உயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி  கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை 

இ.சர்வேஸ்வரா 

விரிவுரையாளர்

கல்வியியல் துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

 

 

அறிமுகம் 

உயர்ந்த கனவுகளுடனும் இலச்சியங்களுடனும் ஆரம்பமாகும் ஒரு பிள்ளையின் கல்வி வாழ்க்கையின் தொடக்க நிலையான பாலர் கல்வியில் விதைக்கப்படும் கல்வி விதைகளின் விளைச்சலை அறுவடை செய்யும் கல்வி முறைமையாக அல்லது களமாகக் கருதத்தக்கது உயர்தரத்துக்குப் பின்னான உயர் கல்வி என்பது குறிப்பிடத்தக்கது. மேம்பட்ட நிலையிலான இலட்சிய நோக்கங்களைத் தவிர்த்து ஒரு சாதாரண மனிதனின் கல்வியின் பிரதான நோக்கமாகவிருப்பது எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடியற்ற வாழ்க்கையொன்றை அமைத்துக்கொள்வதே என்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய பொருளாதார நெருக்கடியற்ற வாழ்க்கையை தீர்மானிப்பது ஒருவரது தொழில் வாழ்க்கையே. தொழில் வாழ்க்கையைப் பிரதானமாகத் தீர்மானிப்பது ஒருவர் பெற்றுக்கொள்ளும் உயர்கல்வியே ஆகும்.

தனக்குப் பொருத்தமான உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள தவறும் ஒருவர் தனது தொழில்வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வது உட்பட பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவராகின்றார். பொதுவாகவே உயர்தரத்தைத் தாண்டும் வரை கல்வி முறைமைகள் பாடசாலைக் கல்வி மற்றும் இலவசக் கல்வி முறைகளுக்குட்பட்டதாக ஒரு பொதுமைப்பட்டநிலையில் இருந்த போதும் உயர்தரத்துக்குப் பின்னான கல்வி அவ்வாறானதொரு பொதுமைப்பட்ட நிலையை தன் பல பரிமாணங்களில் கொண்டிருப்பதில்லை. அத்துடன் கற்றல் வாய்ப்புக்களை உரிய முறையில் தெரிவுசெய்வது தொடர்பான நெருக்கடிகளும் ஒப்பீட்டளவில் உயர்தரத்துக்கு முன்பாக குறைவாகவே காணப்படுகின்றது. தொகுதிப் பாடத்தெரிவுகளுக்குள் தனக்குரியதைத் தெரிவுசெய்யும்  மட்டுப்பட்ட தெரிவுநெருக்கடியே உயர்தரத்துக்கு முன்னான இருப்பதுடன்  அத் தெரிவுகள். கனதியான செல்வாக்கினை மாணவரின் எதிர்காலம் குறித்து செலுத்துவதுமில்லை. இருந்த போதும் உயர்தரக் கல்வித் தெரிவும் உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வித் தெரிவும் மிகவும் கவனமாக அணுகப்பட வேண்டியவை. அவற்றுள்ளும் உயர்கல்விப் பாதை என்பது மிகவும் கவனமாகத் தெரிவு செய்யப்பட்டாலேயே வாழ்க்கைப் பயணம் இடர் அற்றதாக அமையும்.

உயர்கல்வி வாய்ப்பைத் தீர்மானிக்கும் காரணிகள் 

அறிவு திறன் மனப்பாங்கு அடிப்படையில் மாணவர்களின் பல்வகைத் தன்மை, மாணவர்களின் பொருளாதார பலம், உயர்தரத்தில் அவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் என்பவற்றின் அடிப்படையில் உயர்தரத்துக்கு பின்னான அவர்களின் கல்வியின் செல்நெறி தீர்மானிக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையைப் பொறுத்தவரையில் உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வி எனும்போது உயர்தரப் பேறுபேறுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக கல்வியே முக்கியத்துவம் பெறுகின்றது. இருந்தபோதும் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் பத்து சதவீதத்தை அண்மித்த எண்ணிக்கையானவர்களுக்கே அரச பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வி மூலம் உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கிடைக்கின்றது.

பல்கலைக்கழக கல்வியைத் தவறவிட்ட அல்லது தவிர்த்த குறித்த ஒரு தொகுதியினர் ஆசிரியத் தொழில் வாழ்க்கை கனவுடன் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குள் உட்புகுவதும் இலங்கையில் ஒரு பொதுவான நடைமுறையாகவுள்ளது. இவர்களது எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் குறைவானதே. இந் நிலையில் பெரும்பாலான மாணவர்கள் உயர்தரத்துக்குப் பின் என்ன செய்வது எத்தகைய கல்வி முறைமைக்குள் தம்மை உட்படுத்திக்கொள்வது என்பது குறித்துப் பூரண தெளிவற்றவர்களாகவேயுள்ளனர்.

இருந்த போதும் அனைவருக்கும் இலவசக் கல்வி மூலமான பல்கலைக்கழக பல்கலைக்கழக கல்வியை பெறமுடியாத நிலையுள்ள போதும் பல்கலைக்கழக கல்விக்கு ஒத்த தன்மையுடைய அல்லது அதற்கும் மேலான பல்வேறுபட்ட கற்றல் வாய்ப்புகள் தற்போதைய திறந்த கல்வி உலகச் சூழலில் அதுவும் குறிப்பாக இலங்கையில் நாம் வாழும் பிரதேசங்களை அண்மித்தே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் போதிய விழிப்புணர்வு இன்மையாலும் உரிய தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வதில் உள்ள நெருக்கடிகளாலும் பல மாணவர்கள் இத்தகைய வாய்ப்புகளைத் தவற விடுகிறார்கள்.

குறிப்பாக பெற்றோர்களின் கல்வியறிவு மட்டம், உயர்கல்வி தொடர்பான அவர்களின் விழிப்புணர்வு, பெற்றோர்களின் பொருளாதார பலம் என்பனவும் பல்கலைக்கழக கல்வி தவிர்ந்த உயர்கல்வியை பிள்ளைகள் பெற்றுக்கொள்வதையும் அவற்றை நோக்கி வழிப்படுத்தப்படுவதையும் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன.

அத்துடன் தமிழர் பிரதேசங்களில் கல்வி வழிகாட்டலுக்கான சேவை மனப்பாங்குடன் கூடிய நிலையங்களுக்கான தட்டுப்பாடுகளும் பிராந்தியத்திலுள்ள  பல்கலைக்கழகங்களின் கல்வியலாளர்கள் இவ் விடயம் குறித்து எடுக்கும் அக்கறையின் மட்டம் குறைவாகவிருப்பதும் எமது பிரதேச மாணவர்கள் தமக்குப் பொருத்தமான உயர்கல்வி வாய்ப்புக்களைத் தவற விடுவதற்கான இதர காரணங்களாக அமைகின்றன. அத்துடன் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவுடன் பாடசாலைக்கும் மாணவர்களுக்குமான தொடர்புகள் அறுந்து போதலும் பொருத்தமான வகையில் தொடர்புகளைப் பேணுவதற்கு ஏற்ற பொறிமுறைகளை பாடசாலைகள் கொண்டிராமையும் மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வினைத்திறன்மிக்க வகையில் மேற்கொள்வதில் பலவீனங்களைத் தோற்றுவிப்பனவாகவுள்ளன. இத்தகைய அடிமட்டப்  பலவீனங்களை களைவது என்பது மிகவும் அவசியமானது.

அத்துடன் சில உயர்கல்வித் துறைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான தப்பான அபிப்பிராயங்களும் எமது பிரதேச மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பைத் தவறவிடுவதற்கான காரணங்களாக அமைகின்றன. வடக்கு மாகாணத்தை குறிப்பாக யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி அரசாங்கத்துடன் முழுமையாக அல்லது பகுதியளவிலேனும் தொடர்புபட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இக் கணம்வரை செயற்பாட்டு நிலையிலுள்ளன. அதனை விட அரச அங்கீகாரம் பெற்ற தனியார் உயர்கல்;வி நிறுவனங்களும் கணிசமானளவிலேயுள்ளன. இருந்தும் எமது வடபகுதி மாணவர்கள் எவ்வளவு தூரம் இவற்றை பயன்னொள்கின்றனர் என்பது கேள்விக்குரியதே.

பொருத்தமான உயர்கல்வியின் அவசியம்

வடக்கை மையப்படுத்தி இளையோர் வேலைவாய்ப்பின்மை பெரும் சவாலாக இருப்பதற்கான பிரதான காரணிகளுள் ஒன்றாகவும்  உயர்கல்வி வாய்ப்புக்களைத் தவறவிடுகின்றமை அல்லது பயன்படுத்தாமையைக் குறிப்பிட முடியும். அத்துடன் பொருத்தமற்ற அல்லது தொழில்கொள்வோரின் தேவைகளுக்கு ஏற்ற பொருத்தமான உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ளாமையும் வேலையற்ற பிரச்சனைக்கான மற்றுமொரு காரணியாகவுள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இருந்தும் உயர் தொழில்நுட்ப கற்கை நிறுவனங்களிலிருந்தும் வெளியேறிய பட்டதாரிகள் வேலையற்று இருப்பதற்கான காரணமாக இதனைக் குறிப்பிட முடியும்.

மேலும், எதிர்காலத்தில் தேசிய அபிவிருத்தியில் ஒரு முக்கிய கேந்திரநிலையமாக யாழ்ப்பாணம் அல்லது இலங்கையின் வடபகுதி அபிவிருத்தி பெறும் வாய்ப்பு நிலைகள் உள்ளன. அத்தகைய அபிவிருத்தி முயற்சிகளின் ஊடாகக் கிடைக்கும் வேலைவாய்ப்புக்களை எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுக்கொள்ளல் அவசியமானது. இதற்குத் தக்கவிதத்தில் உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வி குறித்து பொருத்தமான வகையில் வழி காட்டுதல் அவசியமானது.

குறிப்பாக தகுதிப்பாடுடைய உயர்கல்வி நிறுவனங்கள் குறித்தும் அவற்றினை; கற்கைநெறிகள் குறித்தும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படைத் தகமைகள் மற்றும் நுட்பங்கள் உத்திகள் குறித்தும் எமது பிராந்தியத்தின் இளையவர்கள் விழிப்புணர்வுட்டப்படவேண்டும். இவ் விழிப்புணர்வு பல வழிகளில் செய்யப்பட வேண்டியதாகவுள்ளது.

போருக்குப் பின்னாக மீண்டெழும் ஒரு சமூகம் எனும் அடிப்படையில் துரிதமான மீள்எழுச்சிக்கும் அத்துடன் சமூகக் கட்டுமாண விருத்திக்கும் ஏற்ற விதத்தில் எமது அடுத்த தலைமுறையின் உயர்கல்வி வாய்ப்புக்கள் அமையவேண்டும். இது குறித்தான பல் பக்க பரிமாணம் கொண்ட விடயங்களை தொடர்ந்து வரும் வாரங்களில் ஆராய்வோம்.

(தொடரும்)

இக் கட்டுரைத் தொடர் உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வி தொடர்பில் சில அடிப்படையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் வாராந்தம் வெளிவரவுள்ளது. எமது பிரதேச இளையவர்களைப் பொருத்தமான தடத்தில் வழிப்படுத்துவதற்கான சிந்தனைக் கிளறல்களைப் பல மட்டங்களிலும் ஏற்படுத்துவதே இக் கட்டுரையாளரின் நோக்கமாகும். 

Advertisement

Comments are closed.