மூனுக்காறென்ற முறையான
அளவில் வெட்டப்படும்
உன்னைக் கேட்காமல்
உனக்கொரு வீடு
கட்டப்படும்!
பளிங்கு மாளிகை
பல இருந்தாலும்-இறுதியில்
பதுங்கும் குழி
சவக்குழி!
கதவு யன்னல் கிடையாது
பூட்டும் வீடு திறக்காது
சாவி இல்லாத வீடு
காற்றும் புகாத வீடு!
எறும்பண்டாத
எண்சாண் உடம்பை
மண்ணும் கறையானும்
மாறி மாறி உண்ணும்!
உண்ணும் பிராணியாய்
உயிர் வாழ்ந்தவன்
உண்ணும் உணவாய்
உள்ளே கிடக்கிறாய்!
ஆட்டமாய் ஆடி
அடங்கிய பின்
கூட்டமாய் வந்து அடக்கிட
வந்திடும் அமைதி
அது தான் சமாதி!
உள்ளே வைத்த பின்
விரைந்து மூடுவது
எழுந்திருப்பாய் என்பதற்கல்ல
வந்த நாங்கள் விரைந்து செல்ல!
வெளிப் பார்வைக்கு
எமக்குள் அமைதி
உள் மானதில் எமக்கு
என்ன குமுறலே?
நாயும் நரியும்
காகமும் ஆந்தையுமே உனது சுற்றமாகும்
உறவுகள் பற்று அங்கே
குற்றம்மாகும்!
வழியனுப்ப வந்தவர்களும்
வருவார்கள் இங்கே
வருந்தாமல் நீ செல்லு முன்னே
வருகின்றோம் உனக்குப் பின்னே !
இக் கவிதை அமரர் சரவணமுத்து சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக வரையப்பட்டது.