அருளம்பலம் ஆசிரியருக்கு அஞ்சலி…

கடந்த வியாழக்கிழமை காலமான ஆசிரியர்.க.அருளம்பலம் அவர்களின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு அளவெட்டி கேணிக்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அவரது மாணவர்களுள் ஒருவரான அளவெட்டியைச் சேர்ந்த நோர்வே வாழ் அன்பர் இளையதம்பி யோகேந்திரன் அனுப்பி வைத்துள்ள அஞ்சலிக் கவிதை…

DSC06544பூத்த மலர் பொழுது சாய வாடிவிடும்
காய்த்த கனி பழமாகி நிலத்தில் விழும்
காலமென்ற சுழல் காற்றில் கலையாத
பொருள்கள் உண்டோ ?

காரணங்கள் பலசொல்லி
கவலைகளை அணைத்திட
ஐயா நிந்தன் பிரிவு
சாதாரண பிரிவல்ல

எழுத்தறிவித்தவன்
இறைவனாகின்றான் –அந்த
இறைவனுக்கே சேவை செய்து
புனிதனாகி நின்றீர்

வலிக்கும் இதயத்தோடு -எம்
கல்லூரி காலத்தினை எண்ணிப்பார்க்கின்றேன்
விஞ்ஞான பாடத்தின் வித்தகனாய்
ஆரம்ப விஞ்ஞான அறிவினை அன்புடன் புகட்டி அவர்தம்
உயர் கல்விவரை கை பிடித்து
நடத்தி வந்த ஆசான் அல்லவா நீர்

நீங்கள் சொல்லித்தான்
ரசாயனங்கள் தெரிந்தன
உங்கள் கல்வியினால்
அமிலங்கள் புரிந்தன

எங்களின் உடலின் உறுப்புகளை
அழகாக வரைய கற்றுக்கொண்டதும்
உங்களின் சீர்கொண்ட
கல்வியினால் தானே ஐயா

எண்ணத்தில் இருந்த சங்கிலி மன்னனின்
வரலாற்றினை தமிழ் வண்ணத்தில் அரங்கேற்றி
எம் கண்கள் குளிர வைத்த மாபெரும்
கலாவித்தகர் நீங்கள் அல்லவா

அனல் தெறிக்கும் தமிழோடு
அவையினரை கட்டிப்போடும்
திறமையோடு அரங்கங்கள் கண்ட
நாடகங்கள் எத்தனை எத்தனை

ஆலய பஜனைகள் என்றாலும் சரி
அலுக்கை ,கேணிக்கரை வைரவர்
பூசைகள் என்றாலும் சரி அயலவர்களை
அனுசரித்து சிறப்பாக செய்து முடிப்பதும்

அப்பன் கும்பளாவளையான் ஆலயம்
மீண்டும் புது பொலிவுடன் மாறிட
கடமை புரிந்த கண்ணியவான்
தாங்கள் அல்லவா

பன்முக திறமைகள் கொண்ட
பண்பாளரே தங்களின் பிரிவு
குடும்பத்தவருக்கு மட்டுமல்ல
அயலவருக்கும் அளவெட்டி மக்களுக்கும்
மிகப்பெரிய பேரிழப்பாகும்

ஆசானின் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறையருளை வேண்டி
என் கண்ணீர் அஞ்சலியினை
காணிக்கையாக்குகின்றேன்

இளையதம்பி யோகேந்திரன்
நோர்வே

அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின்  கண்ணீர் காணிக்கை
IMG_5709எங்கள் வல்லமைப் பொருளான அருணோதயத் தாயின் தவமைந்தர்களில் ஒருவரும் பின்நாளில் எங்கள் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியாகவும் கடமைபுரிந்த அருளம்பலம் ஆசிரியர் அவர்களின் மறைவுச் செய்தி மனதை வருத்துகின்றது. நிமிர்ந்த நடையும் நேர்த்தியான உடையும் சீராக வகிடு எடுத்த தலையும் சிரித்த முகமும் என அவர் கல்லூரியில் உலா வந்த நாள்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. பெறுமதியான மனதிராக காலம் என்றும் மறக்க முடியாத கனதியான மனிதராக அவர் எங்கள் நினைவுகளில் நிறைந்திருக்கின்றார். அமரரின் பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகளின் துயரில் பங்கெடுத்து ஆறுதல் சொல்லி அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை சார்பில் அஞ்சலிகளை தெரிவித்து நிற்கின்றோம்.

Advertisement

Comments are closed.