ஒரு புகைப்படக்காரன் பொய் சொல்லவேண்டியதில்லை

DSC03083யாழ்ப்பாணத்தில் அறுபது ஆண்டுகளாக பத்திரிகைத் துறையோடும் படப்பிடிப்பு (Photograpy) துறையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் திரு. சங்கர கம்பர் கதிர்வேலு.

எங்கே எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கே ‘கமெரா’வோடு நிற்பார் கதிர்வேலு. இதனால், கதிர்வேலுவைத் தெரியாதவர்களும் இல்லை. கதிர்வேலுவுக்குத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தில் இல்லை. அரசியல், இலக்கியம், கல்வி, சமூகம், நிர்வாகத்துறை என எல்லா இடங்களிலும் கதிர்வேலு செல்வாக்கு மிக்க மனிதாராகியே விட்டார். இதற்குக் காரணம் தன்னிடம் இருந்த ஒரு கமெராவும் நேர்மையான தொழில் முறையும்தான் என்கிறார் கதிர்வேலு.  


இந்த அறுபது ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்டன. ஆட்களும் தலைவர்களும் நடைமுறைகளும் போக்குகளும் மாறிவிட்டன. . ஆனால், கதிர்வேலு மாறவேயில்லை. அவருடைய கையில் இன்னும் கமெரா இருக்கிறது. இந்த வயதிலும் களைத்து விடாமல், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் பதிவு செய்து கொண்டும் இருக்கிறார் கதிர்வேலு.  

கொந்தளிக்கும் அரசியற் சூழலில் கழிந்த அறுபது ஆண்டுகால யாழ்ப்பாண நிகழ்ச்சிகளின் பதிவுகளை கதிர்வேலு செம்மையாகப் பதிவாக்கியிருக்கிறார். இதில் அவருக்கு ஏராளம் அனுபவங்கள் உண்டு. முக்கியமாக 1961 இல் யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் நடத்தப்பட்ட  சத்தியாக்கிரகத்தின் போது ஏற்பட்ட கலவரத்தினால் கதிர்வேலுவின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது. பின்னர், மிஞ்சிய ஒற்றைக் கண்ணோடுதான் அவருடைய ஐம்பது ஆண்டுகால பத்திரிகைப் பணியும் படப்பிடிப்புப் பணியும் கழிந்திருக்கிறது.

இப்போது கதிர்வேலுவுக்கு எழுபத்தி ஏழு (1933.08.16) வயது. ஆனால், சைக்கிளில் திரிந்தே எல்லா இடங்களுக்கும் போகிறார். சைக்கிளில் திரிந்தே படப்பிடிப்புகளைச் செய்கிறார். நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் இருக்கும் கதிர்வேலு இப்போதும் படு பிஸியான ஆள்தான். ஆனால், முதுமை அவருடைய ஞாபகப்பரப்பைச் சிதைக்கத் தொடங்கி விட்டது. பல விசயங்களை நீண்ட  நேரம் நினைவு கூர்ந்த பிறகே சொல்கிறார்.

இன்னும் ‘பறந்து திரியும்’ கதிர்வேலுவைச் சந்தித்து உரையாடியபோது….

1. அன்றைய சூழலில் எப்படி நீங்கள் பத்திரிகைத் துறையிலும் படப்பிடிப்பிலும் ஈடுபட்டீர்கள்?(சிரிக்கிறார்) நாங்கள் தமிழ் நாட்டில் திருச்செங்கோட்டுக்காரர். பாளையங்கோட்டைக்கு அருகே இருக்கிறது இந்த ஊர். சிறிய வயதில் நான் கட்டபொம்மன் இருந்த இடத்துக்குப் போய் பார்த்திருக்கிறேன். அப்பா இளைஞராக இருந்தபோது சுபாஸ் சந்திரபேரின் இயக்கத்தில் இணைந்திருக்கிறார். இதற்குத் தண்டனையாக அவருக்கு அப்போதைய ஆங்கில நிர்வாகம் அபராதம் விதித்தது. அதைக் கட்ட முடியாமல் அப்பா இன்னொரு கூட்டாளியோடு கொழும்புக்குத் தப்பி வந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து கொழும்பு முகத்துவாரத்துக்கு சிறிய ‘டிங்கி’ படகுகள் போய்வரும். அப்படி ஒரு படகில் எங்கள் குடும்பமும் முகத்துவாரத்துக்கு வந்தது.

பிறகு கொஞ்சக் காலம் நாங்கள் கொழும்பில் இருந்தோம். பிறகு யாழ்ப்பாணத்துக்கு வந்து விட்டோம். நான் யாழ்ப்பாணத்தில்தான் படித்தேன்.  பெருமாள் கோவிலுக்குப் பக்கத்திலிருந்த கன்னாதிட்ட சைவ ததுதிவிசாகப் பாடசாலையில் ஆரம்ப வகுப்பைப் படித்தேன். பிறகு வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் படித்தேன்.

ஆனால்,  முழுமையாகப் படிப்பை முடித்துக் கொள்ளவில்லை. நாங்கள் தவில் வாசிக்கும் குடும்பத்தில் இருந்தாலும் நகை செய்யும் தொழிலையே செய்தோம். அப்பா அந்தத் தொழிலில்தான் ஈடுபட்டார். நான் அதற்காக கொழும்புக்குப் போனேன். அங்கே செட்டியார் தெருவில் இருந்தபோது ஐந்து லாம்படிச் சந்தியில் ‘டொனால்ட் ஸ்ரூடியோ’ என்ற புகைப்பட நிலையத்தோடு தொடர்பேற்பட்டது. அந்த ஸ்ரூடியோவில் படங்களைக் கழுவிக் காயவைத்து உதவிசெய்தேன். அப்படிச் செய்யும்போது புகைப்படங்களைப் பிடிப்பதில் விருப்பம் வந்தது. அங்கேயே தொழிலைப் பழகினேன்.

அந்த நாட்களில் சில புகைப்படக்காரர்கள் பத்திரிகைகளிலும் வேலைபார்த்தார்கள். அதில் ஒருவர் கிங்ஸ்லி செல்லையா. அவர் வீரகேசரியில் இருந்தார். அவரோடு தொடர்பேற்பட்டது. அவருக்கு முன்னர் ராஜப்பா என்றொருவர் இருந்தார். அவர் பெரிய கெட்டிக்காரர். இந்த ரண்டு பேரும் இந்திய வம்சாவழி வந்தவர்கள். இவர்களுக்குப் பல பத்திரிகைக்காரருடன் தொடர்பெல்லாம் இருந்தது. ராஜப்பா லேக்கவுஸில் என்னை இணைத்தார். பிறகு அப்படியே வேறு ஆட்களின் தொடர்பு கிடைத்தது. நான் மெல்ல மெல்ல புகைப்படக்காரனாகி, பத்திரிகைகளுக்கான புகைப்படமெடுக்கத் தொடங்கினேன்.

பின்னர் இந்தத் தொடர்பு அதிகமாக லேக்கவுஸ் பத்திரிகை நிலையத்தின் யாழ்ப்பாணத்துக்கான படப்பிடிப்பாளராகினேன். யாழ்ப்பாணத்தை நாடு முழுவதும் என்னுடைய படங்களுக்கு ஊடாக வெளிப்படுத்தி வந்தேன்.

2. யாழ்ப்பாணத்தில் நீங்கள் வேலை செய்யத்தொடங்கிய காலத்தில் எப்ப நிலைமைகள் இருந்தன?

அப்போது யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகளுக்குப் பெரிய அறிமுகங்கள் கிடையாது. மிகக் குறைவான ஆட்கள் மட்டுமே பத்திரிகையைப் படிப்பார்கள். யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகத்தோடுதான் பத்திரிகை படிக்கும் வழக்கம் ஊரெல்லாம் ஏற்பட்டது. நான் யாழ்ப்பாணத்துக் காட்சிகளை எடுத்து புகையிரதத்தின் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்தேன். அந்தக் காட்சிகள் சுடச் சுட வந்தன. இது மக்களுக்கு ஒரு ஆர்வத்தைக் கொடுத்தது. அவர்கள் தங்கள் ஊர்களைப் பார்க்கவும் தங்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் விரும்பினார்கள்.

3.   சத்தியாக்கிரகக் போராட்டத்தின் பொழுது நீங்கள் படமெடுத்தீர்களா? அப்போதைய அனுபவங்கள் என்ன?

சத்தியாக்கிரகப் போராட்டம் இராணுவத்தின் அடக்குமுறையோடு முடிவுக்கு வந்தது. தொடக்கத்திலிருந்தே நான் படமெடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் உடுகம ( இவர்தான் அப்போது யாழ்ப்பாணத்தின் தலைமை அதிகாரியாக இருந்தார்) வெளியே வந்தார். அப்போது கலவரம் முற்றியது. இராணுவத்தினர் எதிர்பாராத விதமாகத் தாக்குதல்களைத் தொடுத்தார்கள். தடியடிதான். சனங்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். நான் ஓடியோடிப் படமெடுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் இளைஞனல்லவா!

இதைப்பார்த்த உடுகம கமெராவைத் தரும்படி கேட்டார். நான் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உடுகம என்னுடைய கமெராவைப் பறிக்கும்படி படையினருக்கு உத்தரவிட்டார். அவர்கள் கமெராவைப் பறிக்க முயற்சித்தார்கள். நான் விடவில்லை. அந்த இழுபறியின்போது ஒரு கட்டத்தில் நான் கீழே விழுந்து விட்டேன். அவர்கள் கமெராவைப் பறித்துவிட்டார்கள். கீழே விழுந்த என்னைச் சப்பாத்துக்காலால் உழக்கினார்கள். என்னுடைய முகத்தில் சப்பாத்துக்காலை வைத்து நசுக்கினார்கள்.

இதனால் என்னுடைய ஒரு கண் வெளியே வந்து விட்டது. பின்னர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு என்னைக் கொண்டு போய்ப் போட்டார்கள். அங்கே வைத்தியம் செய்து கண்ணை உள்ளே தள்ளினார்கள். ஆனால் பார்வை போய்விட்டது.

அதற்குப் பிறது இந்த ஐம்பது வருசமாக ஒற்றைக் கண்ணோடுதான் படம் பிடிக்கிறேன். தொழில் செய்கிறேன். என்னுடைய கல்யாணம்கூட ஒற்றைக் கண்ணோடுதான் நடந்தது.

ஆனால், சத்தியாக்கிரகம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியது. அப்போது யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களும் இருந்தார்கள். அவர்களும் தமிழர்களைப் போலவே எல்லாவிசயத்திலும் ஆர்வமாக இருந்தார்கள். பத்திரிகைகளை வாசிக்கிற பழக்கம் வந்தபோது யாழ்ப்பாணத்தில் இருந்தே ஈழநாடு பத்திரிகையும் வரத் தொடங்கியது.

4. அப்படியென்றால், நீங்கள் அரச சார்பு பத்திரிகை நிறுவனமான லேக்கவுஸில் வேலை பார்த்தீர்கள். அவர்கள் இந்தப் பாதிப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

நான் என்னுடைய முறைப்பாட்டைக் கொடுத்தேன். அவர்கள் விசாரித்தார்கள். பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடைய கமெராவை உடைந்த நிலையில் காட்டினார்கள். கமெராவுக்கான நட்ட ஈட்டைத்தந்தார்கள். வழக்கு நடந்தது. பிறகு சைக்கிளை சேதமடைந்த நிலையில் நீதிமன்றத்திலிருந்து மீட்டெடுத்தேன்.

5. அப்போது என்ன கமெராவைப் பயன் படுத்தினீர்கள்?

ஆரம்பத்தில் ஜேர்மன் தயாரிப்புக் கமெராக்கள்தான் அதிகமாகப்புழக்கத்தில் இருந்தன. நான் றொலி கோட் என்ற கமெராவைப் பயன்படுத்தினேன். அந்த வகைக் கமெராவை இப்போதும் நான் வைத்திருக்கிறேன். பிறகு றொலி பிளாக்ஸ் என்றொரு கமெராவை வைத்திருந்தேன். அதுவும் ஜேர்மன் கமெராவே. ஆனால் பாவனையில் இப்பொழுது அதெல்லாம் கிடையாது. அதற்கு இப்போது அதிக செலவுமாகும்.

இந்தக் கமெராக்களினால் எத்தனையோ ஆயிரக்கணக்கான படங்களைப் பிடித்திருக்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகள், எத்தனையோ கூட்டங்கள், எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ மனிதர்கள், எத்தனையோ இடங்கள், எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள்… (எல்லாவற்றையும் நினைவு கூர்வதாக எங்கோ வெறித்துப் பார்க்கிறார்).

6. சரி, உங்கள் இளமைக்கால யாழ்ப்பாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

எல்லோமே நினைவில் இல்லை. எனக்கு இப்பொழுது கொஞ்சம் மறதி அதிகம்.

அப்பா கொழும்புக்கு வந்தபோதும் அம்மா தமிழ் நாட்டில்தான் இருந்தா. நான் பிறந்த சேதியை கடிதம் மூலமாகவே அப்பாவுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது இந்த மாதிரி தொலைபேசி வசதிகள் எல்லாம் கிடையாது. பிறகுதான் அம்மா கொழும்புக்கு ‘டிங்கி’யில் வந்திருக்கிறா.

கொழும்பில் இருந்த எங்கள் குடும்பம் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. அதுக்குக் காரணம் யுத்தம்தான். அப்பொழுது இரண்டாம் உலகப் போர் நடந்தது. யப்பான்காரன் கொழும்புக்குக் குண்டு போடுவான் என்ற பயத்தில் அப்பா குடும்பத்தை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் அப்போது சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தன. நாங்கள் நகரத்தில் இருந்ததால் இந்தப் பிரச்சினைகளில் அதிகமாக மாட்டிக் கொள்ளவில்லை. அத்துடன், நாங்கள் நகை செய்யும் தொழிலோடு இருந்ததால் அதிகமாகப் பிரச்சினைகள் வரவில்லை. என்னுடைய திருமணம் கூட சாதிப்பிரச்சினையால் நின்றது. அதாவது நான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்யவில்லை. அதற்குச் சாதி தடையாக இருந்து விட்டது.

ஆனால், அந்த நாளில் யாழ்ப்பாணத்தில் பல சண்டியர்கள் இருந்தார்கள். அதிலும் நகரத்தில் அவர்களின் சண்டித்தனங்கள் அதிகமாக இருந்தது. இனப்பிரச்சினை போர் என்று வந்த பிறகு சண்டியர்கள் இல்லாமற் போய் விட்டது.

யாழ்ப்பாணத்து மக்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் படிப்பாளிகளாவும் இருந்தார்கள். நான் பானை சட்டி செய்வோர், நகை செய்வோர், புடவை நெசவு செய்வோர் போன்றோருடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். அப்பொழுது மக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் உள்ளுரிலேயே செய்தார்கள். வெளியூரிலிருந்து பொருட்கள் வருவது குறைவு. ஆனால் சாதிப்பிரச்சினை அதிகமாக இருந்தது. இதனால் பல கெட்டிக்காரர்கள் படிக்க முடியாமல் தவறிப் போனார்கள்.

இதைவிட திருவிழாக்களைப் பற்றிச் சொல்ல வேணும். அப்போது சின்னமேளம் என்ற சதுர்க்கச்சேரி இருக்கும். மேளச்சமா இருக்கும். வில்லுப்பாட்டு, கதைப்பிரசங்கம் எல்லாம் இருக்கும். இந்தியாவிலிருந்து கூட ஆட்கள் வருவார்கள். யாழ்ப்பாணத்தில் அப்போது கொடிகட்டிப்பறந்த நடிகர் தியாகராஜ பாகவதர்தான். அவர் யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார். யாழ்ப்பாணத்துக்கு எம். ஜீ. ஆரும் சரோஜாதேவியும் வந்தபோது நான் படமெடுத்தேன.

7. தமிழராய்ச்சி மாநாட்டினை நீங்கள் எப்படிப் பதிவு செய்தீர்கள்?

நான் முறையாகப் பதிவு செய்து செய்தியையும் படங்களையும் அனுப்பிக் கொண்டிருந்தேன். இறுதிநாள் நிகழ்வின்போதுதான், பிரச்சினை நடந்தது. அப்போது நானும் இன்னொரு நண்பருமாக தேநீர் குடிப்பதற்காக கடைக்குப் போயிருந்தோன். அந்த நண்பருக்குப் புகைபிடிக்கும் வழக்கம் இருந்தது. அதனால் சற்று நேரம் கடையில் நின்றோம். அந்த நேரத்தில்தான் கலவரம் நடந்தது. சம்பவ இடத்தில் நாங்கள் நிற்கவில்லை என்றாலும் அதற்கு அருகில் நின்றதால் பல படங்களைப் பதிவு செய்தோம்.

ஆனால், சிக்கலுக்குள் நான் மாட்டிக்கொள்ளவிலலை. அதனால் பெரும்பாதிப்புகள் எனக்கு ஏற்படவில்லை.

8. வேறு என்னமாதிரியான நிகழ்வுகளில் நீங்கள் முக்கியமான பங்கை ஏற்றிருக்கிறீங்கள்?

பிறகு வந்த காலங்கள் எல்லாமே யாழ்ப்பாணத்தில் பிரச்சினைதான். படத்தைப் பிடித்தாலும் பிரச்சினை. பிடிக்காவிட்டாலும் பிரச்சினை. தேர்தற்காலங்களில் பல அரசியல் தலைவர்களையும் படம் பிடித்திருக்கிறேன். நான் சந்திக்காத தலைவர்களே இல்லை. தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயத்தை, ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் கார்த்திகேசன் மாஸ்டரை, வி. பொன்னம்பலத்தை, எழுத்தாளர்களான டானியலை, டொமினிக் ஜீவாவை என்று நான் படம் பிடிக்காத பிரபலங்களே யாழ்ப்பாணத்தில் இல்லை. இதைவிட யாழ்ப்பாணத்தில் 1958 இல் தாக்கிய சூறாவளியின் அழிவுகளை, பிறகு ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளை… இப்படி எல்லாவற்றையும் படமாக்கியுள்ளேன். கடந்த 2008 இல் வீசிய சூறாவளி அழிவைக்கூட படம் பிடித்திருக்கிறேன்.

பிறகு போர்க்காலம். யாழ்ப்பாணத்துக் கடைகள் எரிந்தன. ஈழநாடு காரியாலயம் எரிந்தது. யாழ்ப்பாண நூலகம் எரிந்தது.  எல்லாவற்றையும் படமாக்கினேன். பிரச்சினைகளைப் படம் பிடிப்பது என்றாலே பிரச்சினைதான். விடுதலைப் புலிகளை, வேறு இயக்கங்களின் நிகழ்ச்சிகளை என்று நான் எப்போதும் மக்களுக்குரியதை வெளிப்படுத்த படமாக்கியிருக்கிறேன். ஆனால் நான் தொழிலைச் செய்து கொண்டேயிருந்தேன்.

சில சம்பவங்கள் முக்கியமாக இருக்கின்றன. அவை பல. ஆனால் எனக்கு எல்லாம் இப்போது உடனடியாக ஞாபகத்துக்கு வரவில்லை. ஒருமுறை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர் இரும்பு மனிதன் என்ற நாகநாதனுக்கும் எனக்கும் பிரச்சினை வந்தது. அவர் கட்சியில் உள்ள யாருடனோ வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கை கலக்கும் நிலைக்கு வந்தது. அப்போது அந்தக் காட்சியை நான் படமாக்கிக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்த நாகநாதன் என்னுடைய கமெராவைப் பிடுங்கினார். நான் கொடுக்க மறுத்தபோது பிரச்சினை வந்தது. கடைசியில் அவர் அதைப் பறித்து விட்டார்.

உடனே நான் என்னுடன் வைத்திருந்த அடுத்த கமெராவினால் படம் பிடித்தேன். இது நடந்தது உடுவிலில்.

9.   நீண்டகாலமாகவே பத்திரிகைப் படப்பிடிப்பாளராக இயங்கி வந்திருக்கிறீங்கள். ஆனால், பத்திரிகை அலுவலகத்தில் எதற்காகப் பணியாற்ற முயற்சிக்கவில்லை?

எனக்குப் படிப்புக்குறைவு. ஆனால், படம் பிடிக்கும் திறமை இருந்தது. படிப்புக் குறைவு என்றபடியால் அலுவலகத்துக்குப் போக நான் விரும்பவில்லை. என்னுடைய திறமையை இனங்கண்டு படப்பிடிப்புக்குச் சந்தர்ப்பம் தந்தார்கள். நாற்பது ஆண்டுக்கு மேலாக யாழ்ப்பாணத்தின் முதற்தரப் படப்பிடிப்பாளராக என்னை லேக்கவுஸ் வைத்திருக்கிறது. இடையில் சிலகாலம் உதயன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளுக்கும் படங்களைப் பிடித்திருக்கிறேன். அதற்கு முன்னர் ஈழநாடு பத்திரிகைகூட என்னிடம் முக்கியமான சில படங்களைக் கேட்டுப் பிரசுரித்திருக்கிறது.

அலுவலகத்தில் வேலை செய்வதற்கு அந்த நாளில் 180 ரூபாய்தான் மாதச் சம்பளமாகக் கொடுப்பார்கள். ஆனால், நான் வெளியே படப்பிடிப்பிலும் செய்தி சேகரிப்பிலுமாக 500 ரூபாய்க்கு மேல் உழைப்பேன். அப்போது நான் சொந்தமாக ஒரு கார்கூட வைத்திருந்தேன்.

பலர் தங்கள் படங்களைத் தேடி என்னிடம் வந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து கூட கேட்டு எழுதியிருக்கிறார்கள். நான் பிடித்த படங்கள் இன்று வரலாற்று ஆவணங்களாகியிருக்கின்றன. இதுவரையில் லட்சத்துக்கும் அதிகமான படங்களைப் பிடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். பெரும்பாலன படங்கள் பத்திரிகைகளின் வாயிலாக பல ஆயிரக்கணக்கானவர்களின் பார்வைக்குப் போயிருக்கிறது. ஆனால் எண்ணிக்கையை நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை.

அப்பொழுது திறமைக்கு இடமளித்தார்கள். திறமையானவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.

10. யாழ்ப்பாண இடப்பெயர்வின் போது நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்தப் பதிவு உங்களிடம் இல்லையா?

நானும் இடம்பெயர்ந்தேன். அப்போதுகூடப் படங்களைப் பிடித்தேன். ஆனால், பின்னர் உருவாகிய தொடர்பில்லாத நிலைமைகளால், படங்களை கொழும்புக்கு அனுப்ப முடியவிலலை. யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளுக்கு மட்டும கொடுக்க முடிந்தது. பிறகு அப்படியே வன்னிக்குப் போய் விட்டேன். வன்னியிலிருந்தும் கொழும்புக்கு படங்களை அனுப்ப முடியவில்லை. ஆனால் வன்னி நிலைமைகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது அங்கே இருந்த முக்கியமான பலர் என்னைத் தங்கள் நிகழ்வுகளுக்கு அழைத்துப் படம் பிடித்துக் கொள்வார்கள். முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் பிடித்திருக்கிறேன்.

பிறகு புரிந்துணர்வு உடன்படிக்கை வந்தவுடன் நான் மறுபடியும் யாழ்ப்பாணத்துக்கு வந்து  விட்டேன். அப்படியெ மீண்டும் லேக்கவுஸ_டன் தொடர்பும் கிடைத்து விட்டது. நானும் இன்னொருவரும் தான் பழைய மூத்த ஆட்களாக லேக்கவுஸில் வேலை பார்க்கிறோம். ஆனால் நான் ஒரு சுதந்திரப் படப்பிடிப்பாளர். கமெராதான் எனக்கு வாழ்க்கை.

11. இப்பொழுது என்னமாதிரியான கமெராவைப் பயன்படுத்துகிறீங்கள்?

இப்போது நான் வைத்திருக்கிற கமெரா யப்பான் சொனி ரகம். இதை என்னுடைய மகள் கொடுத்து அனுப்பியிருக்கிறாள். அவள் வெளிநாட்டில் இருக்கிறாள். ஆனால் அந்தப் பழைய ஜேர்மன் கமெராக்களையும் வைத்திருக்கிறேன்.

டீஜிற்றல் கமெரா என்றால் பத்திரிகைத் தொழிலுக்குச் சுலபம். ஆனால், முன்னைய கமெராவைப் போல படங்களைத் தரமாக எடுக்க முடியாது. இந்த டிஜிற்றலில் லாபமும் வசதிகளும் கூடுதலாக இருப்பதால் அதையே பயன்படுத்துகிறேன்.

12. உங்களின் கடந்த காலப் பதிவுகளை ஒரு அல்பமாகச் செய்து வெளியிடலாம் அல்லவா? இதைத் தவிர, இவ்வளவு நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் உங்களுக்கு ஏதாவது விருதுகள் கிடைத்திருக்கின்றனவா?

நான் பதிவு செய்யாத சம்பவங்களே இல்லை. ஆனால், அதெல்லவற்றையும் தேடி எடுக்க வேணும். அதுக்கு இப்போது என்னால் முடியாது. முன்னர் நாட்டு நிலைமைகள் இடந்தரவில்லை. இப்போது நான் இப்படி இயங்கிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இதை யாராவது பொறுப்பானவர்கள் செய்யலாம். அவர்கள் யாராவது முயற்சித்தால் நான் தகவல்களைத் தரமுடியும். அதாவது அவர்களுக்கு உதவவும் வழிகாட்டவும் முடியும்.

நீங்கள் சொன்னமாதிரி இந்தப் படங்களை எல்லாம் தொகுத்தால் நிச்சயமாக வடபகுதியின் 60 ஆண்டுக்கால வரலாற்றையும மக்களின் வாழ்க்கையையும் முக்கியமான தலைவர்களையும் பார்க்கலாம். புகைப்படங்கள் காலத்தின் சாட்சி என்று சொல்லுவார் ராஜப்பா. நான் காலத்தின் சாட்சியான ஒரு பணியைச் செய்திருக்கிறேன். இதில் பொய்க்கு இடமேயில்லை. உண்மைக்காக நான் நிறைய விலைகளையும் கொடுக்க வேண்டியிருந்தது

யாழ்ப்பாணத்தில் இருந்தபடியால் எனக்கு விருதுகள் கிடைக்கவில்லை. இதுக்குக் காரணம், யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் ஒரு தொடர்ச்சியையோ தொடர்புகளையோ கொடுக்கவில்லை. ஆனால், வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் பாராட்டியிருக்கிறது. அவர்களுக்குத்தான் என்னுடைய பங்களிப்பைப் பற்றியும் தெரியம். இங்குள்ள நிலைமைகளையும் தெரியும்.

எனக்கு எப்போதுமே சந்தோசம் தருகிற விசயம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய படங்களை மக்கள் பார்த்து வருகிறார்கள். அறுபது ஆண்டுகளாக நான் பத்திரிகைத் துறையில் தொடர்ந்தும் இருக்கிறென். எல்லா நெருக்கடிக் காலங்களிலும் நான் புகைப்படக்காரனாக நின்று எல்லாவற்றையும் பதிவாக்கி ஒரு சாட்சியத்தைத் தந்திருக்கிறேன். இது போதாதா சந்தோசமாக இருப்பதற்கு? எல்லாத்தையும் விட போட்டோ ஜேர்ணலிஸ்ற்றாக நானே இருந்திருக்கிறேன். என்னுடைய படங்கள் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழி ஊடகங்களிலும் வந்திருக்கின்றன.

13. லேக்கவுஸில் வேலை செய்திருக்கிறீர்கள். அது இலங்கை அரசின் சார்பு ஊடக மையம். ஆனால், கடந்த கால நடவடிக்கைகள் எல்லாம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக – இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக நடந்தவை. இதை எப்படி லேக்கவுஸ் பத்திரிகைகளில் வெளிப்படுத்தினீர்கள்?

நான் புகைப்படக்காரன். எரிந்தால் எரிந்தது என்று படம் பிடித்து அனுப்புவேன். விழுந்தால் விழுந்தது என்று படத்தைப் பிடித்துக் கொடுப்பேன். புகைப்படம் என்பது பதிவு. அது ஒரு சாட்சி. ஆகவே நான் படத்தைப் பிடித்து அனுப்பி விடுவேன். அவர்களும் அதை எப்படியோ பிரசுரித்துத்தான் ஆகவேணும். ஆனால், அந்தப் புகைப்படத்துக்குச் செய்தியை எழுதுகிறவர் சிக்கல் பட்டிருக்கிறார். இதை அவர்களே எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். நீ படத்தைப் பிடிச்சு அனுப்பிப் போடுவாய். நாங்கள் அதுக்குச் செய்தி எழுதேலாமல் கஸ்ரப்படுகிறம் என்று. ஒரு புகைப்படக்காரன் பொய் சொல்லவேண்டியதில்லை என்பதே என்னுடைய கருத்து, இது என்னுடைய அனுபவம்.

Advertisement

Comments are closed.