அளவையின் இசைச் செல்வி அவுஸ்திரேலிய அருணோதயத்தில்..

ஈழத்து இசை வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் வைசாலி…..

vaisaliயார் இந்த வைசாலி? கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கொண்ட இசைக்குடும்பத்தைச் சேர்ந்த திரு. யோகராஜன், திருமதி. நீதிமதி யோகராஜன் ஆகியோரின் செல்வப்புதல்வி. 2014 ஆம் ஆண்டு ஈழத்தில் சக்தி தொலைக்காட்சியினரால் நடாத்தப்பட்ட “யூனியர் சுப்பர் ஸ்டார்” என்கின்ற வெற்றி மகுடத்தைத் தன் இசை ஞானத்தினாற் தனதாக்கிக்; கொண்ட குட்டித் தேவதை. அப்போது இவளுக்கு வயது பதினொன்று.
அம்மம்மாவின் தாலாட்டில் மெய்மறந்து துயில்கொண்டும், பெரியம்மா ஹேமவதி கபிலதாஸின் இசை வகுப்புகளைத் தினமும் செவிமடுத்தும், வளர்ந்த இந்தக் குழந்தையிடம் குடி கொண்டிருந்த இசையாற்றலை, முதன் முதலிற் கண்டறிந்தவர் இவரின் அம்மம்மாதான். அம்மம்மாவின் அறிவுறுத்தலின் படி மூன்று வயதில் இருந்தே அப்பா யோகராஜனும், அம்மா நீதிமதியும் வைசாலிக்கு இசையைக் கற்பிக்க ஆரம்பித்து விட்டனர். வைசாலிக்கு ஐந்து வயதாக இருக்கும் போது ஈழத்தின் மிகச் சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகர்களில் ஒருவரும், இராமநாதன் நுன்கலைக் கழகத்தில் மிக நீண்ட காலமாக மிகச்சிறந்த இசை விரிவுரையாளராகக் கடைமை புரிந்தவருமான திரு ஏ.கே.கருணாகரன் அவர்கள் வைசாலியின் இசை ஞானத்தினைக் கேள்வியுற்றுத் தனது “ஆலாபனா” சபையில் மும்மூர்த்திகள் விழாவிற் பாடவைத்தார்.

இதுவே வைசாலியின் முதல் மேடையேற்றமாகவும், இசை உலகப்பிரவேசமாகவும் அமைந்தது வைசாலியின் பெற்றோர் செய்த புண்ணியமாகும். அந்த விழாவிற்குச் சென்றிருந்த இசையாளர்களின் பாராட்டும், வாழ்த்தும், அறிவுறுத்தல்களும் வைசாலியைச் சிறந்த இசை வித்தகியாக்கிப் பார்க்க வேண்டும் என்ற மிகப் பெரிய ஆவலைப் பெற்றோர்களுக்கு ஏற்படுத்திவிட்டது. அன்றிலிருந்து பெரியம்மா ஹேமவதி மிகவும் கூடுதல் கவனத்தோடு வைசாலிக்கு இசையைக் கற்பித்து வருகின்றார். இதற்குப் பக்கபலமாகப் பெற்றோர்வைசாலியின் நடன ஆசிரியர் திருமதி தயானந்தி விமலச்சந்திரன், வயலின் ஆசிரியை திருமதி ரோகினி, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (வைசாலி பயிலும் பாடசாலை) அதிபர், ஆசிரியர்கள் அனைவரும் திகழ்வது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
இந்த உற்சாகம் கரைபுரண்டு ஓடும் வகையில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட தமிழ்த் தினப்போட்டியிற் கீழ்ப்பிரிவுத் தமிழிசையில் முதற் பரிசினைப் பெற்றுத் தான் கல்வி பயிலும் பாடசாலைக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளாள். வைசாலி பாடிய, சிந்து பைரவி இராகத்தில் அமைந்த “தேடியுன்னைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி” என்ற பராதியார் பாடலையும், விருத்தத்தினையும் அண்மையில் கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன். அவளிடம் உள்ள சுருதிஞானம், ஸ்வரஞானம், லயஞானம், ப்ருகாக்கள் எவ்வளவு அற்புதமாகப் பாடுகின்றாள். இந்த வயதில் விருத்தம் பாடுவது என்பது இலகுவானதொரு விடயமல்ல. நல்ல ஞானம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். வைசாலியிடம் இயற்கையாகவே அந்த ஞானம் குடிகொண்டிருக்கிறது.
2002 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த “இவன்” படத்தில, கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டு, இசை ஞானி இளையராஜாவின் அற்புதமான இசையமைப்பில், முதற்பகுதி சிம்ஹேந்திர மத்யமத்திலும் பின்னர் இராகமாலிகையாகவும் உருவான, சுதா இரகுநாதனாற் பாடப்பட்ட “என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே” என்ற கடினமானதொரு பாடலை இரண்டு வருடங்களுக்கு முன்பு பாடியுள்ளாள். சக்தி தொலைக்காட்சி நடாத்திய யூனியர் சுப்பர் ஸ்டார் நிகழ்வின் இறுதிச் சுற்றுப் போட்டியின் போது வைசாலி பாடிய “என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே” என்ற பாடலை இதோ வைசாலியன் குரலில் கேட்டு மகிழுங்கள்.

யுத்தத்தின் பின்னர் ஈழத்திற்; தமிழ் மக்களின் வழ்வியல் முறைகள் பாதிக்கப்பட்டுக் கலை, கலாசாரம், பண்பாடு ஒழுக்கம் கல்வி, பொருளாதாரம் என்று பலவற்றையும் மீண்டும் கட்டியெழுப்பப் போராடிக் கொண்டு இருக்கும் ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டு இவ்வாறு சாதனை புரிவதற்கு முடிந்தது என்றால் அதற்கு, அவள் புலன்களை நல்வழியிற் செலுத்துவதற்கான நல்ல குடும்பச்சூழலைப் பேணி வளர்க்கும் வைசாலியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும். இந்தக் குட்டித் தேவதை வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நிகழவிருக்கும் “முத்தமிழ்மாலை” நிகழ்விற் பாடுவதற்காக சிட்னிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றாள் என்பதைக் கேள்வியுற்றதும் மிக்க மகிழ்வுற்றேன். அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இங்கு எனது பதிவாக வெளிவந்துள்ளது. வைசாலி தமிழிசையை மிக ஆழமாகக் கற்று, இசைத்துறையில் வேரூன்றி, ஈழத்து இசை வரலாற்றில் ஒரு அற்புதமான பாடகியாக, ஆழத்தடம் பதிக்க இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.

Advertisement

Comments are closed.