த.சபாபதிப்பிள்ளை நொத்தாரிசு

அளவெட்டி வடக்கிலுள்ள கொட்டடியென்னும் குறிச்சியில் வாழ்ந்த தம்பர் என்பாருக்கு மூத்தமகனாகப் பிறந்தவர் சபாபதிப்பிள்ளை. இவருக்கு உபாத்தியாயர்களாக இருந்தவர்கள் சரவணமுத்துசண்முகம் என்னும் இருவராவர். இவர்கள் புராணபடனத்தில் மட்டுமன்றிக் கவி பாடுதலிலும் வல்லவராகவிருந்தார்கள். சபாபதிப்பிள்ளை அவர்கள் அளவெட்டியில் பிரபல நொத்தாரிஸ் ஆக இருந்தவர். அக்காலத்தில் சட்டத்தரணியாக இருந்தோர் ஆங்கிலத்தில் உறுதி யெழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தமிழில் உறுதியெழுதுவதானால் பாலபண்டித பரீட்சையிற் சித்தியடைந்திருக்க வேண்டுமென்னும் கடப்பாடும் அன்று இருந்தது. தமிழ் நொத்தாரிஸ் ஆக இருந்த சபாபதிப்பிள்ளை அவர்கள் பாலபண்டித பரீட்சையிற் சித்தியடைந்தவரா என்பது தெரியவரவில்லையாயினும் அவர் பாலபண்டிதத்துக்குக் குறையாத அறிவு பெற்றவராயிருந்து நொத்தாரிஸ் எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்திருக்கலாம். எப்படியாயினும் அவர் பால பண்டிதத்துக்குக் குறையாத தமிழறிவு பெற்றிருக்கிறார் என்பது நிச்சயமே.

சபாபதிப்பிள்ளை எவரிடங் கல்வி கற்றாரென்பது தெரியவில்லை. உயர்கல்வியை இவர் சுன்னாகத்திலிருந்த இலக்கணகொட்டர் முருகேசு பண்டிதரிடங் கற்றிருக்கலாமென எண்ணத் தோன்றுகிறது. பன்னாலை சிவா னந்தையரிடமும் இவர் கல்வி கற்றிருக்கலாம். எப்படியாயினும் சிறந்த தமிழ்ப் புலவர் என்பதற்கு இவருடைய பாடல்கள் சான்றாக உள்ளன. அளவெட்டி முதலிய வேள் ஆலயம், அளவெட்டி கும்பழாவளை விநாயகர் ஆலயம் என்பவற்றுக்கு இவர் ஊஞ்சல் பாடிக் கொடுத்தி ருக்கிறார். கும்பழா வளை ஸ்ரீ சுப்பிரமணியர் திருவூஞ்சலும் இவராற் பாடப்பட்டது. இன்னும் பல கோவில்களுக்கு இவர் ஊஞ்சல் பதிகம்,தோத்திரப் பாமாலை என்பன பாடிக் கொடுத் திருக்கலாம். ஆனால் அவை எழுத்தில் உறுதி செய் யப்படவில்லை.

கும்பழாவளை விநாயகர் பதிகம் என்றொரு பதிகமும் சபாபதிப்பிள்ளை இயற்றியுள்ளார். இப்பதிகமும் கும்பழாவளை விநாயகர் தோத்திரதிரட்டு என்னும் நூலில் வெளிவந்திருக்கிறது. அதில் இப்பதிகத்தைச் சதகம் என்று பிழையாகக் குறிப்பிட்டுள்ளார்கள். கும்பழாவளை விநாயகர் சதகமொன்று கும்பழாவளை விநாயகர் தோத்திரமாலை என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இந்தச் சதகத்தைப் பாடினார் யாரென்பது தெரியவரவில்லை. நூலில் விநாயகர் தொண்டன் இ. வேதாரணியரின் மூதாதை அவர்களாற் பாடப்பெற்றது என்று மட்டும் காணப்படுகிறது. இச்சதகத்திலும் சிதைவுற்றிருந்த பாடல்களைத் திருத்தியும் முற்றாகச் சிதைந்தவற்றிற்கு மாற்றீடாகப் பாடல்களை இயற்றியும் அச்சேற்றக் கொடுத்தவர் சபாபதிப்பிள்ளை அவர்களேயென்பது அறியவந்துள்ளது.

சபாபதிப்பிள்ளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் அளவெட்டி நாடகத்துறையில் மகிமை படைத்ததாயிருந்ததென்பது புலனாகிறது. மதனகாமன் நாடகம், பதிவிரதை நாடகம், ஏழுபிள்ளை நல்ல தங்காள் நாடகம், கண்டியரசன் நாடகம், பூதத்தம்பி நாடகம் என்பன அக் காலத்தில் அண்ணாவிமாராக இருந்த அண்ணாவி தம்பர், அண்ணாவி வயித்தி என்போரால் மேடையேற்றப்பட்டனவென்பது முதியோர் வாய்கேட்ட செய்தியாகும். சபாபதிப்பிள்ளை அவர்களும் நாடகங்களை இயற்றியிருப்பதாக தெரிகிறது. அவரியற்றிய குலோத்துங்கன் நாடகம் அவர் காலத்தில் மேடையேற்றப் படாமல் அவர் அமரத்துவமடைந்தபின் மேடை யேற்றப்பட்டது. இக்கதை திருவிளையாடற் புராணத்தில் பழியஞ்சிய படலத்தில் வருவது இது திருவிளையாடற் புராணத்தில் இருபத்தைந்தாவது படலமாகும்.

இக்கதையில் வரும் பிணக்கு ஒரு பிராமணனுக்கும் வேடனுக்கும் உரியது. பிராமணன் தன் மனைவியைக் கொன்றவன் வேடன் என்று வாதிட வேடன் அதை மறுத்துரைத்தான். வேடனது முகக்குறிப்பால் வேடன் சொல்வது பொய்யாயிருக்க முடியாதென நம்பி அரசன் பழிக்கஞ்சி ஆலவாய்ப் பெருமானிடம் முறையிட அவர் அரசனையும் பிராமணனையும் ஒரு விவாக வீட்டுக்கு வரும்படி அசரீரி மூலம் அழைத்துப் பிராமணனின் உண்மையை அறிந்து கொள்ள உதவினார் என்பதே கதைச் சுருக்கமாகும். இக்கதையை நாடக பாதையில் எழுதி உதவியவர் சபாபதிப்பிள்ளை அவர்கள். அக்கால வழக்கப்படி ஒவ்வொரு பாத்திரத்துக் கும் ஏற்றவகையில் பாட்டும் வசனமும் அமைத் துக் கொடுத்தார். இந்நாடகம் அளவெட்டி முதலியவேள் ஆலய வளவில் ஆலயத்துக்குத் தென்புறமாக மேடையமைத்து நடாத்தப்பட்டது. இந்த நாடகத்தில் நடித்த பலர் தாம் பெற்ற பாத்திரப் பெயரால் அழைக்கப்பட்டார்கள். அவர்களிறந்த பிறகும் அவர்களைச் சுட்டிப் பேசும் போது அவர்கள் இயற்பெயருக்கு முன் அவர்கள் நடித்த பாத்திரப் பெயரே முன்வைத் துப் பேசப்படுகிறது. நாடகச் சிறப்புக்கு இந்த மதிப்புரையை வழங்கியோர் மக்களே.

இவருடைய பக்திப் பாடல்களின் சிறப்பை எடுத்துக்காட்ட அவரியற்றிய கும்பழாவளை சுப்பிரமணியர் திருவூஞ்சலில் இருந்து ஒரு செய்யுள் காண்போம்.
“கந்தவரை தணிகையிரு தூண்களாக
கதிர்விடுபொற் பரங்குன்று விட்டமாக
சந்தமுறு நான்மறை நான் வடங்களாக
சார்ந்துவரு மாகமநூல் விதானமாக
மந்தகடாட் சரப்பலகை யேறியெங்கள்
முன்னுறுகும் பழாவளையில் எழுந்தருளி
அந்தம் முத லறிவரியிர் ஆடீரூஞ்சல்
அம்மையர்க ளிருவரொடு மாடீரூஞ்சல்”

இச் செய்யுளின் ஓசைச் சிறப்பு இலக்கண அமைதி யென்பன இவர் ஒரு மரபுக் கவிஞர் என்பதை வெட்ட வெளிச்சமாக எடுத்துக் காட்டுகின்றன.

பண்டிதர்.க.நாகலிங்கம்

Advertisement

Comments are closed.