ஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம்

இ.சர்வேஸ்வரா
விரிவுரையாளர்
கல்வியியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

அறிமுகம்
‘கற்பிப்பதற்காக கற்பவன் எவனோ அவனே ஆசிரியன்’ என்பது ஆசிரியர்கள் குறித்த வரைவிலக்கணங்களில் மிகவும் முதன்மையான வரைவிலக்கணமாகும். ஓர் ஆசிரியர் தான் கற்பதை எப்போது நிறுத்திக் கொள்கின்றாரோ அந்தக் கணமே அவர் கற்பிப்பதற்கான தகுதியை இழந்து விடுகின்றார் என்பதும் கல்வி உலகில் பொதுவாக முன்வைக்கப்படும் கருத்தியலாகும். அந்த அடிப்படைகளில் ஓர் ஆசிரியருக்கு தொடர்ச்சியான கல்வி தேவைப்படுகின்றது. அதனை அவர் முறைசார்ந்தும் முறைசாராதும் பெற்றுக்கொள்ளவேண்டியதாகவிருக்கின்றது. முறைசார்ந்து ஒர் ஆசிரியர் பெற்றுக்கொள்ளும் கல்வியில் ஆசிரியர் கல்வி (Teacher Education) என்பது கனதியான வகிபாகத்தைக் கொண்டுள்ளது. ஆசிரிய கல்வியின் பிரதான நோக்கங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.
1. புதிய அறிவினைப் பெற்றுக்கொள்ளல்
2. முன்னைய அறிவினை ஒழுங்கமைத்தலும் மேம்படுத்தலும்
3. தொழில்சார் நிபுணத்துவத்துக்கான வாண்மையையும் தேர்ச்சியினையும் பெற்றுக்கொள்ளல்
4. தொழில் சார் படிநிலை முன்னேற்றத்துக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்து கொள்ளல்
5. மனப்பாங்கில் நேர்த்தன்மையான மாற்றங்களை கொண்டுவரல்
6. கற்பித்தல் தொடர்பான புதிய மென்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ளல்
7. பிள்ளையை விளங்கிக் கொள்வதற்கான உளவியலைக் கற்றுக்கொள்ளல்
8. தொழில்வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமன்செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்ளல்
ஆசிரிய கல்வியை தொடர்ந்தவர்கள், தொடர்பவர்கள், தொடர நினைப்பவர்கள் மத்தியில் அவர்கள் நிலைப்பட்டு ஆசிரிய கல்வியின் முதன்மை நோக்கு குறித்து கலந்துரையாடிய போது பதவிசார் உயர்வுகளைப் பெற்றுக்கொள்வதே அதாவது தொழில் சார் முன்னேற்றமே அவர்களது முதன்மை நோக்காக இருந்தமையை அறியக்கூடியதாகவிருந்தது.
இந் நிலையில் தொழில்சார் முன்னேற்றத்துக்குப் பொருத்தமான ஆசிரியர் கல்வியை வழங்குவதற்கான இலங்கையின் குறிப்பாக வடபுலத்தின் ஏற்பாடுகள் குறித்து இக் கட்டுரை ஆராயவிழைகின்றது. அதிலும் குறிப்பாக இலங்கையின் சேவைப் பிரமாணக் குறிப்புக்களின் தேவைப்பாடுகளுக்கும் தற்போது கிடைக்கத்தக்கதாகவுள்ள முறைசார் ஆசிரிய கல்விக்குமான தொடர்புடமையை ஆராய்வதும் இக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
ஆசிரிய கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைப்பாடுடையவர்கள்
தமது தொழில் உறுதிப்படுத்தலுக்காகவும் அடுத்த கட்ட தொழில் முன்னேற்றங்கள் அடைவுகளுக்காகவும் பின்வருவோர் ஆசிரிய கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாகவுள்ளனர்.
1. பாடசாலை ஆசிரியர்கள்
2. பாடசாலை அதிபர்கள்
3. ஆசிரிய ஆலோசகர்கள்
4. ஆசிரிய கல்வியாளர்கள்
5. கல்வி நிர்வாகிகள்
6. கல்வித் துறைசார் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
இவர்கள் ஒவ்வொருவரும் தாம் தற்போதுள்ள தொழில் சார்ந்த வாண்மைவிருத்தி மற்றும் தமது எதிர்கால தொழில் முன்னேற்றம் குறித்த தூரநோக்கு என்பவற்றின் அடிப்படையில் தமக்கான ஆசிரிய கல்வியின் வகைப்பாட்டை தெரிவுசெய்து கொள்கின்றனர். இருந்தும் இலங்கையின் வடபுலத்தை மையப்படுத்தி நோக்கினால் மேற்குறித்த தரப்பினருக்கு தெரிவுக்கான வாய்ப்புக்கள் இன்றி பொத்தாம் பொதுவாக அனைத்து தரப்பினரும் ஒரு குறிப்பிட்ட ஆசிரிய கல்வி சார் பட்டம் அல்லது பட்டப்பின் டிப்ளோமா அல்லது முதுமாணியை தெரிவுசெய்ய வேண்டிய கட்டாயப்படுத்தலுக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இக் கற்கைநெறிகளை நடத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் நிறுவனங்களுக்கிடையிலான தரவேறுபாடுகளும் காணப்படுகின்றன. அதனால் இத்தகைய கற்கைநெறிகளுக்கான அனுமதி மிகுந்த போட்டித் தன்மைமிக்கதாகவிருப்பதும் பலர் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கட்டங்களில் பெறவேண்டிய ஆசிரிய கல்வியை ஆத்மதிருப்திக்காக ஓய்வுபெறுவதற்கு சில ஆண்டுகள் முன்பாக பெற்றுக்கொள்வதும் வடக்குக் கல்விப்புலத்தில் தொடர்கின்றமை கவனிக்கத்தக்கது. இதனால் அவர்கள் ஆசிரிய கல்வியினூடாகப் பெற்றுக்கொண்ட அறிவு திறன் என்பவற்றைப் பிரயோகிப்பதற்கான வாய்ப்பின்றியே ஓய்வுபெறுகின்றனர். அத்துடன் ஆசிரியர் கல்வியில் தம்மை தகுதிப்பாடடைய செய்ய வேண்டும் எனும் தொடர் ஏக்கத்துடனும் இருப்பதனால் பல்வேறு வழிகளில் தமது தொழில்சார் வினைத்திறனை வெளிப்படுத்துவதில் தடங்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இவ் விடயம் குறித்து அதிக கவனமெடுத்து ஆசிரிய கல்வியின் அடுத்த கட்டங்கள் குறித்து சிந்திக்க வேண்டியது வடபுலக் கல்வியை முன்னேற்ற நினைக்கும் அனைவரினதும் தலையாய கடமையாகும்.

பிரமாணக் குறிப்புக்களும் ஆசிரிய கல்வியும்
இலங்கை ஆசிரிய சேவை தொடக்கம் இலங்கை கல்வி நிர்வாக சேவை வரை பிரமாணக் குறிப்புக்களின் அடிப்படையில் ஆசிரிய கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கான அடிப்படைத் தகைமை அல்லது பதவியுயர்வுக்கான கட்டாயத் தகைமை எனும் இரண்டு நி;லைப்பட்டு ஆசிரிய கல்வித் தேவைப்பாடு பிரமாணக் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் அண்மையில் திருத்தப்பட்ட இலங்கை ஆசிரிய சேவையின் பிரமாணக் குறிப்பு முன்னையதைக் காட்டிலும் ஆசிரிய கல்வியின் முக்கியத்துவத்தை மேலும் முதன்மைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆசிரிய சேவையும் ஆசிரிய கல்வியும்
ஆசிரிய சேவை பிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஒர் ஆசிரியர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கைநெறியை (Post Graduate Diploma in Education-PGDE) அல்லது கல்விமாணிக் கற்கை நெறியை (Bachelor of Education-B.Ed) பூர்த்தி செய்யவேண்டியிருப்பது அவர்களது அடுத்த கட்ட விரைவான நேரடித் தர உயர்வுக்கு அவசியமாகின்றது. 2014ம் ஆண்டு ஒக்றோபர் மாதம் 23ம் திகதிய 1885-38ம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவையின் பிரமாணக் குறிப்பில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதிய 2120-02 ம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் செய்யப்பட்ட முதலாவது திருத்தத்தில் கல்வி முதுமாணிக் (Master of Education-M.Ed) கற்கையை பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கான விரைவான தரஉயர்வு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளமை மிக்க கவனத்துக்குரியது. அதாவது ஆசிரியர் சேவையின் 2-II தரத்தில் உள்ள ஒருவர் ஐந்து வருட காலப்பகுதிக்குள் கல்வி முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்வாராயின் ஆசிரியர் சேவை தரம் 2-I க்கு உயர்த்தப்படுவார். பொதுவாக 10 வருடங்கள் தேவைப்படும் ஒர் தர உயர்வை 5 வருடங்களில் அடைய முடிகின்றமை சிறப்பான விடயமாகும்.
குறிப்பாக இதுவரை வெறுமனே மேலதிக தகமை அல்லது கௌரவத் தேவையாகக் கருதப்பட்ட கல்வி முதுமாணிக் கற்கை நெறி ஆசிரிய சேவையின் தொழில்சார் வளர்ச்சி நிலையின் முக்கிய படிநிலையாக மாறியிருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தும் இது தொடர்பில் பின்வரும் சவால்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
1. இது வரை காலமும் போட்டித்தன்மை மிக்க கல்வி முதுமாணிக் கற்கை நெறிகளுக்கு சேவை மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கிய தன்மையை மாற்றி இளையவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவை ஏற்படும்.
2. இளைய ஆசிரியர்கள் கல்வி முதுமாணிக் கற்கையை தொடர்வதை கல்வி நிர்வாகம் இதர பல காரணங்களால் பிற்போடுவது அவர்களது அடிப்படை உரிமையை மீறும் செயலாகக் கருதப்படும்.
3. இளைய ஆசிரியர்கள் விரைவான பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக எவ்வாறெனினும் கல்வி முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்ய முனையும் எண்ணம் அவர்களிடம் வலுப்பெறுவதால் மாணவர்களுக்கான கற்பித்ததில் அவர்களது கவனம் சிதற வாய்ப்புள்ளதுடன் வினைத்திறனும் குன்றலாம்.
4. குறிப்பாக 2-II தரத்தில் உள்ள ஒருவர் ஐந்து வருட காலப்பகுதிக்குள் கல்வி முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது நிலமையை மேலும் சிக்கலாக்கும். இது தொடர்பிலும் வழமை போன்று தமிழ் சிங்கள மொழி வர்த்தமாணி அறிவித்தல்களிடையே சிறிய குழப்பநிலைகள் இருப்பினும் அடிப்படைக் கருத்தியலில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை.
5. அத்துடன் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் தான் சார்ந்திருக்கும் தொழில் சார்ந்த வாண்மைவிருத்தி கற்கைகள் மற்றும் மேலதிக கற்கை நெறிகளை தொடரும் போது அதற்கான கற்கைநெறிக் கட்டணம் உள்ளிட்ட கற்கைச் செலவீனத்தை அவர் பணியாற்றும் குறித்த அரச நிறுவனம் ஏற்றுக்கொள்வதுண்டு. ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். ஆனால் இதுவரை காலமும் ஆசிரியர்களுக்கான கற்கை நெறிக் கட்டணங்களில் பட்டப்பின் டிப்ளோமா கற்கை கட்டணத்தின் ஒரு பகுதியே வழங்கப்பட்டு வந்தது. கல்வி முதுமாணிக் கற்கைநெறிக் கட்டணங்கள் முழமையாக சுயநிதியிலேயே செலுத்தப்பட்டுவந்தன. ஆனால் தற்போது சேவைப் பிரமாணக் குறிப்பில் பதவியுயர்வுக்கான தேவைப்பாடுகளில் ஒன்றாக கல்வி முதுமாணிக் கற்கை குறிப்பிடப்படுவதால் கற்கைநெறிக் கட்டணத்தையும் ஆசிரியர் சார்ந்த கல்வித்திணைக்களம் பொறுப்பேற்க வேண்டிய நிலமை ஏற்படலாம். இது ஒரு மேலதிக நிதிச்சுமையாக அமையும்.
எனவே ஆசிரியர்களிடையே அதுவும் குறிப்பாக இளைய ஆசிரியர்களிடையே கல்வி முதுமாணிக் கற்கைக்கான கேள்வி இன்னும் வலுவாக அதிகரிக்கும் என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. எனவே கல்வி முதுமாணிக் கற்கையை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் வடக்கு கல்விப் புலத்தில் அதிகரிக்கப்பட வேண்டும். கல்வி முதுமாணிக் கற்கை நெறிக்கான நேர்முகத் தேர்வுகளின் விதிமுறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்.

அதிபர் சேவையும் ஆசிரிய கல்வியும்
2014ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22ம் திகதிய 1835-31 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவையின் பிரமாணக் குறிப்பில் ஆசிரிய கல்வியின் தேவைப்பாடுகள் தொடர்பில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்னன.
அதிபர் சேவையில் இணைந்து கொள்வதற்கான போட்டிப் பரீட்சையில் தோற்றுவதற்கான அடிப்படை தகைமையாக ஆசிரிய சேவையில் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்திருப்பதுடன் கல்வி மாணிப்பட்டத்தை அல்லது வேறு பட்டத்துடன் பட்டப்பின் கல்வி டிப்ளோமா தமைமையைக் கொண்டிருக்க வேண்டும். கல்வி டிப்ளோமா தகமையற்றவர்கள் பயிற்றப்பட்ட ஆசியருக்கான சான்றிதழ் அல்லது ஆசிரியத்துவத்தில் தேசிய டிப்ளோமா கற்கைச் சான்றிதழ் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இங்கு ஆசிரிய கல்வி தொடர்பில் ஒரு முரண்நிலையும் உள்ளது. அதாவது அதிபர் சேவைக்கான அனுமதித் தகைமையில் சமநிலையில் வைத்து நோக்கப்படும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா ( Post Graduate Diploma in Education), பயிற்றப்பட்ட ஆசியருக்கான சான்றிதழ் (Trained Teacher Certificate) மற்றும் ஆசிரியத்துவத்தில் தேசிய டிப்ளோமா கற்கைச் சான்றிதழ் (National Diploma in Teaching) என்பன கல்வி முதுமாணிக் கற்கைக்கான அனுமதித் தகைமையில் சமனாகக் கருதப்படுவதில்லை. தொழில் தகைமை வேறு கல்வித் தகைமை வேறு எனும் எண்ணக்கருக்களின் அடிப்படையில் இந் நிலமை ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவிருப்பினும் மீள் பரிசீலனைக்குரியவையாகும்.
அது போன்று அதிபர் சேவை தரம் II இலிருந்து தரம் I க்கு பதவியுயர்வைப் பெறுவதற்கான அடிப்படைத் தகைமையாக பாடசாலை முகாமைத்துவத்தில் டிப்ளோமா அல்லது கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஒருவர் அதிபர் சேவையில் இணைந்த பின்னர் 12 வருடங்களுக்குள் இத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யவேண்டிய நிலமையுள்ளது. இது போதுமானதொரு காலப்பகுதியாகவிருந்தபேர்தும் ஒரு வினைத்திறனான அதிபராக பணியாற்றுவதற்கு தேவையான கற்கையை பூர்த்தி செய்வதற்கான தயவுகாலம் அதிகமாகவிருப்பது அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக தரம்III இலிருந்து தரம் II பதவியுயர்வுக்கான அடிப்படைத் தகைமையாக இந் நிலமையிருப்பதே மிகவும் பொருத்தமானதாகும்.
அதேவேளை மேற்குறித்த கற்கைகளை வழங்குவதற்கான நிறுவன ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இலங்கையின் வடபுலத்தைப் பொறுத்தவரையில் அதிபர் சேவைக்கான கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கையைப் பூர்த்தி செய்வதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை. குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலோ அல்லது தேசிய கல்வி நிறுவகத்தின் பிராந்திய நிலையங்களிலோ அல்லது திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்களிலோ இக் கற்கையை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடையாது. மாறாக தலைநகரை நோக்கியே பயணிக்க வேண்டிய நிலமையே காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக அண்மைக்காலமாக அதிபர் சேவையில் வடபுலத்தைச் சேர்ந்த ஏராளமான இளையவர்கள் சித்தியடைந்துள்ள நிலமையில் இத்தகைய கற்கைநெறி வடபுலக் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படாமை ஆசிரிய கல்வி தொடர்பில் உள்ள பெரும் பின்னடைவான நிலமையாகும்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையும் ஆசிரிய கல்வியும்
இது போன்று 2015ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21ம் திகதிய 1928-28ம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவையின் பிரமாணக் குறிப்பில் தரம் III இலிருந்து தரம் II க்கு பதவி உயர்வு பெறுவதற்கு பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நியமனத் திகதியிலிருந்து 10 ஆண்டுக்குள் இத் தகமையை பூர்த்தி செய்தால் போதும் எனும் நிலையும் பொதுவாக பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறிக்கு அதிக போட்டித் தன்மையில்லாமையினாலும் இது ஒரு நெருக்கடியான நிலையைத் தோற்றுவிப்பதில்லை.
ஆனால் தரம் II இலிருந்து தரம் I க்கு பதவி உயர்வு பெறுவதற்கு கல்வியுடன் தொடர்புடைய பட்டப்பின் கற்கையை அதாவது முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனும் தேவைப்பாடு உள்ளது. தரம் II இலிருந்து தரம் I க்கு பதவி உயர்வு பெறுவதற்கு ஏழு ஆண்டுகள் சேவைக்காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டியதும் அவசியமாகும். எனவே இந்த அடிப்படைகளில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியொருவருக்கு கல்வி முதுமாணி போன்ற பட்டப்பின் கற்கைத் தேவை என்பது அவரது சேவைக் காலத்தின் 17 வருடங்களுக்குள்ளேயே தேவைப்படுகின்றது. ஆனால் ஆசிரிய சேவையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் ஒருவர், அவர் நியமனம் பெற்றதிலிருந்து 08 ஆண்டுகளுக்குள் கல்வி முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்வார் எனில் விரைவான பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவுள்ளது. அதிலும் கல்வியியல் பட்டம் (B.Ed) உடைய பட்டதாரிகள் ஏற்கனவே ஆசிரிய சேவை தரம் 2-II இல் நியமனம் செய்யப்படுவதால் இந்த எட்டு ஆண்டு காலப்பகுதி என்பது அவர்களுக்கு ஐந்து ஆண்டு காலப்பகுதியாகவுள்ளது. இந்த காலப்பகுதிக்குள் கல்வி முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்வது என்பது ஓர் வலுக்கட்டாயமான நிபந்தனையாக இல்லாதபோதும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விசையாகவுள்ளது.
அத்துடன் கல்வி கட்டமைப்புக்களில் வலுப்படுத்தலிலும் வாண்மைவிருத்தியிலும் முன்னுரிமை ஆசிரியர்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பதற்கிணங்க இந்த விரைவான பதவியுயர்வு நிலமை வரவேற்கத்தக்கது. சமாந்தரமாக ஏனைய பிராந்திய நாடுகளின் ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு ஊதியத்தைப் பெறும் இலங்கை ஆசிரியர்கள் விரைவான ஒரு சம்பள ஏற்றத்தைப் பெறுவதற்கும் இது வழிசெய்கின்றது. எனவே எதிர்காலங்களில் கல்வி முதுமாணிக் கற்கைநெறிக்கான வாய்ப்புக்களில் முன்னுரிமை ஆசிரியர்களுக்கே அதுவும் குறிப்பாக தரநிலை 2-II இல் அல்லது அதற்கு கீழான நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கே வழங்கப்படவேண்டும். வடக்கு கல்விப் புலத்தை முன்னேற்றுவதற்கான வழியாகவும் இது அமையக்கூடும்.
அதேவேளை இலங்கை கல்வி நிர்வாக சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் கல்வியுடன் தொடர்புடைய பல துறைகளில் தமது முதுமாணிக் கற்கையை தொடரமுடியும். பிரமாணக் குறிப்பில் அத்தகைய துறைகளாக பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன.
1. விசேட கல்வி,
2. கல்வி முகாமைத்துவம்,
3. கல்வி உளவியல்,
4. கல்விக் கொள்கைகள்,
5. மூன்றாம் நிலைக் கல்வி முகாமைத்துவம்,
6. நூலகம் மற்றும் தகவல் கல்வி
7. கல்விப் புலத்தின் மதீப்பீடும் மற்றும் பரீட்சைகள்
மேற்குறிப்பிட்ட துறைகள் குறிப்பிட்ட பாடத்துறை சார்ந்து தெரிவு செய்யப்பட்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பொருத்தமற்றது. அவர்கள் தாம் தெரிவு செய்யப்பட்ட பாடத்துறையில் முதுமாணிப்பட்டக் கற்கையை நிறைவு செய்தாலே தரம் I பதவியுயர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் பாடத்துறை சார்ந்த முதுமாணிக் கற்கையை நிறைவுசெய்யும் ஆர்வம் வடபுல கல்வி நிர்வாகிகளிடம் மிக அரிதாவேயுள்ளது. கல்வி முதுமாணி மீதான அவசியமற்ற ஈர்ப்பும் பாடத்துறை சார்ந்த முதுமாணிக் கற்கைகளுக்கான பற்றாக்குறையும் இந் நிலமைக்கான வலுவான காரணங்களாகவுள்ளன.
ஆசிரிய கல்வி தொடர்பான கௌரவத் தேவைமனப்பாங்கில் மாற்றம் கொண்டுவருவதும் விசேட துறைகளில் கல்வி முதுமாணிக் கற்கை நெறிகளை ஆரம்பிப்பதும் காலத்தின் அவசியமாகும். அதுமட்டுமன்றி கல்வி நிர்வாக சேவை சார்ந்தவர்கள் புலமைப்பரிசில்கள் மூலம் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பை பெற்று குறிக்கப்பட்ட துறைகளில் முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்ய முடியும். இவ் வாய்ப்புக்களை மிகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருப்பதுடன் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஐப்பான் போன்ற நாடுகள் வாய்ப்புக்களை வருடம் தோறும் வழங்கிவருவதும் இலங்கையர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வடபுலத்தில் கல்வி நிர்வாகிகள் மத்தியில் வெளிநாட்டு புலமைப்பரிசிலை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் மிகக் குறைவாகவேயுள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருந்த போதும் மொழிசார் பின்னடைவுகளே குறிப்பாக ஆங்கில மொழி புலமையின்மையே அல்லது அதுதொடர்பிலான தேவையற்ற அச்ச உணர்வே பிரதான காரணமாகவுள்ளது. இதனாலேயே தமிழ் மொழி மூலமான கல்வி முதுமாணிக் கற்கைகளுக்காக பலர் வரிசை கட்டி நிற்கின்றார்கள். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலமாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி முதுமாணிக் கற்கை நெறி ஒரு அணியுடன் நிறுத்தப்பட்டமையும் அந்த ஒரு அணிக்கான கற்கை கூட ஆரம்பிக்கும் போது ஆங்கில மொழி மூலமாகவும் நிறைவு செய்யும் போது தமிழ் மொழி மூலமாகவும் அமைந்திருந்மையும் இவ்விடத்தில் வடபுல ஆசிரியக் கல்வி எனும் கட்டுரையின் கருப்பொருளின் அடிப்படையில் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும்.

இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவையும் ஆசிரிய கல்வியும்
இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையைச் சேர்ந்தவர்களே தேசிய கல்வியியற் கல்லூரிகள், மற்றும் ஆசிரிய பயிற்சி கலாசாலைகளின் விரிவுரையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்களுள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் வலயக் கல்வி அலுவலகங்களின் ஆசிரிய மத்திய நிலையங்களின் முகாமையாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். இந் நிலையங்கள் அண்மையில் ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தி மத்திய நிலையங்கள் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு யூலை மாதம் 28ம் திகதிய 1925-37ம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையின் பிரமாணக் குறிப்பில் ஆசிரிய கல்வி தொடர்பான பின்வரும் தேவைப்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவைக்கான ஆட்சேர்ப்பு என்பது வழமைபோன்று திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இரு பிரிவுகளாக நடைபெறுகின்றன. திறந்த பிரிவில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான அடிப்படைக் கல்வித் தகைமை குறிப்பிட்ட பாடப்பரப்பில் இரண்டாம் மேல்வகுப்புச் சித்தியுடன் கூடிய பட்டமும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாத் தகைமையும் அல்லது இரண்டாம் மேல்வகுப்புச் சித்தியுடன் கூடிய கல்விமாணி பட்டம் என்பதாகும். குறிப்பாக அதிக பட்ச வயது எல்லை 30 ஆகும். கல்விமாணிப்பட்டதாரியல்லாத ஒருவர் தனது பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை 30 வயதுக்குள் பூர்த்தி செய்வாராகின் திறந்த பிரிவு போட்டிப்பரீட்சையில் தோற்ற முடியும்.
இங்கு பின்வரும் விடயங்கள் முற்குறிப்பிட்ட சேவைகளுடன் ஓப்பிடும் பேர்து ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கு மட்டும் சிறப்பானதாகவுள்ளது.
1. அடிப்படைத் தகைமையான பட்டத்தை இரண்டாம் மேல்வகுப்புச் சித்தியுடன் (Second Class Upper Division)) வைத்திருக்க வேண்டும்.
2. பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை வைத்திருக்க வேண்டும் எனும் நிலமை உண்மையில் திறந்த பிரிவு எனும் நிலமையை கேள்விக்குள்ளாக்குகின்றது. காரணம் பொதுவாக தற்போது பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை கற்பதற்கான அனுமதி அக் கற்கையை வழங்கும் நிறுவனங்களினால் ஆசிரியர்கள் அல்லது கல்வித் துறையுடன் தொடர்புடைய பணியில் குறிப்பாக அரச நிரந்தரப் பணியில் இருப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது. பட்டக் கற்கையை பூர்த்தி செய்த ஒருவர் தனது சுயவிருப்பின் பேரில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கையை தொடர முடியாத இறுக்கமான நிலமையே காணப்படுகின்றது. எனவே ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கு திறந்த பிரிவில் தோற்றும் வாய்ப்பு ஆசிரிய சேவையில் உள்ள இளையவர்களுக்கே கிடைக்கின்றது. இது ஒரு வகையில் அவர்களுக்கான நல்வாய்ப்புமாகும். இங்கு இலங்கையில் சில வருடங்களுக்கு முன்னர் பட்டத்தை நிறைவு செய்த ஒருவர் திறந்த பல்கலைக்கழகம் மூலமாக பட்டப்பின் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டமையையும் பின்நாளில் ஆசிரிய தொழில் சங்கங்கள் கொடுத்த நெருக்கடி மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்களின் வாயிலாக இவ் வாசல் அடைக்கப்பட்ட துர்அதிஸ்டத்தையும் சுட்டிக்காட்டவேண்டும்.
3. பட்டம் மற்றும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாப் பட்டம் இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் 1978ம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 25 ஏ பிரிவின் கீழ் பட்டம் வழங்கும் நிறுவனங்களாக அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்பட்டதாகவிருக்க வேண்டும். பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் உள்ளன. அந் நிறுவனங்களுக்குள் தேசிய கல்வி நிறுவகம் (National Institute of Education-NIE) உள்ளடக்கப்படவில்லை. இதனால் அங்கு பெறப்படும் கல்விமாணிப் பட்டமோ அல்லது பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டமோ இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவைக்கான அடிப்படைக் கல்வித் தகைமைகளை பூர்த்தி செய்ய போதாது என்பது மிகவும் கவனத்துக்குரியது. மட்டுப்படுத்தப்பட்ட வகையிலான ஆட்சேர்ப்புக்கும் இது பொருந்தும். அதிபர் சேவை மற்றும் ஆசிரிய சேவை பிரமாணக் குறிப்புக்களில் தேசிய கல்வி நிறுவகம் தனித்து குறிப்பிடப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.
இந் நிலையில் பின்வரும் விடயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.
1. இளையவர்கள் திறந்த பிரிவுக்கூடாக ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்குள் இணைந்து கொள்வதற்கு பல்கலைக் கழகங்களில் கல்விமாணிப் பட்டக் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். தற்போது கொழும்பு பேராதனை மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுடன் திறந்த பல்கலைக்கழகமும் கல்விமாணிப் பட்டக் கற்கைகளை வழங்கி வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் முன்னர் கல்வியியலில் விஞ்ஞானமாணி பட்டம் ஒன்று வழங்கப்பட்டிருந்த போதும் இலகுவாக கடந்து செல்லக்கூடிய சில காரணங்களை தடைகளாக எண்ணி அக் கற்கைநெறி கைவிடப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரியது. எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூலமாக கல்விமாணிப் பட்டக் கற்கையொன்றை வழங்குவது வடபுலக் கல்வி மேம்பாட்டுக்கு குறிப்பாக ஆசிரிய கல்வி சார்ந்து மிகவும் அவசியமானது.
2. பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கையை சேவைத் தகுதிகளின் அடிப்படையில் மட்டுப்படுத்தாது திறந்த கற்கையாக சுயவிருப்பின் பேரில் எவரும் கற்கும் துறையாகவும் ஆசிரிய சேவையில் பட்டதாரியொருவர் இணைந்து கொள்வதற்கான அடிப்படைத் தகைமையாகவும் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இதன் மூலம் ஆசிரிய சேவையை ஒரு சான்றுப்படுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் கொண்ட சேவையாக (மருத்துவசேவை, சட்ட சேவை, பொறியிலாளர் சேவை போன்று) மாற்றவும் முடியும். இது தகுதியற்றவர்கள் பொருத்தமற்றவர்கள் மற்றும் மனவிருப்பற்றவர்கள் ஆசிரிய சேவையில் உள்நுழைவதைத் தடுப்பதற்கான உத்தியாகவும் அமையும்.
ஆசிரிய கல்வியியலாளர் சேவையைப் பொறுத்தவரையில் பதவியுயர்வுகளுக்கான ஆசிரிய கல்வித் தேவைப்பாடு என்பது இலங்கை கல்வி நிர்வாக சேவையை ஒத்ததாகவே காணப்படுகின்றது. அதாவது தரம் II இலிருந்து தரம் I க்கு பதவியுயர்வு பெறும் வேளையிலேயே முதுமாணிப்பட்டத் தேவைப்பாடுள்ளது. இது அவர்களின் ஒட்டுமொத்த சேவைக்காலத்தின் 17 வருடங்கள் நிறைவுக்குப் பின்னரே தேவைப்படுகின்றது. அதிலும் குறிப்பாக அவர்கள் குறித்த ஒரு பாடத்துறை சார்ந்த விரிவுரையாளர்களாக நியமனம் பெறுவதனால் கல்வி முதுமாணிக் கற்கை நெறிக்கு அப்பால் தமது பாடத்துறை சார்ந்த முதுமாணிக் கற்கை நெறியை பயின்றாலே போதுமானது. ஒரு சில நியமனப் பரப்புகளுக்கு மட்டும் கல்வி முதுமாணிக் கற்கைநெறி தேவைப்படுகின்றது. இங்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி முதுமாணியும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
இருந்தும் மேற்குறிப்பிட்ட 17 வருட காலப்பகுதி என்பது கல்வி நிர்வாக சேவைக்கே ஏற்றுக்கொள்ள முடியாத அதிக பட்ச காலப்பகுதியாகவுள்ள போது ஆசிரிய கல்வியலாளர் சேவைக்கு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத காலப்பகுதியாகும். குறிப்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களை ஒத்த பணியை ஆற்றும் ஆசிரிய கல்வியிலாளர் சேவையைச் சேர்ந்தவர்கள் மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தமது ஆசிரிய கல்வித் தேவைப்பாட்டை அதாவது முதுமாணிக் கற்கை தேவைப்பாட்டை பூர்த்தி செய்யவேண்டும் என்பதாக சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் மாற்றப்பட வேண்டும். அதிக பட்சமாக 10 வருடம் அதாவது தரம் III இலிருந்து தரம் II க்கு பதவியுயர்வு பெறுவதற்கான கட்டாய தகைமையாக முதுமாணிக் கற்கைத் தேவைப்பாடு இருப்பதே பொருத்தமானது. அதுவே அவர்கள் தமது பாடப்பரப்பு சார்ந்த நுண்மான் நுழைபுல அறிவைப் பெற்றுக்கொள்ள வழி செய்யும். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது மேற்படிப்பை எட்டு வருட காலப்பகுதிக்குள் பூர்;த்தி செய்யாதுவிடின் பதவியிலிருந்து இடைநிறுத்தப்படும் அபாயமுள்ளவையும் விசேட கவனத்துக்குரிய அம்சமாகும்.
மேலும் வடபுலத்தை மையப்படுத்தி இவ் விடயத்தை அவதானிக்கும் போது பின்வரும் விடயங்களை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
1. ஆசிரிய கல்வியலாளர் சேவையில் உள்ள பலர் துறை சார் முதுமாணிப்பட்டங்களை (குறிப்பாக விஞ்ஞானத்துறை சார்ந்தோர்) பெற்றுக்கொள்ள முயற்சிக்காது கல்வி முதுமாணிப் பட்டத்தை பெறுவதற்கான முனைப்பில் உள்ளனர்.
2. ஆசிரிய கல்வியலாளர் சேவைக்குள் பிரவேசிக்கும் போதே பலர் கல்வி முதுமாணித் தகுதிப்பாட்டுடனேயே உள்நுழைகின்றனர். அனேகமானோர் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கூடாக உள்நுழைவதனால் தமது ஆசிரிய அல்லது அதிபர் சேவைக் காலத்திலேயே கல்வி முதுமாணிக் கற்கையை நிறைவு செய்துள்ளனர்.
3. ஏற்கனவே தமது துறை சார்ந்த முதுமாணிப்பட்டத்தையுடையோரும் தேவை கருதி இரட்டைத் தகைமையாக கல்வி முதுமாணிக் கற்கை நெறியை தொடர முனைவதும் கல்வி முதுமாணிக் கற்கையின் கேள்வியை அதிகரித்துள்ளது.
4. துறைசார் முதுமாணிப்பட்டங்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் வடபுலத்தில் மிகவும் அரிதாகவேயுள்ளன. குறிப்பாக கணித, விஞ்ஞானத் துறை சார்ந்து எந்த முதுமாணிக் கற்கைகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தற்போது இல்லை. முன்னர் பௌதிகவியலில் முதுமாணிக் கற்கை இருந்த போதும் தற்போது நடைபெறுவதில்லை.
எனவே மேற்குறித்த நிலமைகளை சீர்செய்யத்தக்க வழிமுறைகளை நாம் வடபுலக் கல்வி கட்டமைப்பில் உருவாக்குதல் வேண்டும். அதாவது ஆசிரிய கல்வி குறித்து புதிய சிந்தனைகள் தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் உருவாக வேண்டும்.

ஆசிரிய கல்விக்காக தேசிய மட்டத்தில் செய்யப்பட வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள்
1. ஆசிரிய கல்வியில் முன்னுரிமை ஒழுங்கு குறித்த தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்பட்டு ஆசிரிய கல்வியை வழங்கும் நிறுவனங்களில் அது நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
2. கல்விமாணிப் பட்டக்கற்கைகள் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வெட்டுப்புள்ளி அடிப்படையிலான அனுமதி வழங்கப்படவேண்டும்.
3. கல்விமாணிக் கற்கையை பூர்த்தி செய்பவர்களை மட்டுமே ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கத்தக்க வகையில் சேவைப்பிரமாணக் குறிப்புக்கள் திருத்தப்படவேண்டும்.
4. பிராந்தியங்களை மையப்படுத்தி பல்கலைக்கழகங்களில் கல்விப் பீடங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போது கல்வியியல் தொடர்பான கற்கைகளை வழங்கிவரும் பேராதனை,யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் துறைகள் பொதுக்கொள்கையின் அடிப்படையில் பீடங்களாக தரமுயர்த்தப்படவேண்டும். தேசிய கல்வி ஆணைக்குழு ஆசிரிய கல்வி தொடர்பில் மேற்கொண்ட ஆய்வொன்றில் பேராசிரியர். எலிசி.கொத்தலாவல முன்வைத்த பரிந்துரைகளில் முதலாவது பரிந்துரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை தனித்த ஒரு பீடமாக தரமுயர்த்தப்படவேண்டும் என்பது யாழ்ப்பாணத்தில் ஒரு கல்விப் பீடம் அமைவதற்கான வாய்ப்பை நியாயப்படுத்துவதற்கான சான்றாகவிருப்பது சாதகமான அம்சமாகும்.
5. தாம் சார்ந்த பாடப்பரப்புக்களில் முதமாணிக் கற்கைகளை நிறைவு செய்யும் கல்வி நிர்வாக சேவை விசேட ஆளணியினர் மற்றும் ஆசிரிய கல்வியியலாளர் சேவையைச் சேர்ந்தோரை ஊக்குவிக்கத்தக்க பொறிமுறைகள் மேம்படுத்தப்படவேண்டும்.
6. ஆசிரிய சேவையில் கல்வி முதுமாணிக்கற்கைக்கு அளிக்கப்படும் முன்னுரிமைக்குச் சமனான முன்னுரிமை துறை சார் பாடப்பரப்புகளின் முதுமாணிக் கற்கைக்கும் அளிக்கப்படவேண்டும். அதனை உறுதிசெய்ய துறைசார் முதுமாணிக் கற்கைகளில் கல்வியியல் சார் சில முக்கிய அலகுகளை இணைத்துக்கொள்ள முடியும்.

ஆசிரிய கல்விக்காக பிராந்திய மட்டத்தில் செய்யப்பட வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள்
1. ஆசிரிய கல்வி கற்கைநெறிகளுக்கான அனுமதிகளின் போது பதவிநிலை அந்தஸ்து சேவைக்காலம் என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அனுமதி வழங்குவதை விடுத்து தொழில்சார் முன்னேற்றத்துக்கு ஆசிரிய கல்வியின் அவசியம் குறித்த சிந்தனைகளில் முன்னுரிமையும் அனுமதியும் வழங்கப்படவேண்டும்.
2. மேற்குறித்த நிலமைகளின் படி கல்வி முதுமாணிக் கற்கைகளில் பாடசாலை ஆசிரியர்களுக்கு குறிப்பாக இளம் ஆசிரியர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்குவது அவசியம். இது ஆசிரியர்களின் தொழில்வாண்மையை விருத்தி செய்வதுடன் கல்வி புலங்களின் மேல்நிலைப் பதவிகளுக்கு இளைய வயதில் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வர வழிசெய்வதுடன் வடக்கு கல்விப் புலத்தையும் மேன்மையுறச் செய்யும்.
3. அதிபர் சேவை பதவியுயர்வுக்கு தேவையான கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அல்லது திறந்த பல்கலைக்கழக மற்றும் தேசிய கல்வி நிறுவக பிராந்திய நிலையங்களில் விரைந்து ஆரம்பிக்கப்படவேண்டும்.
4. ஆசிரிய கல்வி தொடர்பில் துறைசார்ந்தோரிடம் உள்ள மாயவிம்ப எண்ணங்கள் அகற்றப்பட்டு புதிய சிந்தனைகள் உருவாகதக்க வகையில் மனப்பாங்கு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
5. துறை சார் பாடப்பரப்புக்களில் முதுமாணிக் கற்கைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் குறிப்பாக விஞ்ஞானத்துறையில் ஆரம்பிக்கப்பட்டு அவற்றை தொடர்வதற்கான ஊக்கப்படுத்தல்கள் வழங்கப்படவேண்டும்.

முடிவுரை
ஆசிரிய கல்வியின் தரமும் அது வழங்கப்படும் முறைமையின் தரமும் கல்வியின் தரத்தை நிர்ணயிக்கும் பிரதான காரணிகளாகும். நாட்டின் தேசிய மனித வள உற்பத்தியில் கல்வித் துறை கணிசமான பங்களிப்பை ஆற்றுகின்றது. அங்கு செய்யப்படும் வினைத்திறனான மனிதவள மேம்பாட்டுத் திட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டின் வினைத்திறன் மற்றும் விளைதிறனையும் அதிகரிக்கும். அது பயனுறுதித்தன்மை மிக்க வகையிலும் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க வகையிலும் கல்வி சார் நோக்கங்களை எய்தத்தக்க வழிகளைத் திறக்கும். ஓளைவையாரின் வரப்புயர வழியில் சொல்வதனால்,
‘ஆசிரியர்கள் தரமுயர மாணவர் தரமுயரும்
மாணவர் தரமுயர கல்வித் தரமுயரும்
கல்வித் தரமுயர சமூகத்தரமுயரும்
சமூகத் தரமுயர தேசத் தரமுயரும்’
எனவே ஆசிரியர்களை வலுப்படுத்துவோம் எனும் சிந்தனையை அடியொற்றி ஆசிரியத்துவத்துடன் தொடர்புடைய அத்தனை தரப்புக்களினதும் தரத்தையும் மேம்பாடடையச் செய்யும் விதத்தில் ஆசிரிய கல்வி குறித்த சிந்தனைகளை மாற்றிக்கொள்வது காலத்தேவை கருதிய பணியாகும்.
உலகளாவிய ரீதியில் சிந்திப்போம் உள்ளுர் அளவில் செயலாற்றுவோம்.

Advertisement

Comments are closed.