சிங்கம் மாஸ்டர் நினைவுகள் அழிவதில்லை- யோகன்

singam-masterதும்பைப்பூ நிற உடையும்
அம்பைப்போல் வேக நடையும்
இதழ்கள் குவிந்த புன்சிரிப்பும்
காலம் தவறாத கல்லூரி வரவும்
ஒன்றாய் அமைந்த ஒரு மாமனிதர்
எங்கள் ஆசான் சிங்க மாஸ்டர் .
சிங்கத்தார் என்று கேட்டால்
சிறு பிள்ளை கூட அவர் வீடு காட்டி விடும்
நான்கு தலை முறைகளுக்கு மேல்
நல்ல கல்வி கொடுத்த நல்லாசான்
கணித பாடங்களின் நெளிவு சுளிவுகளை
கவனமுடன் எடுத்துரைத்து
கற்பவர் அறிவுத்திறனை சிந்தையில் நிறுத்திய மகான் .
தேற்றங்கள் பாடமாக்கி
சொல்வதற்கு காத்திருப்போம் -அவர்
தோற்றத்தை பார்த்தவுடன்
மனதில் பல தடு மாற்றங்கள் வந்துவிடும்
அப்புறமென்ன அடிதானே எனக்கு
அடிக்கு பயந்து யாரோ சொன்ன
பொன்னொச்சி இலைபறித்து
அடி பொக்கெற்றில் வைத்திருந்தாலும்
அடுத்த நாளும் அதே கதைதான்
பதினாறு வரையும் வாய்ப்பாடு
பாடமாக்குவதே பெரிய பாடு
பதினாறில் இருந்து தலை கீழாக சொல்ல வேண்டும் என்றால்
என்பாடு அப்பப்பா அக்கப்பாடு
மூச்சை பிடித்து சொல்ல தொடங்கினால்
பேச்சை மாற்றி கேள்வி கேட்பார்
அப்புறமென்ன என் நிலை
சிதம்பர சக்கரத்தை பார்த்த கதை தான்
பூவுடன் சேர்ந்த நார்போல்
கார்வண்ண ஆசான் கல்வியும் -இன்று
கணக்கு பார்க்க கல்குலேற்றர் இல்லாமல் உதவுகின்றது
ஊதியத்திற்கு மேலாய் ஊழியம் பார்த்த உத்தமர்
உண்மைக்கும் நேர்மைக்கும்
ஊர்மக்களின் நற்பெயர் பெற்றவர்
உலக பந்தின் பல பாகங்களிலும்
உயர் பதவி களில் இருக்கின்றார்கள்
இவரிடம் கல்வி கற்றவர்கள் .
அயல் வீடு என்பதினால் ஆசானையும்
அவர் குடும்பத்தவரையும் நன்கறிவேன்
வள்ளுவன் வாசுகி வாழ்வியலை கண்டதில்லை
வாரும் போம் என்று வாஞ்சையுடன்
வாழ்ந்தவரை கண்டு மகிழ்ந்து இருக்கின்றேன்
அவர்கள் ஒருமையில் பேசி ஒருநாளும் பார்த்ததில்லை
பன்மையில் பேசியே பரவச படுத்துவார்கள் .
பூத்ததோர் வனமென பொழுது எல்லாம் -மகிழ்வுடன்
ஈட்டிய பொருளுடன் இன்பமாய் வாழ்ந்தவர்
வஞ்சகர்கள் செயலாலே வம்ச குல விளக்கு
வயல் வெளியில் இறந்து கிடந்த செய்தி சொல்ல
பதறி நான் சென்ற வேளை என்னிலை அறிந்து
எனை அனைத்து ஆறுதல் சொன்ன மனோதிடம் மிக்க
மாமனிதர் என் ஆசான் சிங்க மாஸ்டர் .
சிங்க மாமி என் பிள்ளைகள்
அவருக்கு வைத்த செல்ல பெயர்
மகனின் பிரிவுக்கு பின்
மனதளவில் சிறை வாழ்க்கை
வெளி இடங்களுக்கு போவதை முற்றாகவே தவிர்த்து விட்டார்
பக்கத்து வீட்டு என் பிள்ளைகளை பார்க்க
எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருவார் -இது
என் ஆசானுக்கு தெரியும்
எல்லா நாட்களை போல்தான்
அந்த நாளும் புலர்ந்தது
எழுதி வைத்த கடிதத்தை அனுப்புவதற்கு
ஏறிச்சென்ற துவிச்சக்கர வண்டி
கேணிக்கரை வைரவர் கோவில் தாண்டு முன்பே
பட பட வெடி சத்தம் பக்கத்தில் கேட்டதுமே
கிட்டங்கியில் வந்து நின்றார் சிங்க மாஸ்டர் .
மாஸ்ரரை வழியனுப்ப வெளியே வந்த சிங்கமாமி
வாசல் கதவினை சாத்தி விட்டு
கறி சமைக்க கறி வேப்பிலை பறிப்பதற்கு வந்துவிட்டார்
பதட்டம் சற்று குறைந்தவுடன்
பதை பதைத்து வீடு வந்த சிங்க மாஸ்ரர்
இஞ்சரும் இஞ்சரும் என அழைத்து
வீடெல்லாம் தேடி விட்டார்
ஓமோம் ஓமோம் என்ற வார்த்தை
ஒரு போதும் அவர் கேட்கவில்லை
வீட்டில் அவ இல்லை என்றால்
அவ செல்லும் ஒரே இடம்
பக்கத்து யோகன் வீடு தானே
யோகன் யோகன் என அழைத்த சிங்க மாஸ்டர்
அவ அங்கு இல்லை என அறிந்ததுமே
அயல் வீட்டு தம்பியை அழைத்து செல்கையில்
கூட்டிச் சென்ற தம்பியோ கூர்ந்து வளவை பார்க்கையில்
முன் காணி பகுதியில் யாரோ படுத்திருக்க
மாஸ்ரர் இங்கே வாங்கோ என
வாய்விட்டு கூவி அழ
கைகளில் கரு வேப்பிலை
கண்மூடிப் படுத்திருந்தார் சிங்கமாமி
கறி வேப்பிலை கை பறிக்கும் வேளை தானோ
பட பட என வெடி வெடிக்க வேண்டும்
பாய்ந்து வந்த குண்டொன்று
மாமர கிளையில் பட்டு அவர் மார்பினை துளைக்க
யாருக்கோ வைத்த வெடி
இவர் உயிரை குடித்ததுவே -இதை
விதி என்பேனா
விண்ணவர் தலைவன் செய்த சதி என்பேனா
எத்தனை பெரிய சோகங்கள்
எத்தனை பெரிய இழப்புக்கள்
அத்தனையையும் ஒரே ஆளாய் நின்று
தன் பிள்ளைகளை ஆற்றி தான் உருகிய
அதிசய மகான் என் ஆசான்
இன்று அவர் எம்முடன் இல்லை என்றாலும்
அன்று இவர் ஏற்றி வைத்த அறிவுத்தீபம்
நன்று ஒளி பரப்பி நானிலமெங்கும்
நம் ஊர் மக்களை பெருமை கொள்ள வைக்கின்றது
ஓம் சாந்தி
என்றும் என் ஆசானின் நினைவுகளுடன்
இளைய தம்பி யோகேந்திரன் ,நோர்வே .

Advertisement

Comments are closed.