ஆசிரியர் என்போன் எவன்….? சர்வேஸ்

ஆசிரியர் என்போன் எவன்….
இ.சர்வேஸ்வரா B.Sc(Hons) spl in Sc & Edu
உதவிப்பதிவாளர்
மருத்துவபீடம்
யாழ்.பல்கலைக்கழகம்.

அறிமுகம்
imagesஆசிரியத்துவம் என்பது வெறுமனே ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவது கிடையாது. அது சமூக மாற்றங்களை விளைவிக்கவல்ல கருவியாகவே கருதப்படுகின்றது. உலகை மாற்றிய மகத்தான மனிதர்களுள் பலர் ஆசிரியர்களாக இருந்திருப்பது வரலாற்று தரவுகளை புரட்டும் போது புலப்படுகின்றது. வெறுமனே வகுப்பறைகளில் பாடப்புத்தகங்களில் இருக்கும் விடயங்களை தயார்பண்ணிக் கற்பிப்பதுடன் மட்டும் ஒரு உண்மை ஆசிரியனின் பணி முடிந்துவிடுவது கிடையாது. ஒரு பிள்ளைக்கு வீட்டில் நல்ல ஆசிரியனும் பாடசாலையில் நல்ல பெற்றோரும் கிடைக்கும் போதே அவனால் தனது முழுமையை எட்ட முடியும் என்பது உளவியவாளர்களின் உரமான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படை எதுவெனில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பெற்றோரைப் போலவும் இருக்க வேண்டும் என்பதேயாகும். இது தான் சமூகம் எதிர்பார்க்கும் ஆசிரியத்துவத்தின் மூலமாகும். எனவே ஒரு ஆசிரியன் எப்படி ஒரு பெற்றோராக இருக்க முடியும் என்பது குறித்து தீவிரமாக சிந்தித்தாகவேண்டும்.

ஆசிரியன் பெற்றோராக மாறும் அவத்தை மாற்றம்

பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை பெறுவதற்காக மட்டுமே பாடசாலைகளுக்கு வருகின்றார்கள் என்பது கிடையாது. மாறாக அவர்கள் தங்கள் வாழ்வியலுக்கான அடிப்படைத் தேவைகள் பலவற்றை பூர்த்தி செய்யும் மையமாக பாடசாலையைக் கருதுகின்றார்கள். அல்லது அவர்கள் அவ்வாறு கருதத்தக்க நிலையை பாடசாலைகளில் உருவாக்க வேண்டும். இன்று நமது சூழலில் உலக உணவுத் திட்ட மதிய உணவைப் பெற்றுக்கொள்வதற்காகவே பாடசாலைக்கு வரும் ஒரு தொகுதி மாணவர்களும் இருக்கின்றார்கள் என்ற உண்மையையும் புறந்தள்ளிவிடமுடியாது. அது போன்று வீட்டுச் சூழலினால் உளநெருக்கடிகளுக்கு உள்ளாகும் மாணவர்கள் அவற்றுக்கான தீர்வினை தரவல்ல மனிதர்களைச் சந்திக்கும் களமாகவும் பாடசாலைகளைப் பார்க்கின்றார்கள். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுதல் நண்பர்களுடன் இணைந்ததான பள்ளிக்கான பயணங்கள் போன்றவற்றை மையப்படுத்தி பாடசாலைக்கு வரும் பல மாணவர்களை நீங்கள் சந்திக்கக்கூடும். குறிப்பாக இத்தகைய மாணவர்கள் தமது ஆசிரியர்களை “ஊhயடம யனெ வுயடம” பணிபுரியும் மனிதர்களாகப் பார்க்க சங்கடப்படுகின்றார்கள். இவ்வாறான மனநிலை தோன்றும் மையத்தில் தான் ஒரு ஆசிரியன் பெற்றோராக தன்னை அவத்தை மாற்றம் அல்லது உருமாற்றம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எழுகின்றது.

போர் சப்பித் துப்பிய மனிதர்கள் வாழும் பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் நம் சமூகம் இவ் அவத்தை மாற்றத்தை அதிகம் எதிர்பார்க்கின்றது. பெற்றோரை இழந்த பிள்ளைகள்ää ஒற்றைப் பெற்றோருடன் வாழும் பிள்ளைகள்ää உழைப்பாளிகளாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிள்ளைகள்ää போரின் தாக்கத்தினால் உடல் உளப் பாதிப்புக்குள்ளான பிள்ளைகள் என பலதரப்பட்ட தேவைகளை உடைய பிள்ளைகளைச் சந்திக்கும் ஆசிரியர்கள் தம்மை பெற்றோர்களாக உருமாற்றம் செய்யும் செயன்முறைக்கு தயார் இல்லையெனில் அவர்கள் தங்கள் ஆசிரியத்துவத்தில் தோற்றுப்போய்விடுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பள்ளிக்கு பசியுடன் வரும் பிள்ளைக்கு பாடம் புரியும் என எதிர்பார்ப்பது அபத்தமானது. அதுபோன்று இந்தப் பிள்ளைகளுக்கு எது சொன்னாலும் விளங்காது எனும் முடிவுக்கு வருதலும் ஆபத்தானது. இந்த இரட்டை நிலையை இயல்பாக கையாளக்கூடிய வல்லமைமிக்கவராக ஆசிரியர் தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்.

அரசின் கல்விக்கொள்கைளின் படியான ஆசிரியத்துவம் என்பது எந்த சூழ்நிலைக்கும் இயைந்து வரும் திறனற்றது என்பது கசப்பான உண்மை. பொதுமைப்பாடான ஒரு சிந்தனைத் தளத்தில் உருவாக்கப்பட்ட கொள்கைகள் எப்போதும் நூற்றுக்கு நூறுவீதம் எல்லாவற்றுக்கும் பொருந்திவரும் என நினைப்பதும் முட்டாள்தனமானது. ஒரு ஆசிரியன் தான் கற்பிக்கும் பாடசாலைச் சூழல் பாடசாலை அமைந்துள்ள சமூகச் சூழல் என்பவற்றுக்கு ஏற்ப தன்னை உருமாற்றிக் கொள்ளுவது மிக அவசியமானது. இவ் உருமாற்றத்துக்கு தயார் இல்லாதää உருமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கற்ற ஆசிரியர்களால் தம் ஆசிரியத்துவத்தை சிறப்பாக ஆற்ற முடியாது போவதுடன் தாமும் உளநெருக்கடிகளுக்கு வீணாக முகம் கொடுக்க வேண்டியவர்களாகின்றார்கள். குறிப்பாக அதிகஸ்ட பிரதேசங்கள் என அடையாளப்படுத்தப்படும் பிரதேசங்களில் ஆசிரியத் தொழில் புரியும் நண்பர்கள் பலரிடம் இதனை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அதேவேளை மிகச் சிறப்பாக தம்மை உருமாற்றிக் கொண்டும் தாமும் மகிழ்ச்சியாகவிருப்பதுடன் தமது கற்பித்தல் சூழலையும் மகிழ்வாக வைத்திருக்கும் பல ஆசிரியர்களையும் நாம் காண்கின்றோம்.
“தக்கன பிழைக்கும் தகாதன மடியும்” எனும் டாவினின் கூர்ப்புக் கொள்கையின் தத்துவம் ஆசிரியத்துவத்துக்கு மிகப்பொருந்தும். சூழ்நிலைக்கேற்ப தம்மை உருமாற்றம் செய்துகொள்ளும் ஆசிரியர்கள் இயல்பாக பிழைத்துக்கொள்கின்றார்கள். தமது ஆசிரியத்துவத்தின் அடிப்படை நோக்கங்களையும் அவர்களால் எட்ட முடிவதுடன் தம்மைச் சார்ந்திருக்கும் பாடசாலைச் சமூகத்துக்கும் பயன்மிக்கவர்களாக இருக்கின்றார்கள்.

உருமாற்றத்துக்கு தயார் ஆவது எப்படி?
இது மிக முக்கியமான வினாவாகும். நம்மில் பலர் நமக்கு இயைபற்ற சூழலை ஏற்றுக்கொள்ள தயாரற்றவர்களாகவே இருக்கின்றோம். நமக்கு ஏற்றபடி சூழலை மாற்றியமைக்க முயற்சிக்கின்றோமே தவிர சூழலுக்கு ஏற்றவிதத்தில் நம்மை மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. நமக்கேற்ப சூழலை மாற்றுவது என்பது அனேகமான வேளைகளில் தோல்வியிலேயே முடிவடைகின்றது. எனவே நாம் தான் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த மாற்றத்துக்கு முதன்மைத் தேவை மனப்பாங்கு நிலையிலான மாற்றம்.

மனப்பாங்கில் மாற்றம்
மனப்பாங்கு என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமானது. இதனை ஒரு சிறிய உதாரணம் மூலம் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். காட்டு விலங்குகளின் அரசானாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது சிங்கம். ஆனால் காட்டில் உள்ள பலமான விலங்கோ அல்லது அழகான விலங்கோ அல்லது உயரமான விலங்கோ அல்லது மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கோ அல்லது நுண்ணறிவான தந்திரமான விலங்கோ சிங்கம் கிடையாது. நம்மில் பலர் உயர்வாக நினைக்கும் இந்தத் தகுதிகள் எதுவும் கொண்டிராத சிங்கம் எப்படி காட்டுக்கு அரசனாகவிருக்கின்றது என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவு சிங்கம் மற்றைய விலங்குகளை விட மனப்பாங்கில் வேறுபட்டதாகவிருப்பதே அது அரசனாக இருக்க காரணம் என அறியப்பட்டது. சிங்கத்தின் முக்கிய இயல்பேää சூழலை நன்கு அவதானித்து அதற்கேற்ப தன்னை தயார்ப்படுத்திக் கொள்வது தான். சிங்கம் பத்து அடி தூரம் நடந்தால் ஒரு தடவை நின்று நிதானிக்கும். தான் வந்த பாதையும் செல்கின்ற பாதையும் சரியா என்பதை உறுதிசெய்து கொள்ளும். பிடரி மயிரை சிலிர்த்து பின்னுக்கும் பக்கமாகவும் திரும்பி நோக்கும். இதனைத் தான் “அரிமா நோக்கு” எனத் தமிழில் சொல்கின்றார்கள். இந்த சூழலை அவதானித்து அடியெடுத்து வைக்கும் அரிமா நோக்குத்தான் சிங்கத்தை காட்டின் அரசனாக தக்க வைத்துள்ளது.
இவ் உதாரணத்தின் மூலம் நாம் ஒரு உண்மையை விளங்கிக்கொள்ள முடியும். மற்றவர்களை விட நம்மை வேறுபடுத்தி உயர்த்தும் இயல்பு நம் மனப்பாங்கும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றியமைத்துக்கொள்ளும் பண்பும் தான். எனவே ஆசிரியர்கள் முதலில் செய்ய வேண்டியது தம் கற்பித்தல் சூழலுக்கு ஏற்ற விதத்தில் தம்மை உருமாற்றிக்கொள்ளும் மனப்பாங்கினை உருவாக்கிக்கொள்வது தான். மனப்பாங்கில் ஏற்படும் மாற்றம் மற்றைய விடயங்களை இலகுவாக மாற்றியமைத்து விடுகின்றது. மற்றவர்களும் மாணவர்களும் தமக்கு ஏற்ற விதத்தில் மாற வேண்டும் எனும் எதிர்பார்ப்பினை ஆசிரியர்கள் கைவிடுவது தான் முதலாவதாக செய்யத்தக்க மனப்பாங்கு மாற்றம்.

என்றும் தேவைப்படும் மனிதன் ஆசிரியர்
இரண்டாவது விடயம்ää குறித்த சூழலுக்கு மிகத் தேவையான மனிதராக ஆசிரியர் தன்னை உருமாற்றிக் கொள்வதுää இங்கு தான் ஒரு ஆசிரியன் பெற்றோர்ääநண்பன்ääவழிகாட்டி எனும் வகிபாகங்களை எடுக்கவேண்டிய நிலைக்கு உள்ளாகின்றான். பசியோடு வரும் பிள்ளையின் களைப்பினைப் போக்கும்போதும் கற்பதற்கு உரிய பொருளாதார வசதிகள் இன்றி துயரப்படும் பிள்ளையின் துயர் களையும்போதும் ஒரு ஆசிரியன் பெற்றோன் ஆகின்றான். பதின்ம வயதுப் பருவக்கோளாறுகளினால் பாதை தவறும் ஒரு பிள்ளையை பக்கமிருந்து திருத்தும் போது நல்ல நண்பனாகின்றான். மாணவனின் எதிர்காலம் உணர்ந்து பாதை வகுக்கும் போது நல்ல வழிகாட்டியாகின்றான். இந்த வகிபாகங்களை ஒரு ஆசிரியன் எடுக்கும் போது அவன் தொடர்ச்சியாக தேவைப்படும் ஒரு மனிதன் ஆகின்றான். நமது இருபது வருடங்களுக்கு முந்திய சமூகத்தில் தம் மாணவர்களுக்கு உரிய பருவத்தில் பொருத்தமான வாழ்க்கைத்துணையை தெரிவு செய்து கொடுப்பதில் கூட ஆசிரியர்களின் வகிபாகம் இருந்திருக்கின்றது. இப்படித்தான் ஆசிரியர்கள் தம்மை என்றும் தேவையான மனிதர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்கு ஏற்றாற்போல் தம் திறன்களையும் ஆற்றலையும் அதிகரித்துக்கொள்ளவேண்டும். அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். புதிய விடயங்கள் குறித்த தெளிவை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். காலமாற்றத்துக்கு ஏற்ப தம்மை மாற்றி சூழலுக்கு இயைபாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது இயல்பாகவே ஒரு ஆசிரியன் என்றும் தேவைப்படும் மனிதனாக மாறுகின்றான்.

ஆசிரியர்களை பொதுவாக சிற்பிகள் எனவும் அவர்கள் எதிர்காலத்தை செதுக்கும் மனிதர்கள் எனவும் இலக்கியத்தனமாக விமர்சிப்பார்கள். இது வெறும் உணர்ச்சி சார்ந்த உவமை. எந்த ஆசிரியன் நிகழ்காலத்தை சரியாக துல்லியமாக கணிப்பிடுகின்றானோ அவன் தானாகவே எதிர்காலத்துக்கு தனது மாணவர்களைத் தயாரப்படுத்திவிடுகின்றான். இன்று நமது மாணவ சமூகத்தின் எதிர்காலம் குறித்த அச்சவுணர்வுகள் அதிகம் நம்மை பிடித்துள்ளன. இதற்குக் காரணம் நிகழ்காலத்தின் தன்மையை நுட்பமாக விளங்கி ஏற்றுக்கொண்டு உருமாற்றத்துக்கு தயாராகும் ஆசிரியர்களின் எண்ணிக்கைக் குறைவேயாகும். தவிர்க்கமுடியாத வகையில் இதற்குப் பல காரணங்கள் உண்டு. உலகமயமாதலின் விளைவான தகவல் தொழில்நுட்ப மாற்றம் நமக்குள் ஒரு பாரிய தலைமுறை இடைவெளியை தோற்றுவித்துள்ளது. ஆசிரியருக்கும் மாணவருக்குமான ஆளிடை தொழில்நுட்ப வயது வேறுபாடு உயிரியல் வயதுகளை விட பல மடங்கு அதிகமாகவுள்ளது. மாணவர்களுக்கு ஈடுகொடுக்கத்தக்கவிதத்தில் அல்லது மாணவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்துக் கொடுக்கத்தக்க விதத்தில் ஆசிரியர்கள் தம்மை உருமாற்றவில்லை. இதன்விளைவு தான் பிள்ளைகளை இணையங்களின் பக்கமும் முகப்புத்தகத்தின் பக்கமும் அனுமதிக்காமை. உலகின் புதிய மாற்றங்களை நாம் அவற்றின் தோற்றத்துடன் இணைந்து கற்று சமாந்தரமாக பயணிக்கத் தவறின் சார்புவேகக் கோட்பாடு போல் நாம் பின்நோக்கி தள்ளப்படுவோம். ஒரு மாணவனின் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய விடயங்கள் மிக அவசியமானவை. எனவே மாணவன் அவற்றை நன்மைதரத் தக்கவிதத்தில் அணுக ஆசிரியர் வழிகாட்ட வேண்டும். மாறாக மாணவனை குறித்த விடயத்தில் இருந்து தொலைவில் வைத்திருப்பது என்பது அறிவுத்தனமாகாது.

இது போன்று பண்பாட்டுப் பேணுகையில் ஆசிரியர்கள் மிக முக்கியமான பாத்திரங்களாகவுள்ளார்கள். ஒரு சமூகக் குழுமத்தின் அடையாளம் என்பது அது சார்ந்த பண்பாட்டுத் தொடர்ச்சியை அஞ்சலோட்டம் போல் அடுத்துவரும் சந்ததியிடம் கையளிப்பதிலேயே இருக்கின்றது. இந்த அஞ்சலோட்டத்தின் ஆணிவேராகவிருப்பவர்கள் ஆசிரியர்கள். தமது மாணவர்களுக்கு பண்பாட்டுப் பேணுகையை செயற்பாடுகளின் வழியாக உணரவைத்து இவ் அஞ்சலோட்டம் இடையறுந்து போகாது காப்பாற்றவேண்டிய காத்திரமான பணியினை ஆற்ற வேண்டியவர்கள் ஆசிரியர்கள். முற்போக்கு சிந்தனைகள் நம் சமூகச் சுயத்தை விழுங்கிக்கொள்ளாத வகையில் சமூகத்தை வழிகாட்டத்தக்க மனிதர்களாக ஆசிரியர்கள் உருமாற்றம் கொள்ளவேண்டும்.

சமூக அணிதிரட்டலின் மையம் ஆசிரியர்கள்

உலகமயமாக்கலின் விளைவு நம் சமூகத்தின் சமூகமயமாக்கலை மோசமாகப் பாதித்துவருவதனை அண்மைக்காலமாக காணக்கூடியதாகவுள்ளது. கூடிவாழ்தல் என்கின்ற அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட கீழைத்தேய பண்பாட்டைக் கொண்ட தமிழ்ச் சமூகம் இன்று தனித்த ஒற்றைத்தனம் நோக்கி நகர்கின்றது. நண்பர்களைக் கூட முகப்புத்தகத்திலேயே உயிரற்று சந்திக்கும் நிலை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இந் நிலையில் சமூகமயமாதலின் பெருந்தளமாக விளங்கும் பாடசாலைகளில் இயங்குநிலை மனிதர்களாகவுள்ள ஆசிரியர்களுக்கு நம் சமூக அவத்தை மாற்றத்தை சமன்செய்யக்கூடிய திறன் இருந்தாகவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமயமாதல் நோக்கிய நகர்வுக்கு இணையாக அல்லாவிடினும் குறைந்தளவேனும் சமாந்தரமாக சமூகமயமாதல் நோக்கிய நகர்வுகள் மிகத் தேவைப்படுகின்றன. இந் நிலையில் மாணவர்களை மையம் குவித்து சமூகத்துக்குள் இறக்கும் பொறுப்பினையும் ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்விச் சுற்றுலாக்களின் போது கட்டடங்களையும் கூடுகளில் அடைக்கப்பட்ட காட்டுவிலங்குகளையும் காட்டும் அதேவேளை பல்வேறு பொருளாதார கலாசார வேறுபாடுகளைக் கொண்ட சமூக மட்டங்களையும் அவர்களுக்கு அடையாளம் காட்டவேண்டும். நமக்கு கீழே உள்ளவர் நிலையை நம் பிள்ளைகள் அறிய வேண்டும். இது அவர்களை நம் இனத்தின் தனித்துவமிக்க தலைவர்களாக உருவாக்கும். காலநியதியின் இக் கடமையை ஆசிரியர்கள் கரமேந்தவேண்டும். இத்தகு தேவைக்கேற்ற உருமாற்றத்தை விரைந்து கொள்ளல் இன்றைய நம் சமூக அவசியத்தேவையாகும்.
முடிவு
ஆசிரியர்கள் உருமாற்றும் கருவிகளாக கருதப்படுகின்றார்கள். அதாவது மாணவர்களை உருமாற்றும் செயன்முறையின் கர்த்தாக்கள் ஆசிரியர்கள் என்பது அதன் உள்ளார்ந்தம். ஆனால் தன்னை உருமாற்றிக்கொள்ள தயாரில்லாத ஆசிரியர் ஒருவர் மாணவர்களை உருமாற்றும் செயன்முறைக்குத் தகுதியற்றவர் என்பது எனது கருத்து. எனவே தன்னைத் தயாராக்குதல் என்பதே இன்றைய ஆசிரியர்களின் தேவைப்பாடாகவுள்ளது. மாறுபட்ட சூழல்களை கொண்ட நம் சமூகத் தேவைப்பாட்டை நிறைவுசெய்யத் தக்கவர்களாக ஆசிரியர்கள் உருமாற்றம் கொள்ளும்போது பல பிரச்சனைகள் எளிதில் மறைந்துவிடும். ஆசிரியர்களே நம் சமூகத்தின் அச்சாணிகள். அச்சின் சுழற்சியும் அளவும் வலிமையும் பொருத்தமாக அமையும் போது எத்தகைய தொலைதூர சமூகப் பயணங்களும் சாத்தியமாகும்.

இ.சர்வேஸ்வரா B.Sc(Hons) spl in Sc & Edu
உதவிப்பதிவாளர்
மருத்துவபீடம்
யாழ்.பல்கலைக்கழகம்.

Advertisement

Comments are closed.