அருளம்பலம் ஆசிரியருக்கு மாணவனொருவனின் கவிதாஞ்சலி

DSC03100அளவெட்டி நகர் ஆருணோதயக் கல்லூரி விஞ்ஞான ஆசிரியர்
அமரர் உயர் திரு.க.அருளம்பலம் அவர்கள்
இறைவனடி சேர்ந்தமை குறித்து
அவரது மாணவன் அளவையூர் கவிக்குமரன் கலைஞானமணி தி.லம்போதரன் வழங்கிய
கழிவிரக்கச் சொன்மாலை

அந்தோ மறைந்தீர் அருளம்பல மணியே -துயர்
அஞ்சலி செய்திட கண்ணீர் வழியே
சிந்திடத் துளிகளைச் சென்றீர் எங்கே -உடன்
செப்புவீர் ஐயா செயலற்று இங்கே
வெந்திடப் பலரும் வேதனைத் தீயில் -உமக்கு
விரைந்துமே திறந்ததேன் மரண வாயில்
தந்தனை உயிரை த் தவித்திட உறவே -யாரும்
தாங்கிட இயலா உமது மறைவே!

பதியளவைத் திருவிழா பாங்குற நடைபெற -அன்று
பார்த்தவர் அனைவரும் பாராட்டி பயன்பெறப்
புதியன புகுத்தி கல்வியுள்விஞ் ஞானமது அளித்தீர்
பெற்றவர் மலர்முகம் கண்டே உள்ளம் களித்தீர்
நிதியதில் உமது பங்கும் உண்டே உம்
மதிநிகர் உழைப்பே மறவாத் தொண்டில் வாழ்ந்து
விதியென ஒன்றும் உண்டென அறிவேன் –அதன்
விளைவென உணர்ந்ததால் ஆறுதல் பெறுவேன்

நல்விதமாய் பழகுவதாய் கைகள் கோர்த்து
வாரிபோல் நெஞ்சகத்தில் அன்பு சேர்த்து
வல்லவராய் தனைக்கூட்டி கல்வி நல்கி
விஞ்ஞான தமிழறிவால் கவனமீர்த்து வாஞ்சையோடு
துல்லியமாய் எங்களுக்கு தந்தபாடம்
படிக்கின்ற போதெங்கள் புந்தியேற்று
எல்லோர்க்கும் விளங்கிடவே தந்த ஆசான்
எக்காலம் உமைக்காண்போம் ஏந்திழையீர் சென்றீர்

வந்தவர் எல்லாம் போவது உண்மை –இது
வாழ்வியல் ! உலகில் ! இயற்கைத் தன்மை
சிந்தனை எனக்குத் தோன்றிய போதுமென் –நெஞ்சில்
செப்பிட இயலா துயரே மோதும்
உந்தனை ஐயா இழந்த உணர்வே மிஞ்சும் –என்றும்
உள்ளத்தில் உமது நினைவே துஞ்சும்
வந்தனை செய்வோம் வாழும் வரையில் –அளவைபதியிவர்
வரலாற்றில் சிறப்பிடம் பெற்றீர் வல்லோய்

கல்லிற் பதிந்திட்ட காற்தடமாய் அருளம்பல ஐயாதன்
சொல்லில் பதித்த சுவை அவரின் பின்னாலே
பார்த்து வழிநடக்கும் மாணவரை மேலுயர்த்தும்
குன்றாது விஞ்ஞானபாடத்தை குறையா தளித்தவரை
ஏனோ தெரியாது எடுத்துவிட்டான் காலனவன்
பொய்யாமுடல் விடுத்துப் புகழுடலைத் தாங்கிவிட்ட
அன்னாரின் பேரிழப்பால் அளவை நகரழுகிறது
மீளாப் பிரிவதனால் வேதனையிலே ஆழ்ந்தோமே

என்னருமைக் குருமகனே எங்கள் கல்வி
யாழருணோ தயத்திலன்றுகளிக்கு மாறு
பொன்னான பணிகளினால் விழுது விட்டீர்
போனதிசை எல்லாமே போற்றக் கண்டோம்
முன்னையெம் குருதெய்வம் நீங்கள் தானே
அமரராகி யிருந்துமலர் சொரியச் செய்தீர்
மின்னும் மாசற்றோன் காலில் தொட்டு
வணங்குகிறேன் உம்மாத்மா சாந்திபெற !

மாய்ந்ததே அறிவின் மேதை!
மறைந்ததே அளவையின் விஞ்ஞான ஜோதி!
காய்ந்ததே மாணவர் நெஞ்சமெனுஞ் சோலை!
கையிலே கடிகாரம் களட்டியே நிற்கும் போது
நெஞ்சிலே பயங்களேறி படித்தவர் நாங்களன்று
ஓய்ந்ததே! உங்கள் பணிகள் ஓங்கிடும் கிராமம் விட்டு
உடைந்ததே நெஞ்சமிங்கு , கண்ணீரில் வெள்ளம்
பாய்ந்ததே கல்வியால் வைத்த பயிரெலாம் செழிக்கு மாறே!

கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க
மூடிவைத்து உம்முகத்தை நாங்கள்
கூடிவந்து கொண்டு செல்லும்கொடிய நிலை ஏன்  ஐயா
பூர்த்த உங்கள் கொடியினிலே பார்த்திபனும் பவானியும்
சொத்தென சேர்த்த சொந்தங்கள் கதிகலங்க
தாளாத் துயரதனைத் தாங்கித் தவித்திருக்கும்
அன்னார் குடும்பத்தார் அனைவருக்கும்
அடியேனின் ஆழ்ந்ததொரு அனுதாபம் சமர்ப்பணமே.

Advertisement

Comments are closed.