் போவம் எண்டு நினைக்கிறம் நீங்களும் எங்களோடை வாருங்கோவன்’
எனது தந்தையார் கொடிகாமம் சந்திக்கு அண்மையாக மைதிலியின் தகப்பனாரிடம் அபிப்பிராயம் கேட்டபோது மனதில் எழுந்த
‘ இவர் என்ன மடைத்தனமாய் கதைக்கிறார், இதுவரைக்கும் எங்களோடை வந்தவை இனியும் நாங்கள் போற இடத்துக்குத்தானே வருவினம், நீங்களும் எங்களோடை வாருங்கோவன் என்று இப்ப கேட்டால் இனி எங்களோடை வரவேண்டாம் எண்டு சொல்லுறதாய் நினைக்க மாட்டினமே’
என்ற எனது சந்தேகத்தை யாரிடமும் கேட்காமலேயே விட்டுவிட்டேன்.
‘ இல்லை அண்ணை, எனக்கு இவவின்ரை ஒண்டைவிட்ட தமையன் ஒருத்தர் கிளாலியிலை இருக்கிறார்;, நாங்கள் அங்கை போவம் எண்டுதான் யோசிச்சு வெளிக்கிட்டனாங்கள், நீங்கள் வரணிக்குப் போங்கோவன், பக்கத்திலைதானே! நான் இவையளைக் கொண்டுபோய் கிளாலியிலை விட்டிட்டு எல்லாம் சீராக்கிப்போட்டு நாளை, நாளையிண்டைக்கு வந்து உங்களைச் சந்திக்கிறன், நாலைஞ்சு நாளிலை திரும்பிப்போகலாம் எண்டும் சொல்லுகினம்’
மைதிலியின் தகப்பனார் சொன்ன பதில் ‘ காதல் மீன்கள் இரண்டில் ஒன்றை கரையில் தூக்கிப்போட்டான்’ என்று சொன்ன வைரமுத்துவின் வார்த்தைகளுக்காக கண்ணீர் சிந்த வைத்தது. மற்ற மீனிடம் எந்தச்சலனமும் இல்லை என்பது அதிக வேதனையைக் கொடுத்தது. அந்த நேரத்தில் எல்லோரும் பசியாலும் களைப்பாலும் நடையாலும் நலிந்திருக்க யாரும் எங்கேயும் அழுகின்ற சுதந்திரம் இருந்தது.
அம்மா மைதிலியின் தாயாரிடமும் அப்பா அவளின் தந்தையிடமும் விடைபெற்றுக் கொண்டு சந்தியிலிருந்து இடதுபுறமாக பருத்தித்துறை வீதியால் பயணத்தை தொடர எத்தனிக்க, நான் பார்வையால் மைதிலியிடம் விடைபெற முயற்சிக்க, அவள் எந்த சலனமும் இல்லாமல் வேறு எங்கோ பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘தனிநாட்டுப்பிரகடனம் செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடிவிடுவது போல’ காதல் பிரகடனம் செய்து விட்டு அவ்விடத்தை விட்டு ஓடிவிடலாமா என்றுகூட யோசித்தேன். அன்று பார்த்த மைதிலியை எனது இரண்டாவது மகள் மைதிலி பிறக்கும் வரை பார்க்கக் கிடைக்கவேயில்லை.
எல்லாம் கனவுபோல பதின் நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன, பதின் நான்கு ஆண்டுகள் போனால் ஒரு சந்ததியின் காலம் முடிந்து அடுத்த சந்ததியின் காலம் வந்துவிடுமாம். பழைய விடயங்கள் மறைந்தும் மறந்தும் போய் முக்கியத்துவமிழந்து புதியவை முக்கியத்துவம் பெற்றுவிடும், மக்கள் தங்கள் பழைய தலைவர்களை மறந்து புதியவர்களை போற்றத் தொடங்கிவிடுவார்களாம், இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இராமனிடம் கைகேயி பதின் நான்கு ஆண்டுகள் வனவாசம் போய்விட்டு அயோத்திக்கு மீண்டும் வரும்படி கேட்டாள் என்று சொல்கிறார்கள்.
அந்த இராமனும் மைதிலியும் அயோத்திக்கு திரும்பிய போது என்னவெல்லாம் மாறியிருந்ததோ தெரியவில்லை. ஆனால் இந்த மைதிலி ஊருக்குத் திரும்பியபோது கைகேயி நினைத்தபடியே எல்லாம் நடந்திருந்தது.
@@@@@ @@@@@ @@@@@
ஏறத்தாள மூன்று வருடங்கள் இருக்கும், ஒருநாள் அப்பா ஒருவித பதட்டத்தோடு வந்தவர்
‘ இஞ்சையப்பா எங்கை நிக்கிறீர்’ என்று அம்மாவைத்தேட உடனே பதில் கிடைக்காத வெறுமை அவரை அதிகம் கோபப்பட வைத்தது,
‘எங்கைபிள்ளை மாமி அவளுக்கு காதும் கேட்குதில்லை’ என கோபத்தை சிறிது தணிக்கை செய்து மருமகளிடம் திசை திருப்பினார். இப்போது சிலகாலமாக அப்பா வழமைபோல இல்லை, சிறிய விடயங்களுக்கெல்லாம் அதிகம் கோப்படுகிறார், தவறுதலாக நிலத்தில் சிந்திவிட்ட சோற்றுக்காக, குழந்தைகள் குடிக்காமல் மீதி வைத்த பாலுக்காக கோபப்படுகிறார். கிழக்கு வானத்தை வெறித்துப் பார்த்தபடி அவர் பேசும் பேச்சு தொடுவான தூரத்தில் அவரிடம் யாரோ சோற்றுக்கும் பாலுக்கும் கையேந்தி நிற்பது போலவும் அவர் கொடுக்கமுடியாது தவிப்பது போலவும் ஒரு பிரமையைத் தரும்.
‘ என்னப்பா ஏன் கத்துறியள் நான் றோட்டிலை மீனுக்கு நிண்டனான்’ அம்மாவின் விளக்கத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.
‘ துர்க்கையம்மன் கோயிலிலை குழந்தைப்பிள்ளையள் உள்ள பொம்பிளையள், கர்ப்பமாய் இருக்கிற பொம்பிளையளை கொண்டு வந்து விட்டிருக்கினமாம். சொந்தக்காரரிட்டை பொறுப்புக் குடுக்கப் போகினமாம், எங்கடை பாலான்ரை மகளும் வந்திருக்கு, இப்பதான் சின்னத்தம்பியண்ணை சொன்னவர், ஒருக்கால் உவன் தம்பி கோபியைக் கூட்டீக்கொண்டுபோய் பாத்துக்கொண்டுவா, நான் வரயில்லை, வந்தால் ஆக்களுக்கு முன்னுக்கு அழுதுபோடுவன்.’
நான் என்னுடைய முப்பதைந்து வருடத்தில் இப்படி அப்பாவைப் பார்த்ததில்லை. நான் அழுதுவிடுவேன் என்றுசொல்லும் போதே அழுதார்.
‘ உடனை எங்களோடை அனுப்புவினமாமோ? அங்கை ஆரோடை கதைக்க வேணும்’
நிலைமை விளங்காமல் அம்மா விளக்கம் கேட்பதாகப்பட்டது. வீட்டு விடயங்கள் எல்லாம் அப்பாவே நிர்வகித்துப் பழகிப்போனதால் பொறுப்பு என்பது அம்மாவிற்கு பயமான விடயமாகி விட்டது.
‘ அதுதானே தம்பியைக்கூட்டிக் கொண்டு போகச்சொல்லுறன், அங்கைபோய்ப்பாத்தால் தெரியும்தானே. அந்தப்பிள்ளை தாய், தகப்பனையும் பிள்ளையையும் துலைச்சுப்போட்டு, மனிசனையும் விட்டிட்டு கைக்குழந்தையோடை வந்து இறங்கியிருக்குது. சொந்தக்காரர் எண்டு எங்கடை விலாசம்தான் குடுத்திருக்கிறாளாம், முதல் போய் ஆறுதலுக்கு கதையுங்கோ, பிறகு மற்றதுகளை யோசிக்கலாம்’
அப்பா அதிர்ச்சியான இத்தனை தகவல்களையும் அநாயாசமாக அள்ளி வீச வீடே ஆடிப்போனது.
தொண்ணூற்றாறில் வன்னிக்குப்போய்விட்ட மைதிலியின் தகப்பனார் அங்கேயே மைதிலியின் கல்யாணத்தையும் நடாத்தி விட்டார், இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் ஏற்பட்ட சமாதான காலத்தில் ஊரிலிருந்த வீட்டைத்திருத்தம் செய்து வைத்திருந்த போதிலும் மகளுக்கு உதவியாக துணுக்காயிலேயே தங்கிவிட்டார்.
இரண்டாயிரத்து ஒன்பதில் துணுக்காயில் தொடங்கி மல்லாவி மாங்குளம் கரிப்பட்டைமுறிப்பு என வட்டுவாகல் வரை ஓடிய மரதன் ஓட்டத்தில் தந்தை, தாய், குழந்தை என ஒவ்வொருவராகத் தவணைமுறையில் தவறிவிட ஒரு மூன்றுமாதக் கைக்குழந்தையும் கணவனும் மட்டும் எஞ்சிய கதையை மைதிலி அம்மாவோடு பகிர்ந்து கொள்ள நான் அவள் குழந்தையைப் பார்த்தபடி ஏதோ வெறுமையை உணர்ந்து உறைந்து போயிருந்தேன்.
மைதிலி தனது தந்தையார் வீட்டில் குடியேற நினைத்த போதும் அப்பா அந்த தீர்மானத்தை எவ்வித பரிசீலனையும் இன்றி நிராகரித்தார்,
‘ பிள்ளை எனக்கு பொம்பிளைப்பிள்ளையள் இல்லை, உன்னை என்ரை பிள்ளையா நினைச்சுத்தான் சொல்லுறன், உன்ரை மனிசன் விடுதலையாகி வரும் வரைக்கும் நீயும் பேரப்பிள்ளையும் என்ரை வீட்டிலைதான் இருக்கோணும், மகனும் மருமோளும் அவை தங்கடை வீட்டிலை இருப்பினம், அதைப்பற்றிப் பிரச்சினையில்லை’
அப்பாவின் தீர்மானத்திற்கமைவாக நானும் மனைவியும் குழந்தைகள் இருவரும் எங்கள் வீட்டிலிருந்து அருகில் உள்ள எங்கள் சீதன வீட்டிலிருந்த மாமா மாமியுடன் குடியேற வேண்டியதாயிற்று,
மைதிலியின் குழந்தை ஆரூரனுக்கு இப்போது மூன்று வயதாகி விட்டது. இப்போது அப்பா அடிவானத்தை வெறித்துப் பார்ப்பதில்லை. சிறிய விடயங்களுக்கெல்லாம் கோபப்படுவதில்லை, ஆருரனும் எனது பிள்ளைகளும் சிந்துகிற சோற்றுக்காக அவரே கோழிகளை கூப்பிடுகிறார், மீதி வைக்கும் பாலை பூனைக்கு ஊற்றுகிறார்.
மைதிலியின் கணவர் செந்தூரனை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதா? அல்லது புனர்வாழ்வளிப்பதா? என்று தீர்மானிப்பதற்கிடையிலேயே இரண்டு வருடங்கள் உருண்டோடியிருந்தது. தீர்மானம் எடுக்க வேண்டியவர்களுக்கு இதுமட்டும்தான் வேலை என்று இல்லைத்தானே. ஆயிரம் வேலைகளுக்கிடையில் தனியொரு குடும்பத்தின் கண்ணீரைக்கவனிக்க அவர்களுக்கு அவகாசமில்லாதிருக்கலாம்.
வந்த ஆரம்பத்தில் மைதிலி என்னோடு அதிகம் பேசுவதில்லை, என்னோடு மட்டுமல்ல எல்லோருடனும் அவ்வாறே நடந்து கொண்டாள், கண்களில் எப்போதும் ஒருவித பயமும் மருட்சியும் தெரிந்தது. இப்போது அவளிடம் சோகத்தை அதிகம் அவதானிக்க முடிவதில்லை. பத்திரிகைகள், இணையங்களில் வருகின்ற ‘சட்டவிரோத கருக்கலைப்பு உயிரைப்பறித்தது’ ‘தொலைபேசிக் காதலால் கற்பு தொலைந்தது’ ‘கைவிடப்பட்ட சிசுவை பொலிஸ் மீட்டது’ ‘கல்விநிலையத்தில் கல்யாணமான ஆசிரியருடன் காதல் மலர்ந்தது’ போன்ற தலைப்பிலான செய்திகள் பற்றிக்கதைக்கும் அளவிற்கு எங்கள் இருவரிடையேயும் நட்பு பலப்பட்டிருந்தது.
இப்படியான செய்திகள் எனக்கு அதிகம் கவர்ச்சியானதாகத் தெரிகிறது. என் போன்ற வாசகர்களின் ரசனையறிந்து இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறாத நாட்களில் ஏற்படும் தட்டுப்பாட்டினை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பெருந்தன்மையுடன் நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி, ராஜஸ்தான், ஆந்திரா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளையாயினும் இட்டு நிரப்பி மேலுள்ளவாறு தலைப்பிட்டு சில ஊடகங்கள் தமது சமூகப்பணியினை இடையறாது தொடர்கின்றன.
இந்த செய்திகளை வாசிக்கின்றபோது மனதின் எங்கோ ஒருபகுதியில் ஒருவித கிளர்ச்சியும் விபரீதமான சில எண்ணங்களும் எழுவதைத் தவிர்த்துவிட முடிவதில்லை. இவ்வாறான செய்திகளை தொடர்ச்சியாக வாசிப்பதாலோ தெரியவில்லை யாழ்ப்பாணச்சமூகத்தை இந்த சகதியிலிருந்து இனி மீட்கமுடியாது என்பது போலவும் யாழ்ப்பாணத்தில் ஆண் துணையில்லாத பெண்கள் எல்லோரும் கெட்டுப்போவதற்காக வரிசையில் காத்திருப்பது போலவும் ஒரு கருத்தேற்றம் என்னிடம் உருவாகியிருந்தது. மைதிலி மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது என்று நம்பினேன்,
இப்போதெல்லாம் இப்படியான விடயங்ளைப்பற்றிய நினைவுகளும் சலனங்களும் வரும்போது மைதிலியின் நினைவும் கூடவே வருவதனைத் தவிர்க்க முடிவதில்லை. இவற்றைப்பற்றிக் கதைப்பதற்கான சந்தர்ப்பங்களை நானே வலிந்து உருவாக்கிக்கொள்கிறேன். ஆனால் அவளிடமிருந்து பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிரிப்புத்தான் பதிலாகக் கிடைக்கின்றதே தவிர அபிப்பிராயங்களை அறிந்து கொள்ள முடிவதில்லை.
என்னிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையிலும் இப்படியான கருத்துநிலை ஏற்பட்டிருப்பது போலவே தெரிந்தது.
அன்றொருநாள் கதைக்கும் போது
‘யுத்தம் நடந்த காலத்திலை எல்லாரும் பயத்திலை ஒரு செயற்கையான ஒழுக்கத்தோடை இருந்தினம், இப்ப அது முடிஞ்சுபோய்ச்சு, சாப்பாடு, தண்ணி மாதிரி இதுகும் மனிசன்ரை அடிப்படைத்தேவைகளிலை ஒண்டுதான், தேவை இருக்கிறவை அத்துமீறத்தான் செய்வினம், செய்ய வேண்டாம் எண்டு சொல்லுறது எடுபடாது, வேணுமெண்டால் பாதுகாப்பாக நடந்து கொள்ளுற முறைபற்றி சொல்லிக்குடுக்கலாம், வெள்ளைக்காரன் அதைத்தானே செய்யிறான், நாங்கள் தான் பழங்கதை பேசிக்கொண்டு திரியிறம்’ என்று சொன்ன ‘டொக்ரர்;’ வாகீசனின் வாதத்திலும் உண்மை இருப்பது போலத்தான் பட்டது.
கடந்த காலங்களில் சில விடயங்களைப்பற்றி இவையெல்லாம் மிகப்பாரதூரமான குற்றச்செயல்கள் எனக்கொண்டிருந்த எனது அபிப்பிராயம் மெல்ல மெல்ல மாற்றமடைந்து குற்றச்செயல்கள், கலாசாரசீரழிவுகள், சமுதாயமீறல்கள், தனிமனிதபலவீனங்கள், சமூகத்தில் சாதாரணமாகக் காணப்படக்கூடிய அம்சங்கள் என்ற விதமாக அவற்றின் கனதியும் குறைந்து கொண்டே போய், சிலவேளைகளில் சில சலனங்களும் தோன்றிவிடுகின்றது.
அன்றொருநாள் ‘பிறந்தகுழந்தையைக் கொன்று புதைத்த தாய் கைது செய்யப்பட்டதாக’ பத்திரிகைச்செய்தி வந்திருந்த ஒரு வெள்ளிக்கிழமை. மாலை நேரம் அம்மா கோயிலுக்குப் போயிருக்க அப்பாவும் இல்லாத தனிமையில் மைதிலியும் ஆரூரனும் மட்டும் வீட்டிலிருக்க அங்கு சென்ற என்னிடம் இயற்கைக்கு மாறான ஒரு பதட்டமிருப்பதை என்னாலேயே உணர முடிந்தது. முகத்தில் வெப்பமும், உதடுகள் உலர்ந்து போய் வரட்சியும், உடலிலும் ஒருவித படபடபடப்பும், சுவாசத்தில் ஒரு ஒழுங்கின்மையும் தெரிந்தது.
நானாக வலிந்து பத்திரிகைச் செய்தி பற்றிய கதையினை
‘இண்டைக்கு பேப்பர் பாத்தனிங்களே! மனிசன் தடுப்பிலை இருக்கிற ஒரு பொம்பிளை குழந்தை பெத்து வீட்டுக்குள்ளை தாட்டிருக்குது’என்று ஆரம்பிக்க
‘இப்ப கொஞ்சக்காலமாய் நல்லவிசயங்களைப்பற்றி யோசிக்கிறதையும் வாசிக்கிறதையும் விட்டிட்டியள் போலை கிடக்குது’
என்ற பதிலில் தெரிந்தது கேலியா? அனுதாபமா என்று ஊகிக்க முடியவில்லை.
‘இப்பிடியான விசயங்களைப் பற்றி எழுதுறவையும் பேசிறவையும் இல்லாட்டில் நாட்டிலை இவ்வளவு அநியாயம் நடக்காது. இவங்கள்தான் சும்மாயிருக்கிறவைக்கும் ஐடியா குடுக்கிற ஆக்கள். பொது இடங்கள், வேலைத்தலங்கள், கல்விக்கூடங்களிலை எல்லாம் பாலியல் சீர்கேடுகள் கொடிகட்டிப்பறக்குது எண்டது மாதிரியான பேட்டி குடுக்கிற ஆக்கள் கனபேர் இந்த விசயங்களைத் தடுக்கக்கூடிய அதிகாரமும் தடுக்கவேண்டிய பொறுப்பும் உள்ளவை, இந்தச்சமூகத்துக்கு எதிர்காலத்தைப்பற்றின நம்பிக்கையைக் குடுக்கவேண்டிய இவையளே இப்பிடி பொறுப்பில்லாமல் நடந்தால் இந்த சமூகத்தை ஆர் வழிநடத்தப்போகினம்,’
என்ற அவளின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளும் மனநிலையில் இப்போது நான் இல்லை. அன்றொருநாள் மூட்டி விட்ட விரகதாப அக்கினி இப்போது கிடைத்த தனிமையில் கொழுந்து விட்டு எரிய எங்கள் உரையாடலுக்கு தடையாக இல்லாமல் ஒரு ஓரமாக விளையாடிக்கொண்டிருந்த ஆரூரனை திருப்தியோடு பார்க்கின்றேன்
தடுப்பு முகாமில் உள்ள செந்தூரனைப் பார்ப்பதற்காக வெலிக்கந்தவிற்கு அப்பா முதற்தடவை மைதிலியை அழைத்துச்சென்றிருந்தார். அதன் பின்னர் ஒருதடவை நான் வேலை விடயமாக மட்டக்களப்பு செல்ல வேண்டியிருந்ததால் மைதிலி; என்னுடன் வெலிக்கந்தவிற்கு வந்தாள், திரும்பும் வழியில் பஸ் பயண இருட்டில் முதற்தடவையாக நான் அத்துமீற நாகரிகமாக கையை விலக்கினாள். மணிக்கட்டில் விழுந்த சூடான இரு நீர்துளிகள் அதற்கு மேல் செயற்படாமல் என்னைக்கட்டிப்போட்டது. அப்போது அவளிடம் நான் பார்த்த நிதானம் அதிசயிக்க வைத்தது. அந்த தீட்சண்யமான பார்வையும் நிதானமும்தான் அவளின் பலம்.
அதற்குப் பிறகு அந்தச்சம்பவத்தைப்பற்றி மறந்து விட்டவள் போல நடந்து கொண்டாள், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதைப்பற்றிப்பேசவில்லை, அதன்பிறகு இன்றுதான் இப்படி ஒரு தனிமை கிடைத்திருக்கிறது.
வேறு பெண்களோடு நான் கொஞ்சம் சிரித்துப் பேசினால் கூட முகஞ்சுழிக்கும் எனது மனைவி அர்ச்சனா, மைதிலியின் விடயத்தில் மட்டும் அதிகம் தலையிடுவதில்லை, இதைப்பற்றி ஒருநாள் பொறுக்க முடியாமல் நான் கேட்டபோது
‘ அண்ணனோடை தங்கைச்சி பழகிறதைப்பற்றி கதைக்கிறதுக்கு என்ன இருக்குது’ என்ற அவளின் பதிலால் நான் உள்ளுர அவமானத்தால் கருகிப்போனதை அவள் உணர்ந்திருக்க நியாயமில்லை.
தேநீர் கொடுத்தவளின் கரங்களை தேநீர்குவளையோடு சேர்த்து நான் இறுகப்பற்ற வெடுக்கென உதறினாள். ‘கோபி’ எந்த வித பதட்டமும் இல்லாமல் வாழ்க்கையில் முதற்தடவையாக என்னைப் பெயர் சொல்லிக்கூப்பிட்டாள்
‘எனக்கு கவலையாய் கிடக்குது கோபி! , என்னை நினைச்சு இல்லை, என்னைக் காப்பாற்றிக்கொள்ள எனக்குத் தெரியும், எனக்கு அம்மா, அப்பா , அர்ச்சனா இருக்கினம்;; நாளைக்கு செந்தூரன் விடுதலையாகி வந்தால் எனக்கு விடிஞ்சிடும். ஆனால் நீங்கள்தான் இப்பிடியே போய் இருளுக்கை போயிடுவியளோ எண்டு நினைக்க கவலையாய் கிடக்குது. அதுகள் உங்களை கோபுரத்திலை வைச்சிருக்குதுகள், நீங்கள் சகதிக்குள்ளை போயிட்டால் நாளைக்கு அர்ச்சனாவையும் சேர்த்து எல்லாரையும் சந்தேகப்படச் சொல்லும், உங்களுக்கு வாழ்க்கை வேதனையாய் போயிடும்’
மைதிலியை நிமிர்ந்து பார்க்க வெட்கமாக இருந்தது. என்னிடம் யாழ்ப்பாண பெண்கள் பற்றி உருவாகியிருந்த அசிங்கமான கற்பனை விம்பங்களும் , யாழ்ப்பாணத்தின் எதிர்காலம் பற்றி உருவாகியிருந்த கவலைகளும் பொல பொலவென உதிர்வது போல இருந்தது. அர்ச்சனாக்களும், மைதிலிகளும் இன்னும் இந்த மண்ணில் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை நாளை இந்த மண் விடிந்துவிடும் என்று பட்டது, இப்போது சுவாசம் சீரான வேகத்தில் இருந்தது. மனம் கழுவி விட்ட மாதிரி இருந்தது.
இதற்குப் பின்னர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அந்தத் தங்கையோடு தனிமையில் பேசியிருக்கின்றேன், அவளிடம் தேநீர் வாங்கிக்குடித்திருக்கின்றேன், மைதிலி என்னருகில் அமைதியான நித்திரையில் இருக்க இப்போது கூட அவளோடு பஸ்ஸில் வெலிக்கந்த நோக்கி இரண்டாவது தடவையாக போய் கொண்டுதான் உங்களுக்கு கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். பஸ் சாரதி பழைய பாடல்களின் ரசிகனாக இருக்க வேண்டும்
‘மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்’ என்று கணீர்க்குரலில் ரீ.எம். சௌந்தரராஜன் பாடிக்கொண்டிருக்கிறார். இனியும் இந்த சத்தத்தில் உங்களுக்கு நான் கதை சொன்னால் கேட்காது
( யாவும் கள யதார்த்தம் தழுவிய கற்பனைகளே)
வரணியூரான் (ஜுனியர்) 09.10.2012